Sowdambiga

தேவாங்க புராணம்

நன்றி:
திரு ம. இராமச்சந்திர செட்டியார்,
நாவலரின் தேவாங்க புராணம்,
திரு. க. பழனிச்சாமி புலவர்,
சேலம் சேக்கிழார் கொ.அ. அப்பாய் செட்டியார்
மற்றும்
வைணவக்கடல் புலவர் மா.கிருஷ்ணமூர்த்தி.

தேவலர் தோற்றம் :

மறைமுடிவாய் விளங்கும் சிவபெருமானின் புகழெலாம் திரண்டு ஒன்றாகி, அடியவர்கள் விரும்பும் வீடுபேற்றை அருளும் திருக்கயிலை ஒளிபெற்று விளங்கியது.

இதில் கோடி சூரியப் பிரகாசமாய்ப் பொன்னாலும் மணியாலும் ஆன அரியாசனத்தில் அம்மை அப்பர் கொலு வீற்றிருந்தனர். அப்போது தேவர், அசுரர், கந்தருவர் வித்தியாதரர் கின்னரர் இயக்கர் முனிவர் சித்தர் நாகர் கிம்புருடர் முதலியோர் சூழ்ந்திருந்து பெருமானைப் போற்றி இசைத்த புகழ் ஒலி எங்கும் பரவ ஒலித்துக் கொண்டிருந்தது.

முற்றுந் துறந்த முனிவர்கள் பலர் ஐம்புலனும் அகத்தடக்கி ஆங்காங்கு அமர்ந்து தவஞ்செய்து கொண்டிருந்தனர்.

படிவோர் பாவங்களை அறவே அறுக்கும் புண்ணிய தீர்த்தங்களும், அழகிய மலர் வாவிகளும் நிரம்பி இருந்தன. இவற்றின் இடையே முனிவர்கள் நீராடித் தவஞ் செய்வதற்கேற்ற புஷ்கரதீர்த்தம் என்னும் சுனை இருந்தது. நித்திய கருமங்களை முடித்துக்கொண்டு நைமிசாரண்ய முனிவர்கள் சுனையின் கரைமீது அமர்ந்திருந்தனர். அப்போது அங்கே சூத முனிவர் வந்தார். வந்தவரை முனிவர்கள்வரவேற்று உபசரித்து. அவரிடம் பிரம்மாண்ட புராணத்தில் உள்ள தேவாங்க முனிவரின் புண்ணிய சரிதத்தை கூரியருளுமாறு வேண்டினர்.

சூத முனிவரும், ' கேட்பவர்கள் பாவத்தைப்போக்கி வீடுபேறளிக்கும் புண்ணிய சரிதமாகிய தேவல முனிவரின் சரிதத்தைப் பயபக்தியுடன் கேட்பீர்களாக ' என்று கூறிச் சரிதத்தைச் சொல்லத் தொடங்கினார்.

கயிலையில் சிவபெருமான் அம்மையுடன் கொலுவீற்றிருந்தார். உலகைப் படைக்கத் திருவுளம் பற்றினார். அருகிருந்த அம்மையை நோக்கினார். அப்போது அன்னைபராசக்தி ஒளிவடிவாக முக்குணவடிவில் தோன்றினார். உடனே ரஜோகுணத்தில் பிரம்மாவும் சத்துவகுணத்தில் திருமாலும் தமோகுணத்தில் உருத்திரனும் தோன்றினர். மூவருக்கும் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில்களை முறையே செய்யும் பணியைச் சிவபெருமான் அளித்தார்.

பிரம்மதேவன், திருவருளின் துணையால் செடிமுதற் கொண்டு மனிதன் ஈறாக உள்ள பல்வேறு மநுவையும் படைத்தார். மநு என்னும் இம்மன்னன் எல்லாரும் உடுக்கும்படியாக ஆடைகளைக் காம்பிலி நகரிலிருந்து தயாரித்து அளித்து வந்தான்.

செய்து வந்த அருட்தொண்டின் சிறப்பாலும் தவம் பொறை கருணை மூதறிவு சினமின்மை முதலான நற்குணங்கள் உடையவராய் இறைவனை எல்லையில்லா பக்தி பூண்டு வழுத்தி அருச்சித்து வந்ததாலும் இவர் பிறவிக்கு ஏதுவாகிய வினைமுற்றிலும் நீங்கப்பெற்றுத் திருவருளுக்கு உரியவரானார். உரிய காலத்தில் திருவருட்டுணை கொண்டு சிவனடி சேர்ந்தார்.

" அனைய வன்பெருந் தவம் பொறை கருணைமூ தறிவு சினம கன்றபற் பலகுணத் தெவரினுஞ் சிறந்துன் மனமு வந்திட வழுத்தியர்ச் சித்த தான் மயக்க வினைத விர்ந்தசா யுச்சியமாம் பதத்தின் மேவினனால் "

மநுவுக்குப் பின் ஆடைகளை நெய்து அளிப்பாரின்ரி தேவர்களும் மக்களும் மிகுந்த வருத்தத்தோடு இலைகளையும் தழைகளையும் மரவுரியையும் அணிந்து மானங்காத்து வந்தனர். இது யாவருக்கும் பெருங்குறையாயிருந்தது. அதனால் தேவர்கள் யாவரும் ஒன்று கூடி தங்கள் குறையை முறையிட்டுக்கொள்ள பிரம்மாவுடன் திருக்கயிலை அடைந்தனர். சிவபெருமானை அணுகி ஆடையில்லாமல் தாங்கள் படும் அவதியை எடுத்துக் கூறினர். தேவர்களின் குறைகேட்ட சிவபெருமான் யாதும் பேசாது மௌனந் தாங்கினார். அப்போது அவர் உள்ளத்தினின்றும் தேவர்கள் போற்ற காரிருள் ஓட்டும் முழுமதியன்ன ஒரு பேரொளி தோன்றி அது இமைக்கும் நேரத்தில் ஒரு ஆண் உருப்பெற்று நின்றது.

இவ்வாறு ஆணழகனாக நின்ற அவன், தனது அகன்ற மார்பில் முப்புரி நூலும், அங்கங்களில் திருநீறும் கண்டிகையும், கரத்தில் கமண்டலமும், விரலில் பவுத்திரமும் தாங்கி நின்றான்.

தேவர்கள் துயர்துடைக்க வந்த இவன் பொறுமை மாதவம் புண்ணியம் கருணை நல்லறிவு உறுதி நீதி பேரின்பம் உண்மை புகழ் ஒழுக்கம் சீலம் முதலான நற்பண்புகளெல்லாம் ஒன்றாய்த் திரண்ட ஒரு உருவாய் இருந்தான்.

இவன் அரும் பெரும் கலைகளுக்கெல்லாம் கடல் போன்றவன். சிவபக்தியிற் சிறந்தவன். இத்தகைய குண நலங்களெல்லாம் ஒருங்கே பெற்று குணக்குன்றாய் நின்ற இவன் சிவபெருமான் திருவடிகளில் பணிந்திறைஞ்சி தலைமேல் இரு கைகூப்பி

பாலலோசனா பழமறைக் கரியபொற் பாதா சீல மாமுனி வராரி யயன்பல தேவர் கோல மார்தரு சராசர மனைத்துமுன் கொடுத்த மூல காரண நிர்விகா ரத்தினி முதலே

பருவ மாமுகில் பொருகருங் குழலுமை பாகா வொருவ ராயினு முனர்வதற் கரியபே ரொளியே இருளுறவகை எனைஅரு ளாலெடுத் தாண்ட குருப ராவுயிர் தொருநிறை குணப்பெருங் குன்றே

மனைமு தற்பல மயலிடைச் சுழன் ருபுன் மாயை வினையி ருட்கடல் படிந்தவர் தமக்கெதிர் மேவா உனைய டுத்துநின் னுளத்தொடு கலந்தினி துறையும் எனைநி னைத்துவே றழைத்தகா ரணமெவ னெந்தாய்

அடுத்த பஞ்சபூ தங்களாற் சமைத்தவிவ் வாகம் எடுத்த லைந்துமூ தறிவினைத் துறந்தபே ரின்பந் தடுத்து நொந்திடர்க் கடற்படிந் திடமனஞ் சகியேன் தொடுத்த செஞ்சுடர் மணியர வணிபுனை தூயோய்

என்று வினயமாய்ப் பணிந்து நின்றான்.

அதற்குப் பெருமான் புன்னகை பூத்தவண்ணம் ' இவ்வுலகுக்கு நீ செய்யவேண்டிய அரும்பணி ஒன்று உளது. அதற்காகவே உன்னை அழைத்தோம்; வருந்தாதே. நீ ஆறு பிறவிகள் எடுத்து உலக இன்பங்களை நுகர்ந்து புகழ் பெற்று ஏழாம் பிறவியில் வீடுபேறு அடைவாய். இப்போது நீ தேவலன் என்னும் பெயரைப் பெறுவாய். நீ திருமாலிடம் சென்று அவர் உந்திக்கமலத்தில் உள்ள நூலைப்பெற்று ஆடைகளை நெய்து அனைவருக்கும் அளிப்பாயாக. தேவர்களின் அங்கங்களை உன் ஆடைகள் அலங்கரிப்பதால் உனக்குத் தேவாங்கன் என்ற பெயரும் வரும். நீ ஆமோத நகரை ஆட்சி செய் ' என்று அருளினார். தேவலன் என்றால் தெய்வ வல்லமை உடையவன் என்பதும் பொருளாகும்.

தேவலர் வரம் பெறல் :

சிவபெருமானின் ஆணையை ஏற்ற தேவலன் அன்னையை அணுகி] அவர் அருள் வேண்டி நின்றான். அம்மையும் "நீ மேற்கொண்டுள்ள அரும்பணிக்கு பல இடர்கள் வரும். அப்போது என்னை நீ நினை. நான் தோன்றி உன் இடர்களைந்து உன்னைக் காக்கிறேன். "என்று ஆசி கூறி அனுப்பினார். தேவல முனிவன் திருவருள் துணைகொண்டு திருமாலிடம் சென்றான். பாற்கடலை அடைந்தான். அதனருகே தவஞ்செய்வதற்கேற்ற அழகான பூஞ்சோலை இருக்கக் கண்டான். அதில் மா,பலா முதலிய பழ மரங்களும், மல்லிகை முல்லை செண்பகம் போன்ற நறுமணங் கமழும் பூச்செடிகளும் நிரம்பி இருந்தன. அதனால் அதுவே தவத்திற்கேற்ற இடமெனத் தேர்ந்து அங்கு தங்கினான். அரவணை பள்ளிகொள்ளும் பரந்தாமனை நோக்கிப் புலனொடுக்கி ஒருமை மனதோடு பலநாள் கடுந்தவஞ் செய்தான். " அரிய ஐம்புல னலைவுற வகையமைத் தடக்கித் திரித குங்கறுத் தின்றிமேல் வழிமனஞ் சேர்த்துப் பரிதி வெங்ககி ராழியம் பரமனைப் பரவிப் புரிவ ரும்பெரு மாதவம் பலபகல் புரிந்தான் " தேவல முனிவனின் தவத்திற் கிணங்கி திருமாலும் முனிவன் முன் தோன்றி அவன் விரும்பிய தமது உந்திக் கமல நூலைக்கொடுத்து ஆசி கூறி அனுப்பினார். நூலைப் பெற்றுக்கொண்டு தேவலமுனிவன் திரும்பி வரும் வழியில் சம்புத் தீவில் கடற்கரை அருகில் மாய ஆசிரமம் ஒன்றைக் கண்டான். அங்கிருந்த தவசிகள் முனிவர் வேடம் தரித்த அரக்கர்கள் என்பதை இவன் அறியாது உள்ளே போனான். அங்கிருந்த கபட வேடதாரிகளின் தலைவனை வணங்கினான். அவன் தேவல முனிவனை வரவேற்று ' நீ யார்? பெயரென்ன? இவண் வந்த காரணம் யாது?' என்று கேட்டான். தேவலமுனிவன் வஞ்சகரின் கபட நெஞ்சை அறியாது தனது வரலாற்றையும் துணி நெய்யத் தான் திருமாலிடம் நூல் பெற்று வந்ததையும் கூறினான். இதைக்கேட்ட அக் கபட முனி ' அப்பனே! நீ மேற்கொண்டுள்ள அருட்பணி பெரிதும் போற்றுதற்குரியது. நீ மிகவும் களைத்திருக்கின்றாய். இன்று இரவு இங்கு தங்கி இளைப்பாறிப் போவாயாக ' என்று மொழிந்தான். முனிவனின் விருபத்திற் கிணங்கி அன்றிரவு அங்கு தங்கினான். தீயவர் உள்ளம் போன்று இரவு வந்தது. காரிருள் சூழ்ந்தது. தவச்சாலையில் தவவேடத்தில் இருந்த வச்சிர முஷ்டி, புகைமுகன், புகைக் கண்ணன், சித்திரசேனன், பஞ்சசேனன் என்னும் அரக்கர் தலைவர்களும் அவர்களுடைய துணைவர்களும் சுய உருக்கொண்டனர். வாள், வேல் முதலிய ஆயுதங்களை ஏந்தினர். தேவல முனிவனைக் கொன்று அவனிடமுள்ள நூலை அபகரித்துக்கொள்ள எண்ணி அவனைச் சூழ்ந்து கொண்டு துன்புறுத்தினர். தேவலன் திருமாலை உள்ளம உருக எண்ணித் துதித்தான். ஆபத் பாந்தவனாகிய பரந்தாமன் சக்கரப்படையை அனுப்பினார். வந்த ஆழிப்படையை தேவல முனிவன் அசுரர்கள் மீது ஏவினான். அப்படை அசுரர்களின் உடம்பைத் தலைவேறு கைவேறாக அறுத்துத் தள்ளியது. அறுபட்ட உடம்புகளிலிருந்து இரத்தம் சிந்தியது. சிந்திய இரத்ததிலிருந்து எண்ணில் அடங்கா அசுரர்கள் தோன்றி போரிட்டனர். அதனால் போரில் சக்கரப்படை இளைத்தது. அரக்கத் தலைவர்கள் ஐவரும் தேவல முனிவனைச் சூழ்ந்து கொண்டு மிகக் கடுமையாகத் தாக்கினர். இவர்களுடைய தாக்குதலுக்கு ஆற்றாது முனிவன் பெரிதும் தளர்வுற்றான். அந்நிலையில் முனிவன் அம்மையை எண்ணித் துதித்தான். உற்ற இடத்து உதவும் அம்மையும் கோடி சூரியப்பிரகாசம் பொருந்திய கீரிடம் தரித்தவராய் சிங்கவாகனத்தில் சூல பாணியாய்த் தோன்றினார். ஆணவங்கொண்ட அசுரர்கள் அம்மையையும் எதிர்த்துப் போரிட்டனர். அம்மையின் கீரிடத்தின் ஒளிபட்டுப் பலர் மயங்கி வீழ்ந்தனர். அம்மைக்கும் அசுரர்களுக்கும் பெரும் போர் நடந்தது. அப்போது அம்மையின் சூலப்படையால் தாக்குண்டு அசுரர்கள் வீழ அவர்கள் உடம்புகளிலிருந்து சிந்திய இரத்தத்தைச் சிங்கம் குடிக்க அசுரப்படைகள் யாவும் மடிந்தன. இவர்களின் தலைவர்கள் ஐவர் இறுதி வரைப்போரிட்டு முடிவில் அம்மையின் சூலப்படையால் தாக்குண்டு வீழ்ந்தனர். இவர்கள் குருதியில், முனிவன்தான் துணி நெய்யக் கொண்டு வந்திருந்த நூலைத் தோய்க்க அந்நூல் ஐந்து நிறங்களைப் பெற்றது. போரின் போது அசுரர்கள் சிந்திய இரு துளிகள் சிங்கத்தின் இருகாதுகளில் தங்கின. சிங்கம் தலையைக் குலுக்கவும் காதுகளிலிருந்த இரண்டு இரத்தத் துளிகள் பூமியில் வீழ்ந்தன. அப்போதே அவற்றிலிருந்து இரண்டு அசுரர்கள் தோன்றினர். அவர்களை அழிக்க அம்மை சூலத்தை ஏந்தவும் அசுரர்கள் இருவரும் தம்மைக் காத்து ரட்சிக்குமாறு முனிவனின் கால்களில் வீழ்ந்து வணங்கினர். முனிவனும் அவர்களுக்கு அடைக்கலம் தந்து அவர்களைக் குலப்பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டான். இவர்கள் தேவாங்க குலமக்களுக்குத் தொண்டு செய்யும் சிங்க குலத்தார் ஆயினர். இனி ஒளி பொருந்திய கீரிடத்தைத் தாங்கியிருந்ததால் அம்மை 'சவுடநாயகி' ஆனார். சௌடேஸ்வரியம்மன், நினைத்தபோது உதவிக்குவருவதாக தேவல முனிவனுக்கு வரமருளினார். மேலும், 'அமாவாசையன்று நீ அசுரர்களிடம் அகப்பட்டுக் கொண்டு என்னை உளமார நினைத்தாய். நானும் வந்து உன்னைக் காத்தேன். ஆதலால் இந்த நாள், இந்த உலகில் நீ பிறந்த நாளாகும். உன்னைக்காக்க நான் தோன்றிய இந்த நாள் எனக்கும் பிறந்த நாளேயாகும். ஆதலால் இனி நீ இந்த அமாவாசை நாட்களில் என்னை நாள் முழுவதும் தியானித்து வழிபாடு செய்வாயாக. அவ்வாறு செய்தால் உனக்குப் பெருவல்லபமும சிறப்பும் பெருகும். உன் குலத்தாரும் நலம் பெறுவர். உன் குலமக்கள் அன்று நெய்வதை விட்டு என்னைப் பூசித்து, என் புகழைச் சிரவணம் செய்து வந்தால் அவர்களும் எல்லா நன்மைகளையும் அடைவர். அவ்வாறின்றி என்னை மறந்திருந்தால் அவர்கள் துன்பத்தில் ஆழ்வர்.' என்று சொல்லி மறைந்தார். பின் தேவலன் ஆமோத நகரை நோக்கிப் போனான். இனி ஐந்து அசுரர்களின் குருதியில் நூலைத் தோய்க்க அது ஐந்நிறம் கொண்டதற்கும், சக்கரப்படையால் அவர்கள் அழியாததற்கும் வரலாறு உண்டு. அது வருமாறு அசுரர்கள் ஐவரின் வரலாறு ஒரு காலத்தில் ஊழி நிகழ்ந்தது. உலகம் நீரில் மூழ்கியது. நீர்மீது கார்முகில் வண்ணன் ஆலிலையில் அறிதுயிலிருந்தான். அப்போது அவன் உடம்பு வியர்த்தது. வியர்வையிலிருந்து வச்சிரமுஷ்டி முதலான் ஐந்து அரக்கர்கள் தோன்றினர். தாங்கள் தோன்றுதற்கே காரணனாயிருந்த மாயவனையே கொல்ல முயன்றனர். இதையறிந்த மாயவன் துயில் நீங்கி அசுரரை எதிர்த்தான். பெரும்போர் மூண்டது, மூண்டபோர் ஓராண்டு நடந்தது. அசுரர்களின் பெரும் பலத்தை அறிந்த திருமால் தந்திரமாக அவர்களை வெல்லக்கருதி "அன்பர்களே! உங்கள் போர்த்திறங்கண்டு மகிழ்ந்தோம். நீங்கள் விரும்பிய வரம் யாது?" எனக்கேட்டார். இது கேட்ட அசுரர்கள் 'முகில்வண்ணா: எந்த ஆயுதத்துக்கும் அஞ்சாத நாங்கள் உமது சக்கரப்படைக்கு மட்டும் அஞ்சுகிறோம். அப்படைக்கும் அயரா வரம் தந்து அருள வேண்டும். " என்று வேண்டினார். திருமாலும் அவ்வாறே அருள் செய்தார். வரம் பெற்ற ஐவரும் எதிர்ப்பாரின்ரி அகந்தை கொண்டு விரும்பியது விரும்பியபடி உலகெங்கும் பெற்றுக்களித்துத் திரிந்தனர். ஒரு நாள் பாதாள லோகம் சென்றனர். அசுர குரு சுக்கிராச்சாரியாரின் ஆசிரமத்துள் அச்சமின்றி நுழைந்தனர். அங்கு சுக்கிராச்சாரியாரின் மகள் சோமை இருக்கக் கண்டனர். ஈடில்லா அவள் அழகைக்கண்டு ஐவரும் அவள் மீது மையல் கொண்டனர். அவளிடம் போய்த் தமது வீரப்பிரதாபங்களை யெல்லாம் சொல்லித் தம்மில் ஒருவரை மணக்குமாறு வற்புறுத்தினர். இக்கொடுஞ் சொற்கேட்ட சோமை சினங்கொண்டு "உங்கள் குருவின் மகள் என்பதை அறிந்தும் சொல்லத்தகாத வார்த்தைகளைப் புகன்றீர். இக்குற்றத்துக்குத் தண்டனையாக நீங்கள் என் போன்ற ஒரு பெண்ணாலேயே போரில் பலமிழந்து மடிவீர்கள்" எனச் சாபமிட்டாள். சாபத்தால் தாக்குண்ட அசுரர்கள் அப்போதே பலமிழந்து உடல் மெலிந்து துன்புற்றனர். அதிலிருந்து மீள அரனை நோக்கித் தவம் செய்தனர். இவர்களது கடுமையான தவத்துக்கு இரங்கி சிவபெருமான் நேரே தோன்றி ' வேண்டும் வரம் யாது/' என்று வினவினார். அரக்கர் ஐவரும் பெருமானை வணங்கிப் ' பெருமானே! எங்கள் குருதியை தேவர்களும் மற்றவர்களும் தமது உடம்பில் அணிந்து அழகு படுத்திக் கொள்ள வேண்டும்' என்று இறைஞ்சினர். சிவபெருமானும் அவ்வாறே வரமருளி மறைந்தார். இந்த வரலாற்றுப்படியே இந்த அசுரர்களின் வாழ்க்கை முடிந்தது.

தேவலர் மணிமுடி சூடியது :

ஆமோத நகரம் சகர நாட்டின் தலைநகரம்.அதைச்சுனாபன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். இவன், தேவல முனிவர் தன்னாட்டை நோக்கி வருவதை இறைவன் உணர்த்த உணர்ந்தான். முனிவரை வரவேற்க மந்திரி பிரதானிகளுடன் நர்ப்புறம் போய் நின்றான். முனிவரும் வந்தார். வந்தவரை மன்னன் வரவேற்று 'இந்த நாட்டைத் தாங்களே ஏற்று ஆட்சி செய்ய வேண்டும். இறைவன் திருக்குறிப்பும் அதுவே' என்று வணங்கினான். முனிவரும் இறைவன் திருக்குறிப்பு என்பதை ஓர்ந்து இசைந்தார். ஊர் மக்களும் பிறரும் நல்வரவு கூர மேளவாத்தியம் முழங்க ஆடல் பாடல்கள் நிகழ முனிவரை யானைமீது அமர்த்தி ஆமோத நகரருக்குள் ஊர்வலமாய் அழைத்துச் சென்றனர். ஊர்வலம் அரண்மனையை அடைந்தது. மன்னன் முனிவரை அரண்மனைக்குள் அழைத்துச் சென்று அரியாசனத்தமர்த்தி உபசரித்தான். இரண்டொரு நாட்கள் விருந்து உபசாரங்கள் நடந்தன. பின் மன்னன் தேவலரை மணிமுடி சூடி நாட்டை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினான். முனிவரும் இசைந்தார். சுனாபமன்னன் ஒரு நல்ல நாளில் நாட்டை அலங்கரிக்கச் செய்து வாத்தியங்களும் வேத கீதங்களும் முழங்க தேவல முனிவரை அரசுக்கட்டிலில் அமர்த்தி முடி சூட்டி அரசுரிமையை அளித்தான். பின் நாட்டை விட்டுச் செல்ல தேவலரிடம் விடை கேட்டான். அதைக் கேட்ட தேவலர் ' தாங்கள் ஏன் செல்ல வேண்டும்? என்னோடேயே இருக்கலாமே ' என்றார். அதற்குச் சுனாபன் ' நான் பிரிந்து செல்லக் காரணம் உளது ' என்று கூறித் தன் வரலாற்றைக் கூறினான்.

சுனாபன் வரலாறு :

நான் கின்னரரின் அரசன். ஒரு நாள் நான் என் மனைவியோடு கயிலைக்குச் சென்றேன். அம்மை அப்பர் தங்கியிருந்த புனிதமான அழகிய சோலைக்குள் மயக்க உணர்வோடு போனேன். அதன் புனிதத்தைக் கெடுத்தேன். இதை உணர்ந்த சிவபெருமான் சினங்கொண்டு என்னை நிலவுலகில் மனிதனாகப் பிறந்து பிறவிக் கடலில் வீழ்ந்து துன்புறுமாறு சபித்தார். சாபம் பெற்ற நான் சாப நீக்கம் வேண்டிப் பெருமானைப் பணிந்தேன். சிவபெருமானும் கருணை கூர்ந்து 'என்னுடைய மானதபுத்திரன் தேவல முனிவன் உலகநலங்கருதி அவதாரம் செய்கிறான். அவன் ஆமோத நகருக்கு வருவான். அவனை வரவேற்று அவனிடம் ஆட்சியை ஒப்படைத்துவிடு. அப்போது உன் சாபமும் நீங்கும்' என்று அருள் செய்தார். சாபத்தின்படி நான் இந்நிலவுலகில் பிறந்து இந்நாட்டைப் புரக்கும் மன்னனாக இதுவரை வாழ்ந்து வந்தேன். தங்கள் வரவால் என் சாபம் நீங்கியது. இறைவன் ஆணைப்படி ஆட்சியைத் தங்களிடம் ஒப்படைத்து விட்டேன். இனி நான் என்னுடய நாட்டுக்குப் போகிறேன் என்று சொல்லி முனிவரிடம் விடைபெற்றுக் கொண்டு மானிட உடம்பை அங்கேயே கிடத்திவிட்டு, தேவவடிவம் பெற்று அப்போது அங்கு வந்த விமானத்தின் மீது தன் மனைவியோடு வித்தியாதர உலகம் சேர்ந்தான். சுனாப மன்னனும் அவன் மனிவியும் விட்டுச் சென்ற பூத உடம்புகளுக்கு தேவலமுனிவர் செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளை முறையாகச் செய்தார். பின் ஆமோத நகரை செங்கோன் முறைப்படி நீதி வழுவாது நல்லாட்சி செய்து வந்தார்.

தேவலர் கருவிகள் பெற்றது :

ஆட்சியை ஏற்று செங்கோன் முறைப்படி ஆட்சி நடத்திய தேவலர் தாம் வந்த காரியத்தை நினைவு கூர்ந்தார். உடனே சுபுத்திமான், காரியதக்கன், நீதிவேந்தன், தீர்க்கதரிசனன் என்னும் நான்கு அமைச்சர்களையும் அழைத்து "நான் ஆடைகள் நெய்வதற்கு வேண்டிய கருவிகளை பெறுவதற்காக மயனிடம் செல்கிறேன். நான் வரும் வரை நாட்டை ஒழுங்காக ஆட்சி செய்யுங்கள்" என்று பணித்து விட்டு மேரு மலையை நோக்கிப் புறப்பட்டுப் போனார்.

கபிஞ்சலன் சாபம் களைந்தது :

காடும் மலையும் கடந்து செல்லும் போது ஒரு அடர்ந்த காட்டினிடைக் கொடிய சிங்கம் ஒன்று எதிர்ப்பட்டது. தேவலரைக் கண்டதும் அவர் மீது பாய்ந்து தாக்கியது. உடனே தேவலர் சிங்கத்தின் மீது பல அம்புகளை எய்து அதை வீழ்த்தினார். அப்போது சிங்கம் வீழ்ந்த இடத்தில் புனிதமான உடலோடு ஒருவன் ஒரு வானவூர்தியில் ஏறக்கண்டார். அதைக் கண்டு பெரிதும் வியப்புற்ற தேவலர் ' நீ யார்? ' என வினவினார். அவன் நான் குபேரனின் அலுவலரில் ஒருவன். என் பெயர் கபிஞ்சலன் என்பது. ஒரு நாள் நான் வேட்டைக்குப் போனேன். அங்கு அழகான மான் ஒன்றைக் கண்டேன். அதன் மீது அம்பை எய்தினேன். அம்பின் அடிபட்ட மான் காயமுற்று அருகிருந்த ஆசிரமத்திற்குள் பாய்ந்து ஓடியது. அது கௌதம முனிவரின் ஆசிரமம் ஆகும். நான் அடிபட்ட மானைத் துரத்திக்கொண்டு ஆசிரமத்துக்குள் போனேன். அடிபட்ட மானையும் அதைத் தொடர்ந்து என்னையும் கண்ட கௌதம முனிவர் பெரிதும் சினங்கொண்டு என்னைச் சிங்கமாக ஆகுமாறு சபித்தார். சாபத்தைப் பெற்ற நான் அச்சமுற்று முனிவரை வணங்கி மன்னிக்குமாறும் சாபவிமோசனம் அளிக்குமாறும் வேண்டினேன். அவரும் சினந்தணிந்து இரங்கி, தேவலமுனிவரால் உன்சாபம் நீங்கும் என்று அருளினார். சாபத்தால் சிங்கமாய்ப் பல விலங்குகளை அடித்துத் தின்று வந்த நான் இன்று தங்களால் சாபநீக்கம் பெற்றேன். தாங்கள் இக்காட்டின் வடக்கே மூன்று யோசனை தூரத்தில் உள்ள வாலகில்லிய முனிவர் ஆசிரமத்துக்குப் போய் அம்முனிவரை தரிசித்துக் கொண்டு உங்கள் பிரயாணத்தைத் தொடருங்கள். என்று கூறி விமானமேறி விண்ணிடை மறைந்தான்.

உருத்திர தனுவன் தேவருலகம் சேர்தல் :

அதன் பின் தேவல முனிவர் தமது பிரயாணத்தைத் தொடர்ந்தார். கங்கைக் கரையை அடைந்தார். இது சூரிய குலத்து வந்த பகீரதன், தன் முன்னோர்களான சகர மன்னர்கள் 100 பேர் தாம் பெற்ற சாபம் நீங்கி நற்கதி அடையத் தவமியற்றி உலகுக்குக் கொணர்ந்த புனற்கங்கையாகும். இது தன்னில் நீராடுவோரின் பாவங்களைப்போக்கி நற்கதி அடையச் செய்யும் புனிதமுடையது. இப்பெரும் புனற்கங்கையில் தேவலர் நீராடி நாட்கடன்களை முடித்துக் கொண்டு மூன்று நாட்கள் தங்கினார். பின் பிரயாணத்தை தொடங்கி வாலகில்லிய ஆசிரமத்தை அடைந்தார். ஆசிரமம் எங்கனும் ஏராளமான நறுமணப்பூக்கள் பூக்கும் மரங்களும் செடிகளும் நிரம்பி இருந்தன. மலர்ச்சோலையும் அழகிய வாவிகளும் நிரம்பிய அந்த ஆசிரமம் அமைதிச் சின்னமாய் இருந்தது. பகையே அங்கு இருக்கவில்லை. பாம்பும் மயிலும், சிங்கமும் யானையும், கழுகும் புறாவும் பகையின்றி அருகருகு இருந்து வசித்தன. வேத ஒலி ஒலித்தன. நாகணவாய்ப் பறவைகளும் வேதம் ஓதின. இவ்வாறு தெய்வமணம் கமழும் ஆசிரமத்துள் சென்ற தேவலர் வாலகில்லிய முனிவரை அணுகி வணங்கி, அவரது ஆசி பெற்று அவரருகே அமர்ந்தார். ஆசிரமவாசிகளின் நலம் பற்றி வினவினார். அதற்கு வாலகில்லிய முனிவர் எங்கள் யாக கர்மங்கள் சிவபெருமான் திருவருளால் செவ்வனே நடைபெற்று வருகின்றன. எனினும் அண்மையில் ஒரு துன்பம் நேர்ந்துள்ளது. இந்த வனத்தில் இரண்டு காததூரத்தில் ஒரு மலைக்குகையில் குண்டிகன் என்னும் அசுரன் வசிக்கின்றான். அவன், மலை போன்ற திரண்ட தோள்களும் கோரப்பற்களும் உடையவன். மூன்று உலகங்களையும் அழிக்க வல்ல சூலம் ஒன்றையும் ஏந்தி உள்ளான். பாபமே வடிவான அவன் அழிந்தாலன்றி நாங்கள் இங்கு அமைதியாக வாழமுடியாது. அவன் தவ வலிமையாலும் அடக்க முடியா வல்லமை உடையவனாயுள்ளான். முனிவர்களின் துன்பத்தைக் களைந்து காப்பது மன்னனின் கடமை அல்லவா? தாங்கள் தான் அந்த அசுரனை அழித்து இக்கானகத்தில் வாழும் எங்களுக்கு அமைதியைத் தேடித் தரவேண்டும் என்றார். இதைக் கேட்ட தேவலர் ' உங்கள் துயர் தீர அந்த அசுரனைக் கொன்று வருவேன்' என்று கூறி அவரிடம் விடை பெற்றுக் கொண்டு போர்க்கருவிகளை எந்தியவராய் போர்க்கோலம பூண்டு குண்டிகன் என்னும் அசுரன் இருக்கும் மலைக்குகையைத் தேடிச் சென்றார். குகையையும் அடைந்தார். அங்கு அசுரன் நாள் தோறும் பல உயிர்களைக்கொன்று தின்று எறிந்த பிணங்களும் எலும்புகளும் மலை போல் குவிந்திருக்கக் கண்டார். பெரிதும் திடுக்கிட்டார். " இந்த அசுரனை இப்போதே அழிப்பேன் " அது என் கடமை " என்றவாறு வில்லெடுத்து நாணேற்றி குணத்தொனி செய்தார். நாணொலி கேட்ட அசுரன் சினத்துடன் சூலபாணியாய் வெளியே வந்து தேவல முனிவரைக் கண்டு கடுமையாக எதிர்த்தான். தேவலர் பலவித ஆயுதங்களைக் கொண்டு அரக்கனோடு நீண்டநேரம் போரிட்டார். முடிவில் அர்த்தசந்திர பாணம் ஒன்றால் அரக்கனின் தலையை அறுத்து வீழ்த்தினார். அப்போது இறந்த அரக்கனின் உடம்பிலிருந்து வீரன் ஒருவன் வெளிப்பட்டு விமானம் ஒன்றில் ஏறக்கண்டார்.அதிசயித்து அவனைப் பார்த்து " நீ யார்? " என்று வினவினார். அவன் நான் விசாலமாபுரி மன்னன். உக்கிரதனுவன் என்பது என் பெயர். என்னுடைய நாட்டைத் துன்புறுத்தி வந்த விகடன் என்ற அரக்கனைக் கொன்றேன். அவனுடைய அண்ணன் கற்கடன் என்பவன் என்னைப் பழி வாங்கும் எண்ணத்தில் என்னிடம் கபடமாகச் சமையற்காரனாகச் சேர்ந்தான். ஒரு நாள் துர்வாச முனிவர் என்னைக் காண வந்தார். அவருக்கு அறுசுவை உண்டி அளிக்குமாறு சமையற்காரனைப் பணித்தேன். தூர்வாச முனிவர் முன்கோபத்துக்குப் பேர்போனவர். இதை அறிந்திருந்த கபட நாடக கற்கடன் அதுவே என்னைப் பழிவாங்குவதற்கு ஏற்ற தருணம் என்பதை ஓர்ந்து நரமாமிசத்தைச் சமைத்து தூர்வாச முனிவருக்குப் படைத்தான். இத்தீய செயலைக் கண்ட முனிவர் என்மீது சினங்கொண்டு நரமாமிசம் தேடி அலையும் அரக்கன் ஆகும் படி சபித்தார். நான் பெரிதும் துன்புற்று அவரை வணங்கிச் சாப விமோசனம் வேண்டிப் பணிந்தேன். அவரும் இரங்கித் தங்களால் சாப விமோசனம் கிடைக்கும் என்று அருள் செய்தார். சாபத்தின் காரணமாய் அரக்கனாகி இதுவரை பல உயிர்களைக் கொன்றும் துன்புறுத்தியும் பாபச் சேற்றில் மூழ்கியிருந்தேன். கருணாமூர்த்தியாகிய தங்களால் இன்று நான் சாபவிமோசனம் பெற்றேன். விடை பெறுகிறேன் " என்று கூறி விமானமேறி விண்ணுலகம் சென்றான். பின் தேவலமுனிவர் வாலகில்லிய முனிவரிடம் சென்று அரக்கனைக் கொன்ற செய்தியை அறிவித்து அவரிடம் விடை பெற்றுக்கொண்டு வடக்கிருக்கும் மேருமலையை நோக்கிச் சென்றார். பன்னாள் நடந்து சென்று மேருமலையை அடைந்தார். அங்கிருக்கும் தேவதச்சன் என்னும் மயனைச் சந்தித்தார். அவரிடம் தாம் துணி நெய்வதற்கான உபகரணங்களைப் பெற்றுப் போக வந்ததாகக் கூறினார். தேவதச்சனும் மகிழ்ச்சியோடு துணி நெய்வதற்கு வேண்டிய படமரங்கள், பலகைகள், தோற்கேடயங்கள், பண்ணையங்கள், தண்டங்கள், நாடாக்கள், திரிகைகள், திருவட்டம், விடுவாய் முதலிய கருவிகளை அளித்து அவற்றின் பெருமையையும் கூறினார். படமரம் முதலிய கருவிகள் தேவைக் கேற்றவாறு குறுகவும் நீளவும் செய்யுமென்றும், நாடா, நூலை விரும்பிய நிறத்தில் அளிக்கும் என்றும் கூறி, எப்பகையையும் வெல்ல வல்ல வாளையும் எட்டு பாணங்களையும் அளித்தார். இவற்றை எல்லாம் நன்றிப் பெருக்கோடு பெற்றுக் கொண்ட தேவலர் அங்கிருந்து இடுக்கண் இன்றி நாடு திரும்பினார்.

பற்பல ஆடைகள் படைத்தது :

நாடு திரும்பிய முனிவர் நெசவு நெய்வதற்கு மேலும் தேவைப்பட்ட வடம் கயிறு அச்சு மற்ற உபகரணங்களைத் தாமே தயார் செய்து கொண்டார். இங்கு ஓர் ஐயம் எழலாம் நெசவுக் கருவிகளில் உபகரணங்களைத் தயார் செய்து கொள்ளும் ஆற்றலைப் பெற்ற முனிவர் முதன்மையான கருவிகளையும் தாமே செய்து கொண்டு இருக்கலாமல்லவா? கருவிகளுக்காக மேருமலையிலிருக்கும் மயனை நோக்கி ஏன் போக வேண்டும்? தேவலமுனிவர் சிவபெருமானின் பக்தரும் மானத புத்திரருமாயிற்றே. அவரிடம் கருவிகளைச் செய்து கொள்ளும் ஆற்றல் இல்லாமலா இருக்கும் என்பது. திருவருளும் நல்லொழுக்கமும் பெற்ற முனிவர், வேண்டும் கருவிகளைத் தாமே செய்து கொள்ளும் ஆற்றல் பெற்றவரே. எனினும் ஐவர கருவிகள் வேண்டி மேருமலைக்குப் போகக் காரணம், போகும் வழியில் சாபம் பெற்றுத் துன்புற்றிருந்த சிங்கத்திற்கும் அசுரனுக்கும் சாப நீக்கம் தரவும் மயனிடம் போர்க்கருவிகளைப் பெறவும் ஆகும். சாதனம் பலவு மேற்பச் சமைத்திட வல்லோன் வேண்டிக் கோதிலா மயன்பாற் சென்ற கொள்கையா தென்னிற் கேன்மின் ஏதமார் சாபத்தாழ்வுற் றிருந்தூய் வில்லாத் தீதுறு நிருதனுக்குந் திறலுரறு சீயத்திற்கும் சொல்லுமச் சாப நீக்கந் தூயதே வாங்கன் றன்னாற் புல்லுமென் றறவோர் மாற்றம் பொருந்திய வதனான் மேருக் கல்லிடைக் கருவி பெற்று வந்திடும் கரும முன்னி யொல்லையின் வழிக்கொண்டந்த வும்பர் கம்மியன் பாற் சென்றான். இனி முனிவர் ஆடைகளை நெய்வதற்காக் கருவிகளைப் பூட்டி தயார் செய்து கொள்கின்றனர். தொழிலை ஆரம்பிக்குமுன் தமது குலதெய்வமான சவுடநாயகியை மெய்யன்போடு நினைக்கின்றார். அம்மையும் முனிவர் முன் தோன்றி "என்னை நினைத்த காரணம் யாது? ' என்று வினவ, முனிவரும் அம்மையை வணங்கி அம்மையே! தேவர் முதல் யாவருக்கும் அடியேன் ஆடைகள் வழங்க வேண்டியிருப்பதால் நான் நெய்யும் ஆடைகள் ஒன்று பலவாகப் பெருக வேண்டும். ஆடைகள் பெறுகின்றவர் மனமகிழும்படி அந்த ஆடைகள் பன்னிறங்களில் அமையவும் வேண்டும். என்று வேண்டிப் பணிந்து நின்றார். அம்மையும் பொன் வளையல் ஒன்றைக் கொடுத்து " இதை அணிந்து கொண்டு துணி நெய்தால் நீ நினைத்தபடியெல்லாம் நிறத்தாலும் வடிவத்தாலும் ஆடைகள் அமையும். ஒன்று பலவாகவும் பெருகும்.' என்று ஆசி கூறி மறைந்தருளினார். முனிவரும் நல்ல சுப முகூர்த்தத்தில் அம்மை அளித்த பொன் வளையலைக் கையில் அணிந்தவாறு ஆடைகள் நெய்யத் துவங்கினார். தேவல முனிவர் நெய்து தயாரித்த ஆடைகளின் பெயர்கள் வருமாறு: 1. நேத்திர பந்தர் 2. அமிர்த சந்திர பந்தர் 3. அன்ன பந்தர் 4. அன்ன புஞ்சர் 5. பலவகைத் தாராவளிகள் 6. மேகாவளிகள் என்பன வாகும்.

தேவர்களுக்கு ஆடைகள் அளித்தது :

தேவல முனிவர் தாம் நெய்த விதவிதமான கண்கவர் வனப்புமிக்க ஆடைகளைத் தேவர்களுக்கு அளிக்க விரும்பினார். முதலில், நூலைக் கொடுத்துதவிய திருமாலுக்குக் கொடுக்க எண்ணி அழகிய அம்பரங்களை எடுத்துக் கொண்டு வைகுந்தம் போனார். அங்கு பாம்பணையில் பள்ளி கொண்டிருந்த பெருமாளுக்கும் ஸ்ரீ தேவி பூதேவிகளுக்கும் மற்றுமுள்ள வைகுண்ட வாசிகளுக்கும், கொண்டு சென்ற அபூர்வமான ஆடைகளை அணியத் தந்தார். அவர்களும் அவற்றை அணிந்து பெருமகிழ்ச்சியுற்றுக் கைமாறாக ஏராளமான அரிய பொருள்களைப் பரிசாக அளித்தனர். முனிவரும் பெற்ற வெகுமதிகளை எடுத்துக் கொண்டு சத்தியலோகம் போனார். அங்குள்ள பிரம்மாவுக்கும் அவர் மனைவிகள் நாமகளுக்கும் சாவித்திரிக்கும் செந்நிறம் வெண்ணிறம் பசுமைநிறமுள்ள ஆடைகளை முறையே நல்கி மகிழ்வித்தார். மற்றும் அவ்வுலகில் வசிக்கும் புலத்தியர் கின்னரர் கிம்புருடர் சித்தர் முதலியோருக்கும் ஆடைகளை அளித்தார். பின் பிரம்மாவை அணுகி வணங்கி அண்ணலே திருமால் அளித்த நூலைக்கொண்டு அடியேன் ஆடைகளைத் தயாரிக்கிறேன். எனக்குப் பின் என் சந்ததியார் நூலுக்கு என்ன செய்வர்? என வினவினார். அதற்கு நான்முகன், திருமாலின் உந்தியிலிருந்து தோன்றிய மானி அபிமானி என்னும் இரு பெண்களை உலகத்திற்கு அனுப்பி அவர்களைப் பருத்திச் செடியாக முளைக்கும்படி செய்கிறேன். அதில்பெரும் பருத்தியை நூலாக்கி ஆடைகளை நெய்து உன் சந்ததியார் எல்லோருக்கும் அளிக்கட்டும் என்று வரமருளி அனுப்பினார். பிறகு தேவல முனிவர் இந்திர உலகம், அட்ட திக்குப்பாலகரின் உலகங்கள், உருத்திர உலகங்களுக்கெல்லாம் சென்று அங்குள்ளோர் யாவருக்கும் ஏற்ற ஆடைகளை அளித்து அவர்கள் விரும்பியளித்த பரிசுப் பொருள்களைப் பெற்றுக் கொண்டு நாடு திரும்பினார். இவ்வாறு தேவர்களின் அங்கங்களை ஆடைகளால் அலங்கரித்ததால் தேவல முனிவர் தேவாங்கன் என்ற பெயரையும் பெற்றார்,

மக்களுக்கும் நாகர்க்கும் அம்பரம் நல்கியது :

பின்னர் முனிவர் நாவலந் தீவை அடைந்து அந்நாட்டு மன்னனுக்கும் மக்களுக்கும் ஆடைகளை வழங்கிப் பரிசுகளைப் பெற்றுக் கொண்டு இறலித் தீவு, கிரெளஞ்சத் தீவு, சாகத் தீவு, புட்கரத் தீவு முதலிய தீவுகளுக்குச் சென்று அங்குள்ளோர் யாவருக்கும் அம்பரங்களை நல்கிப் பின் பாதாள உலகம் சென்றார். அங்குள்ள தக்கன், வாசுகி, கார்க்கோடகன், சங்கன் முதாலன நாகர்களுக்கும் நாக கன்னியர்க்கும் தக்க உடைகளை அளித்து மகிழ்வித்தார். அவர்கள் தந்த மாணிக்கங்களையும் மற்ற பரிசுப் பொருள்களையும் பெற்றுக்கொண்டார். அப்போது நாக மன்னன் அனந்தன், தன்மகள் சந்திரரேகையை தேவலருக்கு மணஞ்செய்து கொடுத்துச் சீதனமாக பல அரிய பொருள்களையும் கொடுத்தான். முனிவர் சின்னாள் அங்கு தங்கிப் பின் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு மனைவியுடனும் சீர்வரிசைகளுடனும் நாடு திரும்பினார்.

அரனிடம் வாளும் நந்திகொடியும் பெற்றது :

அடுத்து தேவல முனிவர் சிவபெருமானை வணங்கி அவருடைய நல்லாசிகளைப் பெற விரும்பினார். பல நிறங்களில் அழகிய ஆடைகளை எடுத்துக் கொண்டு, தேவரும் முனிவரும் புடை சூழ்ந்து பெருமானின் புகழைப்பாட, இடப்பாகத்தில் அம்மை வீற்றிருக்கக் கொலுவிருந்த கயிலை மால்வரையை நண்ணினார். பெருமானின் முன் சென்றார். அம்மை அப்பரின் அடிவணங்கிப் பல்வாறு துதித்துப் பரவினர். தாம் எடுத்துச் சென்ற அழகான அம்பரங்களைத் திருமுன் எடுத்து வைத்துப் " பெருமானே! தங்கள் திருவருட்டுணையால் இந்த ஆடைகளை வனைந்தேன். இவற்றைத் தாங்கள் ஏற்று அணிந்து அருள வேண்டும் என்று இருகை கூப்பி வணங்கிப் பணிந்தார். தேவலரின் வேண்டுகோளுக்கு இசைந்து சிவபெருமானும் அம்மை பராசக்தியும் மகிழ்ந்தேற்று அணிந்து பொலிவுடன் விளங்கினர். பின் மூத்தபிள்ளைக்கும் முருகனுக்கும் வீரபத்திரருக்கும் நந்தியம் பெருமானுக்கும் மற்றும் அங்குள்ள முனிகணங்களுக்கும் அவரவர்களுக்கு உரிய ஆடைகளை வழங்கி அவர்களது அன்புக்கும் ஆசிகளுக்கும் உரியவரானார். அதன் பின் சவுடநாயகியை எண்ணித் துதித்தார். சௌடேஸ்வரியும் எழுந்தருளி முனிவர் அளித்த ஆடைகளை மகிழ்வோடு அணிந்தருளி ஆசி கூறி மறைந்தருளினார். அதன் பிறகு தேவலர் சிவபெருமானின் திருமுன் போய்ச் சேர்ந்து வணங்கி நின்றார். வணங்கிய தேவலரைப் பெருமானும் ஆதரவோடு அருகே அமரச் செய்தார். அப்போது தேவசபை நடனமாதுக்கள் அரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை முதலியோர் அங்கு வந்து நடனம் ஆடினர். நடன முடிவில் சிவபெருமானின் குறிப்பறிந்து, முனிவர் வண்ண ஆடைகள் பலவற்றைப் பெருமான் முன் வைத்தார். சிவபெருமான் அந்த ஆடைகளை அங்கிருந்த இருடிகளுக்கும், நடனமாதர்களுக்கும் வழங்கி மகிழ்வித்தார். பிறகு சிவபெருமான் தேவலரை அருகழைத்து சக்திவாய்ந்த இடபக் கொடியையும் ஒப்பற்ற வாள் ஒன்றையும் அளித்து "இவை உள்ளளவும் உனக்குப் போரில் தோல்வியும் அச்சமும் உண்டாகாது " என்று ஆசி கூறி அருளினார். அப்போது அங்கு வந்திருந்த சூரிய பகவானை நோக்கி " நீ உன்தங்கை தேவதத்தையை ஆணழகனாயுள்ள இத்தேவாங்க மன்னனுக்கு மணஞ்செய்து கொடு " என்று பணித்தார். அதற்கு சூரிய தேவனும் இசைந்தான். அதன் பின் யாவருக்கும் விடை தந்தருள அனைவரும் தம் தம் இருப்பிடம் ஏகினர்.

யக்ஞோபவீதம் வழங்கல் :

பிறகு தேவலர் இறைவனைநோக்கிப் "பெருமானே! அடியேன் தங்கள் திருவுளப்பாங்கின்படி ஆடைகளை நெய்து மூவுலகிலுள்ளோர் யாவருக்கும் அணியக்கொடுத்து அவர்கள் மானத்தைக் காக்கும் பேற்றைப் பெற்றேன். ஆடைகள் நெய்து அளித்தது போக மீதியாக நூல் எஞ்சியுள்ளது. அதை என்ன செய்ய?" என்று வினயமாகக் கேட்டார். அது கேட்ட சிவபெருமான் "மைந்தனே! எஞ்சியுள்ள நூலைக்கொண்டு யக்ஞோபவீதம், மாங்கல்யம், கங்கணம், கடிசஞ்சாதம் என்னும் ஐந்து சூத்திரங்களைத் தயாரிக்கவும். யக்ஞோபவீதத்தை பிரம்மா, விஷ்ணு, தேவர்கள், பிராமணர்கள் ஆகிய இவர்களுக்கு மந்திர உபதேசம் செய்து அணியக்கொடுக்கவும். மாங்கல்ய சூத்திரத்தை கற்புடைய மகளிருக்கும், கங்கண சூத்திரத்தை உபநயன காலத்திலும், சஞ்சாத சூத்திரத்தைப் பெண்களின் பிரசவ காலத்திலும் அணியக் கொடுக்கவும் எனப் பணிந்தார். தேவலமுனிவரும் இறைவன் பணித்தபடி சூத்திரங்களைத் தயார் செய்து உரியவர்க்களித்தார். இதனால் இவர் இவர்களால் சூத்திரகர்த்தா என்று துதிக்கப்பெற்றார்.

அரம்பையின் சாபம் :

இனி தேவல முனிவர் சிவபெருமானிடம் விடைபெற்றுக் கொண்டு கயிலையை விட்டு தன் நாட்டுக்குத் திரும்பினார். திரும்பி வரும் வழயில் எழில் மிகுந்த சோலையும் அதில் பன்னிறப் பூக்கள் நிரம்பிய தடாகம் ஒன்றும் இருக்கக் கண்டார். மிகுந்த மகிழ்ச்சியோடு களைப்புத் தீர அந்த தடாகத்தில் குளித்து விட்டு அதன் கரை மீது அமர்ந்தார். கயிலையில் தேவலரும் தேவர்களும் கூடியிருந்த தேவசபையில் நாட்டியமாடிய தேவ கன்னியரில் ஒருவளான அரம்பை, தேவலரின் பேரழகில் ஈடுபட்டு மனதைப் பறிகொடுத்திருந்தாள். தேவலரைத் தனிமையில் சந்திக்கக் காலம் எதிர்நோக்கி இருந்தாள். தேவலர் பூஞ்சோலையில் தனித்து இருப்பதை அறிந்து அவர் முன் தோன்றினாள். பக்கத்திற் சென்றாள். அமுதொழுகப் பேசி தன் காதலைப் புலப்படுத்தினாள். இவளது காதலையும் காதற் பேச்சுக்களையும் கேட்ட தேவலர் சிவ சிவ என்று காதுகளைப் பொத்திக் கொண்டார். 'அரம்பையே! நான் ஒரு பிரம்மச்சாரி. காம இச்சை சிறிதும் இல்லாதவன். உன் காதலுக்கு நான் உரியவன் அல்லன். உன்னை நாடும், உன் விருப்பத்திற்கு ஏற்ற தேவேந்திரனும் தேவர்களும் தேவ உலகில் உள்ளனர். அவர்களிடம் போ. மேலும் கணிகையர் உறவு, புகழ், புண்ணியம், அறிவு, மனவுறுதி, குணம், தவம் யாவற்றையும் அழித்து பாவக்கடலில் ஆழ்த்தும். ஆதலால் என்னை விட்டு நீங்கி உன்னை விரும்பும் தேவர்களிடம் போய் உன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்' என்று மொழிந்தார். இதைக் கேட்ட அரம்பை மனம் புழுங்கி, என்னைச் சாதாரண அரம்பை மகளிரில் ஒருவளென எண்ணி என் பெருமையை அறியாதவர் போல் பேசுகின்றீர்கள். பற்பல யாகங்களை முறையாகச் செய்து முடித்த முனிவர்களுக்கே என்னுடைய போக இன்பம் கைகூடும். என்று ஆதிநூல்கள் பகர்வதை அறியீர் போலும். தவத்தின் மிக்க அத்திரி முனிவர் போன்ற தவசிரேட்டா்களெல்லாம் என்னை விரும்பி மோன நிட்டையை விட்டு என்னை அணுகினர். எனினும் நான் அவர்களைக் கூடினேன் அல்லேன். நீரோ வலிய வந்த என்னைப் புறக்கணிக்கின்றீர். இது முறையல்ல என்று வாதிட்டாள். இவ்வாறு அரம்பை கூறிய பேச்சுகளுக்கும் வாதங்களுக்கும் முனிவர் அசைந்து கொடுக்கவில்லை. அதனால் அரம்பை முனிந்து " நீ பகைவரிடம் தோல்வியுற்றுக் கட்டுண்டு துன்புருவாயாக" என்று சாபமிட்டு அமரருலகம் சென்றடைந்தாள். சாபம் பெற்ற தேவலமுனிவர் இதுவும் இறைவன் திருவருளே என்று எண்ணி மனங்கலங்காது ஆமோத நகரை அடைந்தார்.

தேவலர் தேவதத்தை மணம் :

திருக்கயிலையில் சிவபெருமான் தேவலருக்கு மணஞ்செய்து வைக்கத் திருவுளம் பற்றினார். ஏழு முனிவர்களை - சப்தரிஷிகள் கயிலைக்கு வந்து சேருமாறு திருவுளத்தே எண்ணினார். முனிவர்கள் எழுவரும் இறைவனின் உள்ளக் குறிப்பை உணர்ந்து திருக்கயிலையை அடைந்து சிவபெருமான் திருமுன் போய் அவன் திருவடிகளில் வீழ்ந்து இறைஞ்சி நின்றனர். வந்த முனிவர்களை நோக்கிச் சிவபெருமான் " முனிவர்களே! தேவாங்க முனிவருக்குச் சூரிய தேவனின் தங்கையை மணமுடிக்க வேண்டும். நீங்கள் சூரியதேவனிடம் சென்று மணவினைக்குரிய நன்னாளைக்கூறி, அவனது ஒப்புதலைப் பெற்று வாருங்கள்!" என்று பணித்தார். முனிவர்களும் சிவபெருமானை வணங்கி விடைபெற்றுக் கொண்டு சூரிய உலகம் சென்றனர். சூரியபகவானை அணுகி, வந்த காரியத்தைச் சொல்ல அவனும் தன் சம்மதத்தை மகிழ்ச்சியோடு அளித்தான். வைகாசித் திங்கள் பூர்வபட்சம் சத்தமி நாள் புதன் கிழமையன்று ஆறு நாழிகைக்கு மேல் முகூர்த்த நாளைக் குறித்தனர். இம்முடிவை முனிவர்கள் கயிலைக்குச் சென்று சிவபெருமானிடம் சொல்லி விட்டு அவரிடம் விடை பெற்றுக்கொண்டு தம் தம் இடம் ஏகினர். சூரியன் தன் தங்கை தேவதத்தையின் திருமணத்தை பற்றிய செய்திகளை எல்லாம் தனது அமைச்சன் வீரமார்த்தாண்டனிடம் சொல்லி, இம்மங்கல முடிவை ஆமோத நகரம் சென்று தேவாங்க மன்னனுக்கு அறிவித்து அவரை குறித்த மணநாளில் மணமுடிக்க உற்றார் உறவினருடன் சூரிய உலகம் வருமாறு கூறி, அழைப்பை விடுத்துத் திரும்பும்படி அனுப்பினான். அமைச்சன் மார்த்தாண்டனும் தேவாங்க மன்னனிடம் சென்று மணவினைபற்றிய முடிவுகளைச் சொல்லி குறித்த நாளில் சூரிய உலகம் வந்து சேருமாறு கூறி, விடை பெற்றுக்கொண்டு சூரிய உலகம் மீண்டான். சூரியனிடம் தான் ஆமோத நகரம் போய் வந்த விபரங்களைச் சொன்னான். உடனே சூரியன் மயனைக் கொண்டு இரத்தினங்களால் ஆன திருமண மண்டபத்தை அமைத்தான். முளைப்பாலிகைகள் தோற்றுவித்தான். நகரைத் தோரணங்களால் அழகுபடுத்தினான். வரும் விருந்தினர் தகுதிக்கேற்றவாறு தங்குவதற்கு வசதி மிக்க மாளிகைகளை நிர்மானித்தான். பின் சிவபெருமானுக்கும் திருமால் நான்முகனுக்கும் மற்றுமுள்ள தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தூதர்கள் மூலம் திருமண அழைப்பை அனுப்பினான். அழைப்பை ஏற்ற எல்லா தேவர்களும் தம் தம் பரிவாரங்களுடன் திருமணங் காண சூரிய உலகம் வந்து கூடினர். தேவாங்க மன்னனும் தனது திருமணத்துக்கு வருமாறு திருமண திருமுகத்தை உலக மன்னர்கள் யாவருக்கும் அனுப்பினார். அழைப்பை பெற்ற எல்லா மன்னர்களும் உரிய காலத்தில் அமைச்சர்கள் புடைசூழ ஆமோதநகரை வந்தடைந்தனர். அவர்களை எல்லாம் தேவாங்க மன்னன் தக்கவாறு வரவேற்று விருந்து முதலியன வைத்து உபசரித்து அமர்த்தினார். நல்லநேரத்தில் மன்னர்களும் நால்வகைப் படையினரும், விருதுகள் பலரும் ஏந்த, எக்காளம் துந்துபி பேரிகை முதலியன முழங்க, வாத்தியங்கள் ஒழிக்க அழகிய பெண்கள் ஆடல் பாடல் நிகழ்த்த தேர்மீது அமர்ந்து சூரியவுலகம் வந்தடைந்தார். சூரிய தேவன் மணமகனைத் தக்கவாறு வரவேற்று திருமணமண்டபத்துக்கு அழைத்துச் சென்றான். மணமகன் மணக்கோலம் பூண்டு மனையில் அமர்ந்தான். அழகில் தனக்கு நிகர் தானே என விளங்கிய தேவதத்தை இயற்கை அழகும் செயற்கை வனப்பும் பெற்று அன்னமென தேவமாதர்கள் புடைசூழ திருமணமண்டபம் வந்தடைந்தாள். மணமகன் அருகில் மனைமீது அமர்ந்தாள். பலவகை வாத்திய கீதங்கள் முழங்க, வேதகீதங்கள் ஒழிக்க தேவதத்தையின் கழுத்தில் தேவாங்க மன்னன் மங்கல நாண் சூட்டினார். அம்மை அப்பரும் சூழ்ந்திருந்த மற்ற தேவர்களும், முனிவர் முதலியோரும் மலர் தூவி வாழ்த்தி அருளினர். சூரிய பகவான் தாம்பூலத்தை எல்லோருக்கும் இரத்தினப் பேழைகளில் வைத்துக் கொடுத்தான். இந்நேரத்தில் தேவல மன்னன் தான் கொண்டு வந்திருந்த அழகான ஆடைகளை மூவருக்கும் அவர்கள் தேவிமார்களுக்கும், தேவர்களுக்கும் மன்னர்களுக்கும் ஆண் பெண் அனைவருக்கும் அவர்கள் மகிழுமாறு அளித்தார். அப்போது அங்கு வந்திருந்த பைரவக் கடவுளுக்கும் நல்லாடை ஒன்றை அளித்தார். அதைப் பெற்றுக்கொண்ட பைரவர் தேவலரைப் பார்த்து " எல்லோருக்கும் நல்ல நல்ல ஆடைகளைக் கொடுத்து விட்டு கடைசியில் மிஞ்சியிருந்த கழிசல் ஆடையை எனக்குக் கொடுத்தாயல்லவா ? இதோ இந்த ஆடையின் கதியைப் பார் " என்று சொல்லி அந்த ஆடையைச் சுக்கு நூறாகக் கிழித்தெரிந்தார். அதற்குப் பிறகு நல்லதோர் ஆடையைத் தமக்கு அளிக்குமாறு கேட்டார். பைரவரின் தகாத செயலைக் கண்ட தேவலர் இன்னொரு ஆடையை அவருக்கு அளிக்க மறுத்தார். உடனே பைரவர் சிவபெருமானிடம் சென்று தமக்கு ஆடை கொடுக்க மறுக்கிறார் என்று கூறினார். பெருமான் தேவலரிடம் நடந்த செய்தியைக் கேட்டறிந்து பைரவரை நோக்கி, " தேவலர் அளித்த ஆடைகளை நாங்களெல்லாம் மகிழ்ச்சியோடு ஏற்று உடுத்திப் போற்றினோம். நீயோ கொடுத்த ஆடையை மதிக்காது பெற்று கிழித்து எறிந்தனை. அதனால் இன்று முதல் நீ கிழிந்த ஆடையுமின்றி நிர்வாணமாய் இருக்கக் கடவை" என்று சபித்தார் சாபம் பெற்ற பைரவர் அங்கிருந்து நீங்கினார். திருமணம் நான்கு நாட்கள் நடைபெற்றன. வந்திருந்த யாவருக்கும் நான்கு நாட்களும் விருந்து உபசாரங்கள் நடைபெற்றன. நான்காவது நாள் திருமணத்துக்கு வந்திருந்த யாவரும், தேவலமன்னன் தம்பதிகளுக்கு ஆசி கூறி சூரிய தேவனிடம் விடைபெற்றுக்கொண்டு அவரவர் இருப்பிடம் சென்றனர். தேவலமன்னன், தானும் தன் மனைவியுமாக சில நாட்கள் அங்கு தங்கி இன்புற்றிருந்தார். அதன் பின் சூரியதேவன் அளித்த ஏராளமான சீர் வரிசைகளைப் பெற்றுக் கொண்டு தன்னுடன் தங்கியிருந்த மன்னர்களும் நால்வகைப் படைகளும் புடை சூழ்ந்து வர தேவதத்தையை அழைத்துக் கொண்டு சூரியதேவனிடம் விடைபெற்றுக் கொண்டு தமது நகர் அடைந்தார்.

தேவலரின் ஆட்சியும் மக்கட்பேறும் :

தேவாங்க மன்னனின் ஆட்சியில் பகைவர்கள் வணங்கினர். நால்வகை வருணத்தாரும் தமக்குரிய நெறியில் நின்றனர். அறநூல் முறைப்படி யாவரும் வாழ்ந்தனர். முப்பத்திரண்டு அறங்கள் எங்கும் சிறந்தன. நாட்டில் பகையே இல்லை. புலியும் மானும், எலியும் பாம்பும் பகை மறந்து நட்போடு பழகின. தவக்குறைவும் மகப்பேறின்மையும் எவரிடத்தும் இல்லை. நற்குணம், அன்பு, நன்மை, உறுதி, கருணை, மெய்யுணர்வு, கல்வி நாளுக்கு நாள் நாட்டில் ஓங்கி வளர்ந்தன. அதனால் நாட்டில் அழிவோ வறுமையோ அலைச்சலோ இல்லை. இவ்வாறு எல்லாச் சிறப்புகளும்பெற்று விளங்கிய சகர நாட்டைத் தேவலமன்னன், தன் கீழ் வாழும் முடிமன்னர்கள் அன்புடன் திறை செலுத்த, நீதியோடு ஆட்சி புரிந்து வந்தார். அந்நாளில் தேவதத்தை கருத்தரித்து மூன்று மக்களை ஈன்றாள். இவர்களுக்குத் திவ்யாங்கன், விமலாங்கன், தவளாங்கன் எனப் பெயரிட்டு நன்கு வளர்த்தார். இவர்களும் மணப்பருவம் எய்தியதும் இவர்களுக்கு சூரியதேவனின் புதல்விகள் பிரபை பத்மாட்சி கமலாட்சி என்பவர்களை மணமுடித்து வைத்தார். பின் மூத்தமகன் திவ்யாங்கனுக்கு மணிமுடி சூட்டி ஆட்சியை நல்கி மகிழ்ந்தார். மன்னனின் மற்றோர் மனைவி நாககன்னி சந்திரரேகையும் ஒரு மகவை ஈன்றாள். அக்குழந்தைக்குச் சுதர்மன் என்று பெயரிட்டு வளர்த்தார். அவனும் எல்லா கலைகளையும் கற்றுணர்ந்து வல்லவனானான். அது சமயம் குசைத் தீவை ஆளும் சூரசேனன் என்னும் மன்னன் ஆமோத நகர் மீது பெரும் படையோடு போருக்கு வந்தான். தேவாங்க மன்னன் பெரும் படை கொண்டு எதிரியுடன் போரிட்டு சூரசேனனைக் கொன்று அவன் ஆண்ட குசைத் தீவையும் கைப்பற்றித் தன் மகன் சுதர்மனை அந்நாட்டுக்கு மன்னனாக முடிசூட்டி ஆட்சியில் அமர்த்தினார். பின் சுதர்மனுக்கு அவந்தி நாட்டு மன்னனின் மகள் புட்கலையை மணம் செய்வித்தார். இவ்வாறு மக்கள் சிறக்கத் தவம்புரி மறையவரும் உலக மக்களும் போற்றும்படியாக குபேரனை ஒத்துச் செல்வ வாழ்வில் சிறப்புற்று ஓங்கி இருந்தார்.

தேவலமன்னன் செய்த போர்கள் :

தேவாங்க மன்னன் இவ்வாறு எல்லாச் சிறப்புகளும் பெற்று வீற்றிருக்கும் நாளில், தேவர்கள், அணிவதற்கு அழகான ஆடைகள் பெற்ற மகிழ்ச்சியில் குதூகலமுற்று ஆடைகளை அணிந்து கொண்டு, ஆடையின்றி நிர்வாணத்தோடு இருந்த அரக்கர்கள் முன்போய் சிரித்துப்பேசி கேலி செய்தனர். இதைப் பொறுக்காத அரக்கர்கள் தங்கள் மன்னன் வச்சிரதந்தன் பால் சென்று அரசே! தேவர்கள் பல நிறமான அழகிய ஆடைகளை அணிந்து கொண்டு எங்கள் முன் வந்து நம்மை மதியாமல் " நிர்வாணிகள் நாணமற்றவர்கள் " என்று சிரித்துக் கேலி செய்து இகழ்ந்து பேசினார்கள் என்றனர். இதைக் கேட்ட வச்சிரதந்தன் தனது உடன் பிறந்த புலிமுகனையும் சர்ப்ப நாவனையும் உடனே வரவழைத்துத் தம்பிகளே ! ஆடை அணிந்த அகம்பாவத்தால் தேவர்கள் நம்மை மிக மிக எள்ளிப் பேசினார்களாம். தேவாங்கனோ தேவர்களுக்கு ஆடைகள் வழங்கி நம்மைப் புறக்கணித்தான். கயிலை நாதனாவது நமக்கும் ஆடைகள் வழங்குமாறு தேவாங்கனுக்குச் சொல்லியிருக்கலாம். அவரும் அவ்வாறு செய்யவில்லை. அதனால் இப்போதே நாம் படைகளைத் திரட்டிக் கொண்டு தேவருலகம் சென்று தேவேந்திரனை முதலில் அழிக்க வேண்டும். பின் அவனுக்குத் துணைவரும் பிரம்ம விஷ்ணுக்களை வெல்லவேண்டும். இச்செயலைக் கேள்வியுற்று நம்மைப் புறக்கணித்த ஈசன் கலங்க வேண்டும். இத்தகைய வெற்றியை நாம் அடைந்திடல் வேண்டும். என்று சினம் பொங்கக் கர்ச்சித்தான். இதைக் கேட்ட தம்பியர் இருவரும் "அண்ணலே! தேவேந்திரனை வெல்வது அரிதன்று. ஆனால் அவனுக்கு உதவியாக வரும் திருமாலை வெல்வது எளிதல்ல. இதற்கு முன்னும் நாம் போரில் திருமாலிடம் தோற்றுள்ளோம். அதனால் மீண்டும் இப்போது இந்நிலையில் போருக்குப் போவது சரியென்று படவில்லை " என்றனர். அதன் பின் மூவரும் கலந்து பேசி, சிவபெருமானை நோக்கித் தவஞ்செய்து அவனிடம் தக்க வரங்களைப் பெற்றுக் கொண்டு, போருக்குப் போவது என்று முடிவு செய்தனர். முடிவின் படி மூவரும் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவஞ் செய்தனர். தவத்திற் கிணங்கிப் பெருமானும் அவர்கள் முன் தோன்றி ' நீங்கள் விரும்பும் வரம் யாது? ' என்று கேட்டார். அரக்கர்கள் " சூரியன் தோன்றாமல் உலகம் எப்போதும் இருளில் இருக்க வேண்டும் " என்று கேட்டனர். அதற்குச் சிவபெருமான் ' சூரியன் உதிக்காவிடில் விண்ணுளோரும் மண்ணுளோரும் வாழமுடியாது. வேத ஒழுக்கமும் பிறவும் அழியும். அதனால் இதை விட்டு வேறு வரம் கேளுங்கள்' என்றார். உடனே அரக்கர்கள் சிவபெருமானை வணங்கிப் " பெருமானே! ஒரு ஆண்டு காலமேனும் உலகம் இருளில் இருக்குமாறு அருள் செய்யுங்கள் " என்றனர். சிவ பரம் பொருள் ' அவ்வாறே தந்தோம் ' என்று அருளி மறந்தார். அப்போதே உலகம் இருண்டு விட்டது. அதைக்கண்ட அரக்கர்கள் மகிழ்ச்சிப் பெருமிதத்துடன் வீரமகேந்திரம் என்னும் தமது நகரை அடைந்தனர். அரக்கர் தலைவன் வச்சிரதந்தன் அரக்கர்கள் உள்ள இடங்களுக்கெல்லாம் தூதுவர்களை அனுப்பி அரக்கர் சேனைகளை வரவழைத்தான். எல்லா அரக்கப் படைகளும் வீரமகேந்திரபுரியில் ஒன்று கூடி போர்க்கோலம் கொண்டன. படைபலத்தைக் கண்ட வச்சிரதந்தன் வெற்றி உறுதி எனத்துணிந்து போர்க்கோலம் பூண்டு தம்பியர் இருவரும் அவர்கள் மக்கள் நால்வருமாக நால்வகைப் படைகளுடன் போர் முரசு முழங்க வானநாடு சென்று அமராவதி நகரைச் சூழ்ந்து கொண்டான். இதையறிந்த இந்திரனும் பெரும் படைகளைத் திரட்டிக் கொண்டு போர்க்களம் போந்து அரக்கரை எதிர்த்தான். இருபடைகளுக்கும் இடையே பெரும் போர் நடந்தது. போரில் தேவர்கள் தோற்று ஓடினர். வெற்றிவாகை சூடிய வச்சிரதந்தன் மகிழ்ச்சி ஆராவாரத்துடன் படைகளோடு வீரமகேந்திரம் அடைந்தான். அரக்கர்களிடம் தோற்று ஓடிய அமரர் தலைவனும் அமரர்களும் ஒன்று திரண்டு யாவருக்கும் பதியாம் பசுபதியைக் காணத் திருக்கயிலையை அடைந்தனர். பெருமான் முன் சென்று பணிந்து இனிது ஏத்தி. அரக்கரிடம் போரிட்டுத் தோற்று ஓடிய துன்பச் செய்தியைச் சொல்லி, அத்துன்பத்தினின்றும் காத்து ரட்சிக்குமாறு வேண்டினார். அவர்கள் வேண்டுகோளைச் செவிமடுத்த சிவபெருமான் அவர்களுக்கு அபயம் அளித்து தேவாங்க மன்னனை உள்ளத்தே எண்ணினார். இறைவன் திருக்குறிப்பை உணர்ந்த தேவாங்க மன்னன் அக்கணம் அங்கு வந்து சேர்ந்தார்.அரனடி பணிந்து நின்றார்.நின்ற தேவலனை நோக்கிச் சிவபெருமான் " தேவர்களை வருத்தும் அசுரர்களைப் போரில் வென்று மீள்க " என்று பணித்தார். இறைவனிடம் இக்கட்டளையை பெற்ற தேவலர் இறைவனை வணங்கி விடை பெற்றுக் கொண்டு, இந்திரனை நோக்கி " இனி அஞ்சவேண்டாம். உன் படைகளுடன் நீ அமர நாட்டுக்குப் போ. நான் ஆமோத நகரம் சென்று படைகளைத் திரட்டிக் கொண்டு மீண்டும் இங்கு வருகிறேன் " என்றார். இந்திரன் அமரநாடு செல்ல, தேவாங்க மன்னன் தன் நாட்டுக்குச் சென்று பெரும்படைகளைத் திரட்டிக் கொண்டு தேவலோகம் சேர்ந்தார். தேவேந்திரனையும் தேவபடைகளையும் கூட்டிக்கொண்டு கயிலைச் சாரலை அடைந்து போர் முரசங் கொட்டினார். போர்ப்பறை கேட்டதும் வச்சிரதந்தன் தனது படைகளுடன் போர்க்களம் அடைந்தான். இருவரிடைப் பெரும் போர் மூண்டது. போரில் வச்சிரதந்தன் தோல்வியுற்றுப் புறமுதுகு காட்டி ஓடித் தனது படைகளுடன் மகேந்திரம் சேர்ந்தான்.

வியாக்ரமுகன் வீழ்ச்சி :

மகேந்திர நகரை அடைந்த வச்சிரதந்தன் அரக்கர்களை ஒன்று கூட்டி மந்திராலோசனை செய்தான். அதில் வச்சிரதந்தனின் தம்பி வியாக்ரமுகன் 'கேவலம் ஒரு அற்ப மனிதனிடம் நாம் தோற்று ஓடி வருவதா ? இது மகா கேவலம். நானே போர் முகத்துக்குப் போய் தேவாங்கனுடன் போர் செய்து அவனை அழித்து வருகிறேன். விடை தாருங்கள்' என்று வீரம் பேசினான். அண்ணனும் அவனுக்கு ஆசி கூறிப் பெரும் படைகளுடன் போருக்கு அனுப்பினான். வியாக்ரமுகன் போர்முனைக்கு வந்து பலவிதமான ஆயுதங்களைக் கொண்டு தேவலரை எதிர்த்துக் கடுமையாக போரிட்டான். முடிவில் தேவாங்கரின் கணைகளால் தலை துண்டிக்கப்பட்டு வீழ்ந்திறந்தான். "ஒரு கணை யாற்குய வுலைய வாட்டி மற் றிரூ கணையாற்சிலை யிறுத்து வெம்பொறி தரு கனை யு'டைநிசா சரன்சி ரத்தையும் அரு கனை தாக்கனத் தகற்றி னானரோ" இதைக் கண்ட அரக்கர்கள் புலிமுகன் வீழ்ச்சியை வச்சிரதந்தனுக்குக் கூற மகேந்திரம் நோக்கி ஓடினர். வெற்றி வாகை சூடிய தேவல மன்னனும் இந்திரனும் பெருமகிழ்ச்சியோடு தம் தம் நகருக்கு ஏகினர்.

விடைக் கொடி தந்த வெற்றி :

தோற்றோடிய அரக்கர்கள் வியாக்ரமுகன் இறந்த செய்தியை வச்சிரதந்தனுக்குச் சொன்னார்கள். இதைக்கேட்ட அவன் மிகவும் துயருற்றான். பின் சினங்கொண்டு தேவாங்கனைக் கொள்வதாகச் சூளுரைத்து நால்வகைப் படைகளைத் திரட்டிக் கொண்டு தேவாங்க மன்னனும் தேவேந்திரனும் தங்கியருந்த ஏமகூடம் என்னும் மலைச்சாரலுக்கு வந்தான். வச்சிரதந்தன் போருக்கு வந்திருப்பதை அறிந்த தேவாங்க மன்னனும் தேவேந்திரனும் போர்க்கோலம் பூண்டு தேவப் படைகளுடன் போர்க்களம் சேர்ந்தனர். பெரும் போர் மூண்டது. வெற்றி தோல்வியின்றி நீண்டநேரம் போர் நடந்தது. வச்சிரதந்தன் விட்ட ஒரு அரிய மந்திரப்படை தேவர்களுக்குப் பெருஞ் சேதத்தை விளைவித்தது. இதைக்கண்ட தேவாங்க மன்னன் மந்திரப்படையை அழித்துப் போரை முடிவிக்குக் கொண்டு வர எண்ணினார். விடைக்கொடியை எடுத்தார். பூசை செய்து மந்திரபலத்தை ஊட்டி அதைப் பகைவர்கள் மீது ஏவினார். இப்படையிலிருந்து யானை சிங்கம் புலி கரடி பன்றி யாளி சரபம் பூதகணங்கள் முதலியன தோன்றி அரக்கர் படைகளைச் சின்னா பின்னப்படுத்தின. இந்த ஆயுதம் விளைவித்த பயங்கரமான சேதத்தை எதனாலும் கட்டுப்படுத்த முடியாத ஆற்றலையும் கண்ட வச்சிரதந்தனும் அவன் துணைவர்களும் செய்வது அறியாது அஞ்சி நடுங்கிப் போர்க்களம் விட்டு ஓடோடி மகேந்திரம் அடைந்தனர். தோற்று ஓடிய வச்சிரதந்தன் போரில், விடைக்கொடியால், உடன் பிறந்தாரும் மைந்தரும் மருமக்களும் துணைவரும் இறந்ததை எண்ணி ஊணுறக்கமின்றி வருந்தினான். இறந்தவர்களின் மனைவியர்கள் நாணிழந்து துன்புற்று அழுத குரல் கேட்டு உள்ளம் உருகினான். எங்கும் துக்கம்; எங்கும் அழுகுரல், துக்கத்தை மாற்றிக் கொள்ளும் வகையறியாது துன்புற்றான். தனக்கேற்பட்ட துக்கத்தை யாரிடமாவது சொல்லி அழுது சிறிது ஆறுதல் பெறலாமென எண்ணினான். இவனுக்கு வித்தையுத்தேசன் என்னும் நண்பன் ஒருவன் இருந்தான். நேராக அவனிடம் போனான். தன் துன்பத்தை அவனிடம் சொன்னான். தேவாங்க மன்னனின் தீரத்தையும் போர்த்திறத்தையும் வல்லமையையும் அவனிடம் உள்ள விடைக்கொடியின் ஆற்றலையும் கூறி, ' தேவாங்கனிடம் விடைக்கொடி இருக்கு மட்டும் தேவாங்கனின் துணைபெற்றிருக்கும் தேவர்களை வெல்ல முடியாது. நீயோ பெரிய மாயாவி. பலவகையான வேடங்களைக் கொள்வதிலும் வல்லவன். நீ நினைத்தால் அந்த விடைக் கொடியைக் கவர்ந்து கொண்டு வந்துவிட முடியும். அவ்வாறு செய்வாய? தேவாங்கனிடமுள்ள விடைக்கொடியை கவர்ந்து கொண்டு வந்து விட்டால் தேவர்களை எளிதில் வென்று விடலாம் ' என்றான். இதைக் கேட்ட வித்தையுத்தேசன் அவ்வாறே செய்வதாக நண்பனுக்கு உறுதி கூறி வஞ்ச வேடம் பூண்டு ஆமோத நகருக்குச் சென்றான்.

விடைக் கொடியை இழத்தல் :

வித்தையுத்தேசன் தன் மந்திர சக்தியால் தேவேந்திரனின் தூதுவனைப்போல் உருமாறி ஆமோத நகரை அடைந்தான். தேவாங்க மன்னனின் முன் போய் நின்று வணங்கி, ' மன்னர் மன்னா! நான் தேவேந்திரனின் தூதுவன் வச்சிரதந்தன் மீண்டும் பெரும் படைகளுடன் பொன்னகரம் வந்து வளைத்துக் கொண்டு போர் புரிந்தான். போரில் தேவர்கள் யாவரும் தோற்று ஓடி மறைந்து வாழ்கின்றனர். அரக்கரை வென்று பொன்னகரைக் காப்பதற்கு விடைக் கொடியாலன்றி வேறெதனாலும் முடியாது. அதனால் அதை தங்களிடமிருந்து பெற்றுவருமாறு தேவேந்திரன் அனுப்பியுள்ளான். அருள் கூர்ந்து அக்கொடியைக் கொடுத்து உதவ வேண்டும்' என்று வணங்கி நின்றான். அசுரன் சொன்ன சொல்லை உண்மை என நம்பிய தேவாங்க மன்னன் நந்திக்கொடியை அவனிடம் கொடுத்தனுப்பிவிட்டார். கொடியைப் பெற்ற அசுரன் பெருமகிழ்ச்சியோடு விரைந்து சென்று கொடியை வச்சிரதந்தனிடம் சேர்ப்பித்தான். நந்திக்கொடியைப் பெற்ற அசுரமன்னன் பெருங்களிப்பில் மூழ்கினான். சேனைகளைத் திரட்டிக் கொண்டு மீண்டும் தேவர்கள் மீது போருக்குப் போனான். விண்ணாட்டை அடைந்தான். அமராவதி நகரை வளைத்துக் கொண்டு போர்ப்பறை அறைவித்தான். இதை அறிந்த தேவேந்திரன் படைகளுடன் அசுரரை எதிர்த்தான். அசுரர் படை பலமிக்கதாயிருப்பதை அறிந்து தேவல மன்னனை உதவிக்கு வருமாறு, ஓலை கொடுத்து தூதனை அனுப்பினான். தூதுவன் சொன்ன செய்திகளை அறிந்த தேவாங்கன் " நேற்றனுப்பிய நந்திக்கொடிகையிலிருக்க நம்மை ஏன் இந்திரன் அழைக்கின்றான்? இதில் ஏதோ சூது இருக்கிரது' என்று ஐயுற்றார். உடனே படைகளுடன் அமராவதி நகருக்கு விரைந்து சென்றார். அங்கு சென்ற பின் அசுரர்களின் கபடநாடகம் வெளிப்பட்டது. போரில் தேவர்கள் தோற்றனர். தேவாங்க மன்னன் அசுரர்களிடம் சிறைப்பட்டார். சிறை பிடித்த தேவலமுனிவரை அசுரன் கொல்லாது தன்னாட்டுக்கு அழைத்துச் சென்றான். அரம்பையின் சாபம் பலித்துவிட்டது. நாட்டை அடைந்த அசுரமன்னன் தேவலமுனிவரைக் கொண்டு தனது குலமக்களும் ஆடைகளைப் பெறவேண்டும் என்று திட்டமிட்டான். அதனால் அவரைச் சிறைக் கைதியாக நடத்தாமல் மரியாதைக்குரிய ஒருவராக வைத்து நடத்தினான். தலைமைப் பதவியையும் கொடுத்தான். பின் தன் வளர்ப்பு மகள் பத்மினியை மணக்குமாறு வேண்டினான். அரக்க மகளை மணக்க முனிவர் தயங்கினார். அப்போது அக்னி தேவன் அங்கு தோன்றி பத்மினி என்னுடயை மகள். அக்னி தத்தை என்பது அவள் பெயர். இம்மன்னன் என்னுடயை நண்பன். அதனால் என் மகளை இங்கு நான் வளர்க்க விட்டேன். அவளும் வளர்ந்து வருகின்றாள். தாங்கள் தயங்காது இவளை மணக்கலாம். என்று கூறித் தானே முன்னின்று மணத்தை முடித்து வைத்தான். இம்மணத்தில் இவர்களுக்கு சாலன் அலன் பெலன் என்னும் மூன்று மக்கள் பிறந்தனர். இவர்களுக்குத் தேவலர் நெசவுத் தொழிலைக் கற்றுக் கொடுத்தார். அவர்களும் நெய்யும் தொழிலை நன்கு கற்று ஆடைகளை அழகாக நெய்து அசுரர்களுக்கு வழங்கினார்கள். இந்நிலையில் தேவலர் தமது நாட்டுக்குத் திரும்பிச் செல்ல விரும்பினார். தமது விருப்பத்தை அசுரமன்னனுக்கு அறிவித்தார். அவனும், ஆடைகளைத் தனது மக்களும் பெற வேண்டும் என்ற விருப்பம் நிறைவேறி விட்டதால் தடை சொல்லாமல் விடை கொடுத்து அனுப்பினான். தேவலமுனிவரும் அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு தமது நாட்டை அடைந்தார். ஆமோத நகரை சிறப்பாக ஆட்சி நடத்தி வந்தார்.

மன்னன் இலிங்க வடிவு அடைதல் :

ஒருநாள் வித்யாதரர்கள் யாவரும் ஒன்று கூடிக் கயிலைக்குப் போய்ச் சிவபெருமானை அணுகிப் ' பெருமானே நாங்கள் தங்கள் அருளால் அறுபத்து நான்கு கலைகளில் சிலவற்றையே உணர்ந்துள்ளோம். மற்றுள்ள கலைகளையும் உணர்த்தி எங்கள் உள்ளங்களைத் திருத்தியருளுதல் வேண்டும் எனப் பணிந்து நின்றனர். அதற்குச் சிவபெருமான் 'உங்கள் குலத்தைச் சேர்ந்த ஏமவருணன் என்பவன் மேருமலைச்சாரலில் எம்மை நோக்கித் தவஞ்செய்கின்றான். அவனுக்கு நாம் ஓர் மகனை அருள் செய்வோம். அவன் உங்களுக்கு வேண்டும் கலைகள் யாவற்றையும் விரித்துக் கற்பிப்பான். நீங்கள் அவனிடம் கற்றுணர்ந்து உய்வீர்களாக ' என்று அருள் செய்தார். அவர்களும் வணங்கி விடைபெற்றுக்கொண்டு தங்கள் தங்கள் இருப்பிடம் சேர்ந்தனர். பின் சிவபெருமான் ஆமோத நகரிலிருக்கும் தேவாங்க மன்னனை நினைத்தார். அவரும் சிவபரமபொருளின் உள்ளக்கருத்தை உணர்ந்து கயிலையில் சிவபெருமான் முன் தோன்றித் தாழ்ந்து எழுந்து தொழுது நின்றார். வந்தவரைச் சிவபெருமான் இனிது நோக்கி 'மேருமலைச் சாரலில் தவஞ்செய்யும் ஏமவருணனுக்குப் பிள்ளையாய்ப் போய் வித்யாதரர்களுக்கு அறுபத்து நான்கு கலைகளையும் உணர்த்தி வா' என்று பணித்து விடை தந்து அனுப்பினார். தேவாங்க மன்னனும் இறைவன் பணியை ஏற்றுக் கொண்டு ஆமோத நகரை அடைந்தார். தனது குமாரர்கள் மூவருக்கும் நல்லுரை கூறித் தனது மனைவியர் இருவரின் உள்ளத்தை தேற்றித் தனது தூய உடம்பைச் சிவலிங்க வடிவில் விட்டு விட்டு விண்ணுலகடைந்தார். ஆட்சிப் பொறுப்பை ஏற்ற மூத்தமகன் திவ்யாங்கன் தனது தந்தையின் இலிங்கவடிவத்துக்குத் திருக்கோயில் எழுப்பி, அதில் நாள்தோறும் பூசனைகள் செய்து வந்தான். ஏற்றுக்கொண்ட ஆட்சியையும் செங்கோன் முறைப்படி நீதி வழுவாமல் பகை நீக்கி வளம் பெருக்கி ஆட்சிசெய்து வந்தான்.

அருங்கலை உணர்த்திய வித்யாதரர் :

சிவபெருமான் ஆணைப்படி, மேருமலைச்சாரலில் தவஞ்செய்து கொண்டிருந்த ஏமவருணனின் முன், தேவலர், குழந்தையாகத் தோன்றினார். குழந்தையைக் கண்ட ஏமவருணனும் அவன் மனைவியும் பெருமகிழ்ச்சியோடு எடுத்துச் சென்று கமலாட்சன் என்னும் பெயரிட்டு வளர்த்து வந்தனர். இவன் வேதாகம சாத்திரங்களை தனது பதினோராவது வயதிலேயே நன்கு கற்றுத்தேர்ந்து சகல கலா வல்லவனாகத் திகழ்ந்தான். நிறை ஞானியான தேவலமுனிவர், இப்பிறப்பில் சிறு வயதிலேயே எல்லாக் கலைகளையும் கற்று வல்லவரானதில் வியப்பொன்றும் இல்லை. "ஒருமைக்கட் டான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து" என்பது மறை மொழியன்றோ! கந்தருவர் வித்யாதரர் தேவர்கள் முதலிய பலரும் கலைஞானம் பெற வேண்டி இவரை அடைந்து மானவராய்த் தொண்டு செய்து கலைஞானம் பெற்றனர். இறைவன் அருளாணைப்படி வித்யாதரர்களுக்கு கலைஞானம் உணர்த்தித் தமது பிறப்பின் நோக்கத்தை நிறைவேற்றி விட்டாராதலால் மீண்டும் கயிலையை அடைந்தார். தாம்பயின்ற இசையை யாழில் வைத்து கயிலைவாசனின் செவியில் அமுதெனப் பாய்ச்சும் பணியில் தலைப்பட்டார், இசைக்கு மயங்கும், ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் விளங்கும் சிவபெருமான், கமலாட்சனின் இனிய யாழிசையை மாந்தி இனிது வீற்றிருந்தார். சிவபெருமான் மட்டுமல்லாமல் கயிலையிலிருந்து எல்லா உயிரினங்களும் அத்தெய்வீக இசைக்கு மயங்கி உருகின. பகை உயிர்கள் பகை மறந்து ஒன்றுபட்டன. பாம்பு மயில் மீது விழுந்தது. சிங்கமும் யானையும் நெருங்கி நின்றன. புலி வாயினருகே மான்கள் அச்சமின்றி நடமாடின. முனிவர்களின் தவங்குலைந்தது. காதலர்கள் காதலால் குழைந்தனர். சூரிய சந்திரர்கள் தாம் செல்லும் திசையை மறந்தனர். கல்லும் உருகியது. காற்றும் மரக்கிளைகளும் அசைவற்று இருந்தன. காட்டாறுகள் ஓடவில்லை. கடலலைகள் ததும்பவில்லை. இவ்வாறு நிற்பனவும் இயங்குவனவுமாயுள்ள எல்லா உயிரினங்களும் பொருள்களும் இசைமயமாய் செயல்மறந்து நின்றன. இத்தகைய இசையால் நாள்தோறும் இறைவனை யாழ் மீட்டிப், பாடி பரவிப் பணிந்த வண்ணம் கமலாட்சன் இருந்தார். இசைவல்ல ஐவர இசைப்பணியோடு அளவற்ற புதிய பாடல்களையும் நல்ல நூல்களையும் இயற்றிச் சிவபெருமான் முன் அரங்கேற்றினார்.

புட்பதந்தன் அவதாரம் :

கனகமாபுரியை சுருதிகீர்த்தி என்னும் மன்னன் ஆண்டு வந்தான். இவனைச் சோரன் என்னும் அசுரன் பெரிதும் துன்புறுத்தி வந்தான். இவனை வெல்ல இயலாமல் இவனது துன்பப்பிடியினின்றும் மீளக் கருதிக் கயிலை நாதனை நோக்கித் தவங்கிடந்தான். தவத்துக்கிரங்கி சிவபெருமான் மன்னன்முன் தோன்றி அசுரனை வெல்லும் மகன் ஒருவனை அளிப்பதாக வரமருளி மறைந்தருளினார். அதன்படி இறைவன், கமலாட்சனை, மன்னனுக்கு மகனாகப் பிறந்து சோரன் என்னும் அசுரனை அழிக்குமாறு பணித்தார். கமலாட்சனும் இறைவன் ஆணைப்படி சுருதிகீர்த்திக்கு மகனாக அவதரித்தார். இந்தப் பிறப்பில் புட்பதந்தன் என்னும் பெயரும் பெற்றார். சிந்து மன்னனின் மகளாகப் பிறந்திருந்த தேவதத்தையை மணந்தார். ஒருநாள் மன்னன், தன்மகன் புட்பதந்தனை அழைத்து சோரன் என்னும் அசுரனை அழித்து வருமாறு பணித்தார். புட்பதந்தனும் அசுரன் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து, அவனுடன் பெரும் போர் செய்து அவனை அழித்து மீண்டான். சின்னாள் கழித்து மன்னன் தன் மகன் புட்பதந்தனுக்கு ஆட்சியை நல்கித் தானும் தன்மனைவியுமாக தவமேற்கொண்டு காட்டுக்குச் சென்றான். ஆட்சி பீடமேறிய புட்பதந்தன் செங்கோன் முறைப்படி நல்லாட்சி நடத்தி வந்தான். இவன் சிறந்த வீரனாக மட்டுமின்றி சிவபக்தனாகவும் திகழ்ந்தான். கோயில் வழிபாடும் அர்ச்சனையின் சிறப்பையும் நன்கு உணர்ந்த புட்பதந்தன் தன் நாட்டில் நல்ல முறையில் வழிபாடுகள் நடைபெற வேண்டும் என்னும் கருத்தால் திருக்கோயில்களை கட்டினான். நந்தவனங்களை வைத்தான். தானே பூப்பறித்துக் கொண்டு வந்து அர்ச்சனை வழிபாடுகளைச் செய்து பக்திப் பயிரை வளர்த்தான். இவ்வாறு புட்பதந்தன் அறநெறிப்படி நல்லாட்சியையும் சிவநெறியையும் போற்றி நாட்டைப் புரந்து வரும் போது சிவராத்திரி விழா வந்தது. இவ்வாறு சைவர்களுக்கெல்லாம் ஏற்றதும் முதன்மையானதுமான சிவராத்திரி விரதத்தை ஆகம விதிப்படி முறையாக ஏற்று புட்பதந்தன் சிவ வழிபாடு செய்து வந்தான். புட்பதந்தனின் பூசனையை மகிழ்ந்து ஏற்றுச் சிவபெருமான் அம்மையுடன் இடபவாகனத்தில் தோன்றி, அவன் விரும்பியவாறு, அவர்கள் நாள்தோறும் கயிலைசென்று தம்மை தரிசனம் செய்யும் வரத்தை அளித்து மறைந்தார்.

புட்பதந்தன் பெற்ற சாபம் :

வரம் பெற்ற புட்பதந்தன் நாள்தோறும் காலையில் மலர்களைக் கைக்கொண்டு மனைவியுடன் கயிலைக்குச் சென்று அம்மையையும் அப்பனையும் தொழுது தூமலர்த் தூவித்துதித்து வந்தான். பல நாட்கள் இவ்வாறு நடந்தது. ஒரு நாள் மாலையில் மலர்கொண்டு இறைவனை அர்ச்சித்து வழிபட எண்ணி மலர்களோடு கயிலைக்குச் சென்றான். அப்போது அம்மை அப்பர் இருவரும் தனித்து ஓரிடத்தில் உரையாடிக்கொண்டிருந்தனர். அதைக்கண்ட அவன் அவர்களைப் பார்ப்பதற்கேற்ற சமயம் அது எனத் தெரிந்து தலைவாயிற்புறம் ஒதுங்கி நின்றான். அச்சமயம் பார்வதிதேவியார் சிவபெருமானை வணங்கிப் ' பெருமானே! எவருக்கும் தெரியாத கதை ஒன்றைக் கூறி அருளவேண்டும் ' என வேண்டி நின்றார். சிவபெருமானும் உலகறியாக் கதை ஒன்றைக் கூறினார். இதை வாயிற்புறம் நின்ற புட்பதந்தன் கேட்டுக்கொண்டிருந்தான். பின் இறைவனைக் கண்டு வணங்கும் தருணம் இது அன்று என எண்ணிய புட்பதந்தன் கயிலையை விட்டு நீங்கி தன் மனைவியை அடைந்தான். நேரங்கழித்துவந்த தன்கணவனை தேவதத்தை சந்தேகக் கண்கொண்டு பார்த்தாள். ஊடல் கொண்டாள். மனைவியின் ஊடலைத் தணிப்பான் வேண்டித் தான் கயிலைக்குப் போனதையும் சிவபெருமான் அம்மைக்குப் புதிய கதை ஒன்றைக் கூரியதையும் அக்கதையைத்தான் கேட்டுக்கொண்டிருந்ததையும் எடுத்துக் கூறினான். இதைக்கேட்ட தேவதத்தை அக்கதையைத் தனக்குக் கூறுமாறு வற்புறுத்தினாள். அவள் பிணக்கைத் தீர்க்கும் கருத்தால் புட்பதந்தன் தான் கயிலையில் கேட்ட கதையை அப்படியே கூறி அவள் ஊடலைத் தீர்த்து மகிழ்ந்தான். மறுநாள் காலையில் எப்போதும் போல் தேவதத்தையும் புட்பதந்தனும் நறுமணமுள்ள பூக்களையும் பூசா திரவியங்களையும் எடுத்துக் கொண்டு கயிலையை அடைந்தனர். புட்பதந்தன் அப்பனைப் பூக்கொண்டு வழிபட்டான். தேவதத்தை அம்மையின் சன்னிதானத்தை அடைந்து அம்மையை வழிபட்டாள். பின் பெண்மதியால் அம்மையை நோக்கித் ' தேவியே! அரிய கதை ஒன்று உள்ளது. அதைத் தாங்கள் கேட்டருள வேண்டும் என்று பணிந்து கூறினாள். அம்மை அதற்கு இசைய, தத்தை தான் கணவன் பால் கேட்டறிந்த கதையைக் கூறினாள். இதைக் கேட்ட அம்மை, அக்கதை, எவரும் அறியாக்கதை எனச் சிவபெருமான் தனக்குச்சொன்ன கதையாயிருப்பதை அறிந்து, உடனே அவ்விடத்தை விட்டு நீங்கிப் பெருமானிடம் சென்று "புதுக்கதை என்று பழங்கதையைச் சொல்லி ஏமாற்றினீர்களே ! நன்று நன்று " என்று சினந்து நின்றாள். தேவியின் சினக்குறிப்பை அறிந்த சிவபெருமான் "இக்கதையைக் கூரினவர் யாவர்? " என்று வினவ, அம்மை அங்கு வந்து நின்ற தேவதத்தையைச் சுட்டிக் காட்டினார். உடனே தேவதத்தை தன் கணவனை சுட்டிக் காட்டினாள். உடனே சிவபெருமான் புட்பதந்தனை விளித்து ' உனக்கு யார் இந்த கதையைச் சொன்னவர் ? ' என்று கேட்டார். புட்பதந்தன் இறையடியை வணங்கிப் ' பெருமானே! அடியேன் தங்களை அர்ச்சித்து வணங்கப் பூக்களுடன் நேற்று மாலை வந்தேன். அப்போது தாங்கள் அம்மைக்கு இக்கதையைச் சொல்லிக் கொண்டிருந்தீர்கள். தற்செயலாக அங்கு அச்சமயம் வரநேர்ந்த அடியேன் அக்கதையைப் புறத்தே இருந்து கேட்க நேர்ந்தது. இவ்வாறு கேட்டறிந்த கதையைத் தேவதத்தைக்குக் கூறும் கட்டாயம் நேர்ந்து விட்டது' என்று பணிவுடன் கூறினான். இதைக்கேட்ட சிவபெருமான் சினந்து ' யாருமறியாது பிராட்டிக்குச் சொன்ன மறைபொருளை, மறைந்திருந்து கேட்டுப் பிறர் அறியக் கூறியதால், நீ வெறி மனங்கொண்ட வேதாளமாகக் கடவை. மனவடக்கமின்றிக் கேட்டதை வெளிப்படுத்திய உன் மனைவி மானாகப் பிறந்து உழலக் கடவள் ' என்று சபித்தார். சாபம் பெற்ற புட்பதந்தன் பெரிதும் துயருற்று அஞ்சலி செய்து, "பெருமானே இச்சாபம் எப்போது நீங்கும்" என்று வினவி நின்றான். புட்பதந்தன், பெரிதும் துயருற்று துதித்து வேண்டி நிற்கக் கண்ட சிவபெருமான் மிகவும் இரங்கி, ' அன்பனே! தேவதத்தை பாடலிபுரத்திற்குப் போய் அங்கு பகலில் மான் ஆகித் திரிந்து இரவில் மடந்தையாகி யாழ் மீட்டி எம்மைப் பரவிய வண்ணமிருப்பாள். நீயோ, பாடலிபுரத்துக்கு ஒரு யோஜனைதூரத்திலுள்ள பெருங்காட்டில் ஒரு பெரிய முருங்கை மரத்தின் மீது வேதாளமாய் இருப்பாய். சிலகாலம் கழித்து விக்கிரமாதித்த மன்னன் பாடலிபுரம் வருவான். அவன் உங்கள் இருவரையும் சந்திக்கும்படி செய்வான். அப்போது உங்கள் சாபம் நீங்கும். நீங்கள் இருவரும் மறுபடியும் பழைய நிலையை அடைந்து என்னை அடைவீர்கள்' என்று அருள் செய்தார். சாபத்தின்படி புட்பதந்தன் வேதாளமாகிப் பாடலிபுரத்துப் பெருங்காட்டில் ஒரு பெரிய முருங்கை மரத்தில் பேய்களுக்குத் தலைவனாய் வசித்து வந்தான். தேவதத்தை மான் ஆகிப் பாடலிபுரத்தில் பகலில் மானாகவும் இரவில் மடந்தையாகி யாழ் வாசித்துக் கொண்டும் இருந்தாள்.

வேதாள அவதாரம் :

இவர்கள் இருவரும் இவ்வாறாக, உச்சினி மாநகரை ஆளும் மன்னன் விக்கிரமாதித்தன் வனசஞ்சாரம் செய்பவன் பாடலிபுரத்தை அடைந்தான். அன்றிரவு ஒரு பூஞ்சோலையில் தங்கினான். அப்போது ஒரு கந்துருவப்பெண் கல்லும் இரும்பும் நெக்குருக யாழ் வாசிக்கக் கேட்டான். இசையில் மயங்கினான். நெஞ்சுருக யாழ்மீட்டி இசையமுதம் பொழியும் அம்மாதரசைச் சந்திக்க எண்ணி அவளிருக்கும் இடத்தைக் கண்டறிந்து அவளை அணுகினான். 'அணங்கே! நீ யார்? உன் ஊர் யாது? உன் பெயர் என்ன? இரவுநேரத்தில் நீ இங்கு வரக்காரணம் யாது?' என்று வினவினான். அதற்கு அவள், 'என் பெயர் தேவதத்தை, என் கணவன் பெயர் புட்பதந்தன். இறைவன் இறைவிக்குச் சொன்ன மறைபொருளை என் கணவர் மறைந்திருந்து கேட்டு வெளிபடுத்தினார். அதற்குத் துணையாக நான் இருந்தேன். அதனால் நாங்களிருவரும் இறைவன் சாபத்திற்கு ஆளானோம். சாபத்தின் காரணமாய் என் கணவர் காட்டில் வேதாளமாய்ப் பேய்களுடன் ஒரு பெரிய முருங்கைமரத்தில் வசிக்கின்றார். நான் பகலில் மானாகவும் இரவில் சுயவுருப்பெற்று யாழ் மீட்டிக் கொண்டும் திரிகின்றேன். நானும் என் கணவரும், விக்கிரமாதித்த மன்னன் உதவியால், நேருக்கு நேர் சந்திக்கும் போது எங்கள் சாபம் நீங்கும்' என்று கூறினாள். இதைக் கேட்ட விக்கிரமாதித்த மன்னன், 'நங்கையே இனி உன் கவலையை விடு. நீ எதிர்பார்க்கும் விக்கிரமாதித்த மன்னன் நானே. உன் கணவன் இருக்கும் இடத்தை அறிந்து அவனை அழைத்து வந்து அவனும் நீயும் சந்திக்குமாறு செய்து நீங்கள் சாபவிமோசனம் பெறும்படி செய்வேன்' என்று உறுதி கூறி அவ்விடத்தை விட்டு அகன்று பாடலிபுரத்தை விட்டு வேதாளம் இருந்த காட்டை அடைந்தான்.

வேதாளம் சாப விமோசனம் :

கானகத்திடை ஒருபெரிய முருங்கைமரத்தின் மீது முடை நாற்றமும் பேழ்வாயும் கோரப்பற்களும் கனல்கக்கும் கண்களும் சடைமுடியும் உடைய பயங்கரமான வேதாளத்தைக் கண்டான். உடனே அம்மரத்தின் மீதேறி அவ்வேதாளத்தைப் பிடித்துக் கட்டிச் சுமந்து கொண்டு தேவதத்தை இருக்கும் சோலையை நோக்கிச் சென்றான். அப்போது வேதாளம் விக்கிரமாதித்த மன்னனை நோக்கி, 'மன்னா! நான் ஒரு கதையைச் சொல்வேன். அக்கதையில் அமைந்துள்ள பொருளை நீ அறிந்து சொல்ல வேண்டும். அவ்வாறு நீ சொல்லாவிட்டால் உன் தலை சுக்கு நூறாகச் சிதறுண்டு போகும்' என்று கூறிக் கதையைச் சொல்ல துவங்கியது. இவ்வாறு வேதாளம் கதை சொல்வதும் மன்னன் விடை சொல்வதும் வேதாளம் கட்டவிழ்த்துக் கொண்டு முருங்கமரம் ஏறுவதுமாய் இருபத்தினான்கு முறை நடந்தது. பின் முடிவில் மன்னன் இருபத்தைந்தாவது முறை வேதாளத்தைக் கட்டிச் சுமந்து கொண்டு வரும் போது வேதாளம் மன்னனுக்கு விடை காணற்கரிய கதை ஒன்றைச் சொன்னது. இதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே மன்னன் பாடலிபுரத்து மலர்ச்சோலையிலிருந்த தேவதத்தை முன் போய்ச் சேர்ந்தான். மன்னன் முடிமீது கட்டுண்டிருந்த வேதாளமும் தேவதத்தையும் ஒருவரை ஒருவர் சந்தித்ததும், சிவபெருமான் அருளியபடி இருவரும் சாபநீக்கம் பெற்று தெய்வவுரு அடைந்தனர். அச்சமயம் அங்கு திருவருளால் விமானம் ஒன்று வந்து சேர்ந்தது. அதில் சாபநீக்கம் பெற்ற புட்பதந்தனும் தேவதத்தையும் ஏறி அமர்ந்து கொண்டு, விக்கிரமாதித்த மன்னனைப்பார்த்து பலவாறு ஏத்தி ' எங்கள் சாபநீக்கத்துக்குக் காரணமாயிருந்த உனக்கு நாங்கள் செய்யும் உதவி யாதுளது? நீ விரும்பிக் கேட்கும் வரத்தை அளிக்கிறோம். கேட்பாயாக' என்றனர். உடனே விக்கிரமாதித்த மன்னன் புட்பதந்தனைப் பார்த்து ' எனக்கு நீ எப்போதும் உறுதுணையாய் இருந்து நான் நினைக்கும்போது எல்லாம் என்முன் தோன்றி உதவவேண்டும்' என்றான். இதைக்கேட்ட புட்பதந்தன் ஒரு ஆற்றல் மிக்க வேதாளத்தை வரவழைத்து, விக்கிரமாதித்த மன்னனின் உள்ளக்குறிப்பை அறிந்து அவன் சொற்படி நடந்து உதவுமாறு பணித்தான். பின் கயிலையை அடைந்து விமலனடி பணிந்து இனிது இருந்தான்.

வரமுனி அவதாரம் :

உலகில் அறநெறி பிறழ்ந்தது. அன்பு பக்தி நல்லொழுக்கம் தெய்வவழிபாடு குன்றின. அதனால் அஞ்ஞான இருள் சூழ்ந்து வாழ்க்கை நிலைகுலைந்தது. துன்பமும் துயரமும் சூழ்ந்தன. பக்தியும் இறைவழிபாடும் குன்றினால் துன்பமும் துயரமும் சூழும் என்பது நியதி. உலகில் துன்பமும் துயரமும் இல்லா இன்ப வாழ்வு வாழ வேண்டுமானால் வேதாகம நெறிப்படி மக்கள் வாழ வேண்டும். வேதாகம நெறிகளே மயங்கின் மக்கள் வாழ்க்கை என்னாகும்? எனவே வேதங்கள் காலந்தோறும் மாறுபாடும் வேறுபாடும் உற்று அவற்றைப் பின்பற்றி நடப்போரிடம் குழப்பமும் ஒழுக்கக் குறைபாடுகளும் உண்டாயின. நெறிகளும் பலவாக விரிந்தன. யாவரும் தத்தம் கருத்துப்படி ஒழுகினர். அதனால் தீமைகள் மிகுந்தன. அன்பு பக்தி குல ஆசாரம் நன்னடத்தை குணம் தவம் தெய்வ வழிபாடு நல்லறிவு இன்றி, அறியாமை இருளில் மக்கள் மயங்கிக் கிடந்தனர். இத்துன்ப நிலையிலிருந்து உலகை மீட்க சிறந்த அருளாளர் தோன்ற வேண்டியிருந்தது. அதனால் தேவர்கள் அம்மை அப்பரை நாடிக் கயிலையை அடைந்தனர். அம்மை அப்பரை அணுகி அவர்கள் திருவடிகளில் வீழ்ந்து இறைஞ்சி வேதங்களைத் திருத்தியும் ஆகமங்களை படைத்தும் உணர்த்தியும் உலகை நெறிப்படுத்த நன்மகன் ஒருவனை உலகுக்கு அளிக்குமாறு வேண்டினர். பெருமானும் கருணையோடு அவர்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். 'நீங்கள் கவலைப்பட வேண்டாம். எமது மானதபுத்திரனை உலகுக்கு அனுப்பி உலகில் நன்னெறியும் நல்லொழுக்கமும் நிலைபெறச் செய்வோம் ' என்று கூறி அனுப்பினார். பின் புட்பதந்தனை விளித்து நீ உன் பதினைந்தாம் தலைமுறையில் தோன்றிய கங்காதரனுக்கும் சுகுணவாணிக்கும் மகனாய்ப் பிறந்து வேதங்களைத் திருத்தி உலகில் நீதியும் ஒழுக்கமும் நிலைபெறுமாறு செய்து வருவாயாக ' என்று ஆணையிட்டார். இறைவன் ஆணைப்படி புட்பதந்தன் கங்காதரனுக்கு மகனாய்ப் பிறந்தார். வரமுனி என்று பெயரிடப் பெற்றார். எல்லா கலைகளையும் கற்று உணர்ந்தார். கல்வி கேள்விகளில் வல்லவராகவும் அறிவு ஒழுக்கங்களில் சிறந்த மெய்ஞ்ஞானியாகவும் திகழ்ந்தார். உற்ற பருவத்தில், சுசீலனின் மகளாய் அமிர்தசீலி என்னும் பெயரில் வளர்ந்த தேவதத்தையை மணந்தார். மகனின் தகுதியை அறிந்து அவனிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டுக் கங்காதரன் தவம் மேற்கொண்டு மனைவியுடன் காட்டுக்கு ஏகினான். ஆட்சிபீடத்தில் அமர்ந்த வரமுனி நீதிநெறி வழுவாமல் ஆட்சியை நடத்தினான். மேலும் வேதங்களைத் திருத்தி ஒழுங்கு படுத்தி எல்லோரும் அதன்படி நடக்கும்படியாக உணர்த்தினான். மக்களும் நீதி குலவொழுக்கம் வேள்வி விரதம் வாய்மை நன்னடத்தை முதலிய நல்லொழுக்கங்களில் சிறந்து வாழ்ந்தனர். மேலும் இறைவனின் திருவருட்டுணை கொண்டு ஆகமங்கள் பலவற்றை இயற்றி உலகுக்கு அளித்தான். எனவே உலகியல் நெறிவிளங்க வேதங்களைத்திருத்திய வரமுனி, ஆகமத் துறைபற்றி யாவரும் சிவஞானம் பெற்றுமுத்திப்பேறு அடையவேண்டும் என்னும் கருணையினால் பல ஆகமங்களை இயற்றி உலகுக்கு உபகரித்தார். வேதாகம நெறிகள் இரண்டும் உலகில் பரவியதால் உலகியல் ஒழுக்கமும் சிவநெறியும் தெய்வபக்தியும் வழிபாடும் நிலைபெற்றன. எங்கும் அமைதியும் சாந்தியும் நிலவியது. மக்கள் மன அமைதியுற்று இன்பமாக வாழ்ந்தனர். வரமுனிக்கு அமிர்தசீலிபால் ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு வீரருத்திரன் என்று பெயரிட்டு கல்வி ஒழுக்கங்களில் சிறந்தவனாக வளர்த்தார். திருமணப்பருவம் வந்தடைந்ததும் அவந்தி மன்னன் கோமளையை மணஞ்செய்வித்து ஆட்சியை அவனிடம் ஒப்படைத்து விட்டுத் தன் மனைவியுடன் கயிலையை அடைந்து சிவபெருமான் திருவடி நிழலில் தங்கினார். வரமுனி இயற்றிய நூல்கள் 1. சாத்திர சூத்திர நிகண்டு 2. கணித சாஸ்திரம் 3. சந்திர சித்தாந்தம் 4. பிண்டோற்பத்தி சாஸ்திரம் 5. சந்தி சூத்திரம் 6. நர பிங்கல சாஸ்திரம் 7. சூரிய சித்தாந்தம் 8. சுத்த மீமாம்சம் 9. கௌமுதி வியாகரணம் 10. திரிலிங்க நிகண்டு 11. வஸ்து ஆயுள் நிர்ணயம் 12. பாக சாஸ்திரம் 13. யோனி நிகண்டு 14. ஞாய போதினி 15. சாந்தோக் ஞானம் 16. இலட்சண சாஸ்திரம் 17. ஸ்வர சூத்திரம் 18. பஞ்ச சூத்திர நிகண்டு 19. வேதாங்க மாலை 20. ஆயுள் வேதம்

தேவசாலி அவதாரம் :

வீரருத்திரன் சகர நாட்டை ஆண்டு வரும் போது கோமளை வயிற்றில் சுகுணன் என்னும் மகன் பிறந்தான். அவன் திருமணப்பருவம் அடைந்ததும் சத்தியாவதி என்னும் அரச கன்னியை மணந்தான். பின் அவனுக்கு மணிமுடிசூட்டி ஆட்சியை அவனிடம் ஒப்படைத்து விட்டு வீரருத்திர மன்னன் தன் மனைவியுடன் தவஞ்செய்யக் காட்டுக்குப் போனான். ஆட்சிக்கு வந்த சுகுணன் யாவரும் போற்றும்படியாக நல்லாட்சி நடத்தி வந்தான். அந்நாளில் வரமுனி இயற்றிய நூல்களைக் கற்றறிந்த சிலர் சிவயோகத்தை முறையாகப் பயின்று அதனால் வரும் பேரின்பப் பயனை அடையக் கருதினர். சிவயோகமோ குருவின் துணையின்றி பயின்று பலன் காணமுடியாது. அதனால் அவர்கள் பெரிதும் கலக்கமுற்றனர். சனகன் சனந்தனன் சனாதனன் சனற்குமாரன் என்னும் நால்வரும் பிரம்மாவின் புத்திரர்கள். இவர்கள் நால்வரும் நான்மறை ஆறங்கமுதலான எல்லாக் கலைகளையும் கற்றவர்கள். நூற்கேள்வியும் உடையவர்கள். எனினும் ஒரு குருவை நாடினர். குருவில்லா வித்தை பாழ்தானே? ஆதி முதற்குரு தட்சணா மூர்த்தியல்லவா/ அதனால் அவரையே நாடி இந்நால்வரும் கயிலைக்குப் போனார்கள். அப்போது சிவபெருமான் உமை அம்மையைப் பிரிந்து கல்லால மரத்தடியில் யோகியாய் வீற்றிருந்தார். முனிவர்கள் நால்வரும் அவரை அணுகி, ' அருட்கடலே! வேதாகமங்களைக் கற்றறிந்தும் மனம் அடங்கவில்லை. மன அடக்கம் பெற்று உய்யும் வண்ணம் வேதாகமங்களின் உட்பொருளை உபதேசித்து அருள வேண்டும் ' எனப் பிரார்த்தித்தனர். பெருமானும் அவர்களை அமர்த்தி சிவாகமங்களில் கூறியுள்ள பதி பசு பாசப் பொருளை உணர்த்திப் பின் முப்பொருள் உண்மையைச் சின்முத்திரை காட்டி மௌனமுற்றுயோகத்தில் அமர்ந்தார். முனிவர்களும் மனம் ஒடுங்கி ஞானநிலையை உணர்ந்தனர். எனவே எவ்வளவு தான் கற்றிருந்தாலும் குரு உணர்த்த உணரப்பெற்றாலன்றி கற்ற கல்வி பயனில்லாமற்போகும் என்பது உணரத்தகும். இதைச் சாத்திரங்களும் சாற்றுகின்றன. எனவே சற்குருவை நாடி முனிவர்கள் தவம் கிடக்க, அவர்கள் தவத்திற் கிரங்கி குருமூர்த்தி ஒருவரை அனுப்ப இறைவன் திருவுளம் பற்றினான். அப்போது அருகிருந்த வரமுனியை நோக்கி ' நீ உன் பேரன் சுகுணனுக்கு மகனாய்ப் பிறந்து சிவயோக நெறியை முனிவர்களுக்கும் மற்ற பக்குவிகளுக்கும் உணர்த்தி மீண்டும் என்னை வந்து அடைவாயாக' என்று அருளினார். அதன்படி வரமுனி சுகுணனுக்கு மகனாய்த் தோன்றினார். தேவசாலி என்னும் பெயரையும் பெற்றார். பெற்றோரும் புவிமன்னரும் சான்றோரும் போற்றும்படியாக ஞானச்செல்வராக வளர்ந்தார். சிவயோகம் பயின்று அதன் பயனை அடைய விரும்பிய அறிஞர் பலர் தேவசாலியை குருவாக ஏற்று அவரை சூழ்ந்தனர். அவரும் குருபரனாகி வந்தவர்க்கெல்லாம் அட்டாங்க யோகத்தை விளக்கி உணர்த்தினார். இவ்வாறு அட்டாங்க யோகத்தை தேவசாலி, விரும்பி வந்து கேட்டவர்க்கெல்லாம் விளக்கிக் கூறினார். கேட்டுணர்ந்த பலர் யோகப் பயிற்சியில் இறங்கினர். யோகம் பயின்ற மாணவர்களுக்கு அவரவர்கள் பக்குவத்துக் கேற்ப பயிற்சிகளை அளித்து வந்தார். வந்தவர்க்கெல்லாம் சலிப்பின்றி தக்கவாறுயோகத்தையும் ஒழுக்கத்தையும், உணர்த்தியும் பயிற்றியும் வந்தார். அதனால் நாடெங்கும் தெய்வ பக்தியும் ஓழுக்கமும் சிறந்தோங்கியது. மகனின் அறிவு ஆற்றல்களைக் கண்டு மகிழ்ந்த சுகுணபூபதி ஆட்சியை மகனிடம் ஒப்படைத்து விட்டுத் தவஞ்செய்ய மனைவியுடன் காட்டுக்குப் போனார். தேவசாலி, யோகிக்கு யோகியாகவும் ஆட்சிக்குச் சிறந்த மன்னனாகவும் இருந்து பகைவரும் போற்ற நல்லாட்சி நடத்தி வந்தான். அப்போது பட்டத்தரிசி சுகதருணி கருவுற்று ஒரு ஆண்மகனை ஈன்றாள். இவனுக்கு சசிசேகரன் என்னும் பெயரைச் சூட்டி அறிவு ஒழுக்கங்களில் சிறந்த மகனாக வளர்த்தான். இவன் கனகரங்கன் மகள் உத்தமியை மணந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்க, தேவசாலி மன்னன் தன் மனைவியுடன் கயிலையை அடைந்து சிவபெருமான் அடிக்கீழ் அமர்ந்தான். தந்தைக்குப் பின் ஆட்சி நடத்திய சசிசேகரன் இரத கஜ துரக பதாதி என்னும் நால்வகைப் படைகளையும் பெருக்கிப் பகையின்றி நாட்டைச் செழிக்கச் செய்து மன்னர் மன்னனாக வாழ்ந்தான். அப்போது அவனுக்கு ஒரு ஆண்மகன் பிறந்தான். அவனுக்கு வாமதேவன் என்று பெயரிட்டு வளர்த்தான். அவன் மணப்பருவம் அடைந்ததும் விதர்ப்பநாட்டு மன்னன் மகள் கமலலோசனையை மணஞ்செய்வித்தான். பின், தான் தன் மனைவியுடன் தவஞ்செய்யக் காட்டுக்குப்போனான். வாமதேவனின் ஆட்சிக்காலத்தில் மதபேதங்கள் பல கிளைத்தன. சைவப்பயிர் வாடியது. அதனால் மக்களிடையே மருள்நிலை படர்ந்தது. இவ்வாறு பல சமயத்தவர் உண்மையான அன்புச் சமயத்தை அழுத்தித் தமது சமயத்தை மக்களிடையே பரவவிட்டு இம்மை மறுமை வாழ்க்கையைக் கெடுத்து வந்தனர். எங்கும் சமயவாதங்களும் பூசலும் நிலவின. ஒழுக்கநிலை கெட்டு அமைதி குன்றி இருந்தது. அன்பும் அருளும் மறைந்து மருள் நிரம்பி இருந்தது. உலகெங்கும் சுற்றிவரும் நாரதர் ஆமோத நகரை அடைந்தார். அப்போது அங்கு சமயபேதங்கள் என்னும் பெருங்கிளைகள் பெருத்து ஓங்கி இருந்த காரணத்தால் மேலாண சைவப்பயிர் தலை தடுமாறி இருக்க எங்கும் அறியாமை இருள் சூழ்ந்திருக்கக் கண்டார். இந்த அவலநிலையைக் கண்ட நாரதர். திருக்கயிலைக்குப்போய் சிவபெருமானை அணுகி 'எல்லாவற்றுக்கும் ஆதாரமாய் எல்லா உயிர்களிலும் நிரம்பியுள்ள பெருமானே! உலகில் புன்மைசேர் மதங்கள் பலவும் தலைதூக்கி இருப்பதால் மக்கள் செய்யத்தக்கன இவை செய்யத்தகாதன இவை என்ற விதிவிலக்குகளை அறியாமல் குழப்பமுற்றுள்ளனர். ஆதலால் கருணாமூர்த்தியாகிய தாங்கள் அவர்களிடை சைவப்பயிர் தழைத்தோங்கச்செய்து அம்மக்கள் உய்யுமாறு அருள்பாலிக்க வேண்டும்' என்று இறைஞ்சினார். இதைக் கேட்ட சிவபெருமான் தமது அருகில் வீற்றிருந்த தேவசாலியை விளித்து ' குற்றமற்றவனே! நீ உன்னுடைய புத்திரனான சசிதேவனின் மகன் வாமதேவ மன்னனுக்கு மகனாய்த் தோன்றி, குருநாட்டு மன்னனின் மகளாய்த் தோன்றும் உன் மனைவியை மணந்து நாட்டை ஆள்வாயாக. அப்போது தீமை பயக்கும் மதமாறுபாடுகளையெல்லாம் நீக்கி உறுதிபயக்கும் வீரசைவநெறியை நல்லோர் யாவரும் மேற்கொள்ளும்படியாகச் செய்து நிலைநாட்டி மீண்டும் உன்மனைவியுடன் என்னை அடைந்து மற்றீண்டுவாரா நெறியை அடைவாயாக' எனப்பணித்தார். பணியை ஏற்ற தேவசாலி இறைவன் ஆணைப்படி வாமதேவமன்னனுக்கு மகனாய் அவதரித்தான்.

தேவதாசமையன் அவதாரம் :

இறைவன் கட்டளைக்கு இணங்க ஆமோத நகரை ஆட்சி செய்யும் வாமதேவ மன்னனின் மனைவி கமலலோசனையின் திருவயிற்றில் போய்ப் பிறந்தான். மகனைப் பெற்ற மன்னன் பெருமகிழ்ச்சி உற்றான். பிறந்த மைந்தனுக்கு தேவதாசமையன் எனப் பெயரிடுமாறு பலரும் வியந்து போற்ற வானொலி உண்டாயிற்று. அவ்வாறே பெற்றோர்கள் பெயர் சூட்ட தேவதாசமையன் தெய்வக் குழந்தையாக வளர்ந்து வந்தான். வேதம் முதலான எல்லா கலை ஞானங்களையும் கற்றுணர்ந்தான். வீராங்க மன்னனின் மகள் திலதாவதியை மணந்தான். மகனின் தகுதியை அறிந்து வாமதேவ மன்னன் ஆட்சியை மகனிடம் ஒப்படைத்து விட்டுத் தானும் தன்மனைவியுமாகத் தவம் செய்யக் காட்டுக்கு ஏகினான். ஆட்சியில் அமர்ந்த தேவதாசமையன் இறைவன் ஆணையை நினைவு கூர்ந்தான். நாட்டில் வீர சைவநெறியை நிலைநிறுத்த எண்ணினான். அப்போது நாட்டில் எங்கும் சின்னெறிப் பல் சமயங்கள் நிரம்பி அறியாமை இருள் பரவி இருந்தது. இதை மாற்றிச் சைவ நன்னெறியைப் பரப்பி நாட்டில் அன்பு அருள் அறங்கள் பரவும்படிச் செய்ய முற்பட்டான். மதத்தின் பெயரால் அழிவழுக்குப் பேசியவர்களின் மதத்தை அழித்தான். அறிவியல் வழி' மதவாதங்கள் புரிவதை விட்டு வெறும் அற்புதங்களின் வழி மதத்தை நிலைநாட்ட முற்பட்டனர் சில மதவாதிகள். அவர்களையும் ஏற்றவாறு தெருட்டினான். சைவ நன்னெறியின் மேலான கருத்துக்களை தேவதாசமையன் எங்கும் பரப்பினான். நெறியில்லா நெறிதன்னை நெறியாகக் கொண்டு ஒழுக்கமும் சீலமும் கெட்டு தடுமாற்றத்தில் வாழ்ந்த மக்களிடை அவர்களின் அன்றைய வாழ்க்கை முறைகளின் கேட்டையும் எடுத்துக் கூறினான். உய்யநெறி சைவமே என்பதைத் தெளிய உணர்த்தி அம்மக்களைத் தெருட்டினான். மக்களும் தவற்றை உணர்ந்து சைவநெறியை ஏற்று தேவதாசரை அண்டினர். திருந்திவந்த மக்களுக்குத் திருநீறும் கண்டிகையும் அணிவித்து இலிங்கதாரணம் செய்தான். சமணரும் பௌத்தரும் கூட தேவதாச மன்னரின் அருளுரைகளைக் கேட்டு அருட்பணியை உணர்ந்து திருந்தி சைவம் சார்ந்தனர். நெறியில்லா சமயங்கள் ஒழிந்தன. சைவப்பயிர் எங்கும் தழைத்தது. இவ்வாறு தேவதாச மன்னனின் அவதாரப்பணி நிறைவேறியது. இவருக்கு விருபாட்சன் என்ற மகன் பிறந்தான். உரியபருவத்தில் அவனுக்குக் காஞ்சனமாலை என்ற அரச கன்னியை மனம் செய்வித்து அவனுக்கு மணிமுடி சூட்டி ஆட்சியையும் ஒப்படைத்தார். வந்த பணி முடிந்துவிட்டதால் தெய்வ வழிபாட்டில் இறங்கினார்.

ஸ்ரீசைலம் மாண்பு :

ஒவ்வொருவரும் தலங்கள் தோறும் சென்று புண்ணிய தீர்த்தங்களாடி மூர்த்திகளை வழபட வேண்டும். ஆன்மீக வாழ்க்கைக்கு இது மிக மிக அவசியமாகும். தேவதாச மன்னனும் இம்முறையை மேற்கொண்டு தலயாத்திரை சென்றான். பலதலங்களுக்குச் சென்று தீர்த்தங்களாடி மூர்த்திகளை வழிபட்டுக் கொண்டு ஸ்ரீசைலம் அடைந்தார். ஸ்ரீ சைலம் இலிங்க மூர்த்தி பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்று. வீரசைவர்களுக்கு இது முக்கியமான தலமாகும். இது மல்லிகார்சுனம் சீர்ப்பதம் என்றும் பெயர் பெரும் இதற்கு மருதமரம் தலவிருட்சம். இது திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்திரமூர்த்திகள் ஆகிய மூவரால் பாடப்பெற்றது. சிலாதமுனிவரின் புதல்வர் திருநந்திதேவர் தவஞ்செய்து இம்மலையருப் பெற்று இறைவனைத் தாங்கிவருவதாக ஸ்ரீகச்சியப்பர் கூறுகின்றார். இத்தலத்தைச் சிவமகாபுராணம் பெருமைப்படுத்திக் கூறியுள்ளது. சங்கரர் சிவானந்தலகரியில் இரு சுலோகங்களால் இப்பெருமானைத் துதித்துள்ளார். இராமபிரான் இராவணனைக் கொன்ற பாவம் நீங்கச் சீதையோடு இங்கு வந்து சிவபிரானை வழிபட்டு பாவநீக்கம் பெற்றார். பாண்டவர்கள் இங்கு வந்து வழிபட்டுள்ளனர். பீமன் தவஞ்செய்த இடம் பீமகுண்டம் எனப்பெயர்பெற்றுள்ளது. சந்திராவதி என்னும் அரசகுமாரி பெருமானை மல்லிகை மலரால் வழிபட்டு பேறு பெற்றாள். கோயிலுக்குச் செல்லும் வழியில் சாட்சி விநாயகர் உள்ளார். கோயில் மூலமூர்த்தி இருக்கும் கருவறைக்கு வடக்கில் ஆதி மல்லிகார்சுனர் என்னும் சிவலிங்கமூர்த்தி உளது. சந்திராவாதி பூசித்த மூர்த்தி இது. இதற்குச் சிறிது வடக்கே சகஸ்திரலிங்கேசரும் இவர் கோயிலுக்குப் பின் பலிபீடமும் வீரபத்திரர்கோயிலும் உள்ளன. இதன் பக்கத்தில் மல்லிகைப் பொய்கையும் அதன் நடுவே வசந்த மண்டபமும் உள்ளன. கருவறைக்கு மேற்கே பஞ்சபாண்டவர் ஸ்ரீதேவி குமாரசுவாமி பஞ்ச நந்தீஸ்வரர் இராஜராஜேஸ்வரர் ஆகியோர் கோயில்கள் கொண்டு உள்ளனர். அம்பிகை கோயில் மேற்கே உயரமான இடத்தில் உள்ளது. அதனருகே ஆயிரம் லிங்கங்கள் உள்ளன. பாதாள கங்கையின் அருகே நரசிங்கமூர்த்தி எழுந்தருளியுள்ளார். மகாசிவராத்திரி விழா இங்கு சிறப்பாக நடைபெறும். அப்போது திரளான மக்களும் வழிபடக் கூடுவர். அபிஷேகநீரும் பூஜா திரவியங்களையும் எடுத்துச் சென்று அபிஷேகம் செய்து வழிபடலாம். சிறப்பு மிக்க ஸ்ரீசைலம் வந்து தங்கிய மன்னன் தேவதாசமையன் பவுராம்பிகையோடு கூடிய மல்லிகார்சுன நாதரை நாளும் வழிபட்டு வந்தார். அப்போது மாசிமாதம் சிவராத்திரி விழா வந்தது. இவ்விழாவை மிகச்சிறப்பாக நடத்தி வழிபட விரும்பினார். துவஜாரோகணம் செய்து விழாவைத் துவக்குவது மரபு. கொடிமரம் மிகப்பெரிய மரம். அதற்கு ஆனவாறு 12 முழ அகலம் 60 முழ நீளமும் உடைய அழகான துணியைத் தானே நெய்து அதைக் கொடிமரத்தில் கட்டி கொடியேற்றி விழாவைத் துவக்கி வைத்தார். அன்றிரவு நான்கு யாமமும் விரதம் இருந்து முறைப்படி வழிபாடு செய்தார். இவர் வழிபாட்டை ஏற்று இறைவன் அம்மையுடன் எழுந்தருளி ' அப்பனே! நீ விரும்பும் வரம் யாது?' எனக்கேட்டார். அதற்குத் தேவதாசமய்யன் அடியேன் கட்டும் திருக்கோயிலில் எம்மை எல்லாம் அருள் சுரந்து காத்து இரட்சிக்கும் சவுடாம்பிகை அம்மையோடு தாங்களும் எழுந்தருளிக் கோயில் கொண்டு அடியேனது குல மக்களைக் காத்தருள வேண்டும் ' என்று தொழுது நின்றார். இறைவனும் அவ்வாறே வரமருளி மறைந்தார். தேவதாசமய்யன் அங்கிருந்து ஆமோத நகரை அடைந்து பற்பல மணிகளலான அழகிய பெரிய கோயில் ஒன்றை ஆகம முறைப்படி எழுப்பிக் கும்பாபிஷேகம் செய்து 'அம்மையோடு தாங்களும் எழுந்தருளி ஆட்கொள்ளவேண்டும்' என்று இறைவனைப் பணிந்தார். சிவபெருமானும் சௌடநாயகியோடு தானும் கோயில் கொண்டருளி கருணைபாலித்தார். தேவதாசமய்யன் முக்கட் குழகனுக்கு இராமலிங்க நாதன் எனத்]திருநாமம் சூட்டி இராமலிங்க சௌடேஸ்வரியை பக்தி சிரத்தையுடன் வழிபட்டான். சிவபூஜையில் திகழ்ந்து தேவதாசமய்யன் மனைவியோடு கயிலையை அடைந்து சிவபெருமானை வணங்கி நின்றார். சிவபெருமானும் கிருபையோடு தேவதாசமையனுக்கும் அவன் மனைவி திலதாவதிக்கும் முத்தியை அருளி ஆட்கொண்டான்.

தேவாங்க வம்ச வரலாறு :

தேவதாசமய்யனுக்குப் பின் அவன் மகன் விருபாட்சன் ஆமோதநகரை ஆட்சி செய்தான். இவனைத் தொடர்ந்து இவன் மகன் உருத்திரனும் இவனுடைய காளசேனனும் ஆட்சிக்கு வந்தனர். காளசேனன் மக்கட்பேறு இன்றி பலநாட்டு மன்னர்களின் புதல்விகள் 10 ஆயிரம் பேரை மணந்தான். அவ்வாறு மணந்தும் மக்கட்பேறு கிட்டவில்லை. அதனால் சிவபெருமானை நோக்கித் தவஞ் செய்தான். அந்நிலையில் ஆமோதநகருக்குக் கவுதம முனிவர் வந்தார். இவர் வரவை அறிந்த காளசேன மன்னன் அவரை வரவழைத்து உபசரித்துக் குழந்தையில்லாக் குறையைக் கூறினான். அதுகேட்டு முனிவர் புத்திரகாமேட்டி யாகம் செய்தால் குழந்தைப்பேறு உண்டாகும் என்று சொல்லி யாகத்தையும் செய்து முடித்தார். அதில் அமிர்தம் வந்தது. அதைப்பெற்று மன்னன் தன் மனைவியர் 10000 பேருக்கும் பகிர்ந்து அளித்தான். அமிர்தம் அருந்திய அரசிகள் யாவரும் கருவுற்று உரியகாலத்தில் 10000 மக்களை ஈன்றனர். இவர்கள் யாவரும் சிங்கக் குட்டிகளென வளர்ந்தனர். உரியபருவத்தில் சகல சடங்குகளும் செய்யப்பெற்று 700 முனிவர்கள் பால் சிவதீட்சை பெற்றனர். தீட்சை அளித்த முனிவர்களின் வழி 700 கோத்திரங்கள் ஏற்பட்டன. 10000 பிள்ளைகளும் திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளைப் பெற்று குலங்களைப் பெருக்கினர். இனி, காளசேன மன்னன் தனதுமக்களில் சிறந்தவனும் மூத்தவனுமாயிருந்த ரூபசேனன் என்பவனுக்கு முடிசூட்டி ஆட்சியை அளித்துவிட்டுத் தவமேற்கொண்டு மனைவியுடன் கானகம் சென்றான். ரூபசேனன் ஆட்சிபீடமேறி செங்கோன் முறைப்படி ஆட்சி நடத்திவரும் காலத்தில் பரிட்டாணம் என்னும் நகரை சக்திராஜன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான்.அப்போது அந்நகரில் வசித்து வந்த சோமசர்மா என்னும் வேதியன் குழந்தைப் பேறு இல்லாததால் நகரிலிருந்த சந்திரமௌளீஸ்வரர் கோயிலுக்கு போய் குழந்தை வேண்டி இறைவனைப் பூசித்து வந்தான். இரவு பகல் அங்கேயே இருந்து வழிபட்டு வந்தான். இவன் இவ்வாறு இருக்க, ஒருநாள் இரவு தனபாலன் என்னும் வணிகன் திருக்கோயிலுக்கு வந்து பிள்ளைவரம் வேண்டி இரத்தினக்கற்களால் அர்ச்சனை செய்து வழிபட்டான். வணிகனின் பக்தி பூர்வமான வழிபாட்டுக்கு மகிழ்ந்து இறைவன், ' வைசியனே! உனக்கு மகப்பேறு அளித்தனன். நீ உன் வீட்டுக்குப் போ ' என்று அருள் செய்தான். வரம் பெற்ற வணிகன் எல்லையில்லா மகிழ்ச்சி பொங்க ஆடிப்பாடிய வண்ணம் திருக்கோயிலை வலம் வந்தான். இதைக் கண்ட மறையவன் மூண்ட சினத்தோடு கோயிலுக்குள் போய் இறைவனை நோக்கிப் பரமேஸ்வரா! நீ எத்தகைய பட்சபாதம் உடையவன்? நான் எத்தனை நாட்களாக உன்னைப் பூவும் நீரும் கொண்டு வழிபட்டு வருகிறேன். என் வழிபாட்டுக்கு இரங்கி புத்திரப்பேறு அருளாமல் இன்று வந்து இரத்தினக்கற்களைக் கொண்டு வழிபட்ட வணிகனுக்கு உடனே மகப்பேறும் வரத்தை அருளினையே! நீ நீதி உடையவன் தானா? கருனையற்றவனே! நான் பூக்கொண்டு செய்த பூசை உனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. வைசியன் கல்லால் செய்த பூசை உனக்கு ஆனந்தத்தை அளித்து. நான் நாள்தோறும் பூ பறித்து மாலை தொடுத்துக் கையெல்லாம் காய்த்து விட்டது. வில்வ மூட்டை சுமந்து தலையும் முரடு தட்டிவிட்டது. இவ்வாறு நான் பூக்கொண்டு செய்த அர்ச்சனை வழிபாட்டுக்கு இரங்காது சிறு கற்களால் வைசியன் செய்த வழிபாட்டுக்கு மகிழ்ந்து அவனுக்கு பிள்ளைப்பேறு அருளினாயல்லவா? நல்லது. இதோ நானும் நீ மகிழும் கல்லாலேயே உனக்கு பூசனை செய்கிறேன். வணிகன் சிறுகல் கொண்டு வழிபட்டு உன் அருளைப் பெற்றான். நான் பெருங்கல் கொண்டு உன்னை வழிபடுகிறேன். சிருகல்லை விடப்பெருங்கல் உனக்கு அதிக மகிழ்ச்சியை அளிக்கும்மல்லவா? ' என்று சொல்லிப் பெருங்கல் ஒன்றைக் கொண்டு வந்து சிவலிங்க மூர்த்தியின் மீது போட்டான். கல் பட்டு சிவலிங்கம் உடைந்தது. மறையவனின் இத்தீயச்செயல் எவ்வளவு மதியீனமானது? இறைவனின் செயல்களை நம் சிறுமதி கொண்டு அளக்கக் கூடாது என்று அருளாளர்கள் கூறினர். " ஆட்பாலவர்க் கருளும் வண்ணமும் ஆதி மாண்பும், கேட்பான் புகில் அளவில்லை கிளக்கவேண்டாம் " என்று ஞானக்குழந்தை அருளியது. இறைவன் நீதிக்கிருப்பிடம். சொன்ன சொல்லுக்குமாறாகத் தன் தோழனே போனபோது கண்களைப் பறித்துக் கொண்டவரல்லவா இவர். அதனால் மறையவனின் செயல் அவனது பக்குவமின்மையைக் காட்டுகின்றது. முன்னைப் பிறவியில் வணிகன் தவஞ்செய்திருந்தான் தவத்தின் பயனாய் இப்பிறவியில் செல்வனாகவும் பக்தியுடையவனாகவும் பிறந்தான். அத்தவம் அவனுக்கு இப்போது மகப்பேற்றை அளித்து. மறையவன் வழிபட்டானேயன்றி பக்தியின் முதிர்ச்சியும் அருட்பக்குவமும் பெறவில்லை. அதனால் வணிகனின் பக்குவத்தையும் இறைவனின் அருட்குறிப்பையும் உணரவில்லை. அறியாமையால் அருள்பெற்ற வணிகன் மீது பொறாமையும் இறைவன் மீது சினமும் கொண்டு தகாத செயலைச் செய்தான். வேதியனின் தீச்செயலைக்கண்டும் கருணாமூர்த்தியாகிய இறைவன் அவன் செய்த வழிபாட்டுக்காக அவனுக்கும் பிள்ளைவரத்தை நல்கினான். அதோடு அவனது தீச்செயலுக்கு தண்டனையாக குழந்தை பிறந்ததும் அவன் தலைவெடித்து மரணம் அடையும் படியும், பிறந்த குழந்தை ஒழுக்கத்தால் சூத்திரன் ஆகும்படியும் விதித்தான். இவ்வாறு வரத்தைப் பெற்ற வேதியன், குழந்தை பேற்றுக்காக மகிழ்ச்சியும் தண்டனையையும் எண்ணி வேதனையும் அடைந்தவனாய் வீட்டுக்குப் போனான். அவன் மனைவியும் வரத்தின்படிக் கருவுற்று உரிய காலத்தில் ஒரு மகவை ஈன்றாள். அப்போதே வேதியனும் தலை வெடித்து மரணம் அடைந்தான். அவன் மனைவி இதுகண்டுக் கணவன் போன வழித் தானும் போனாள். பெற்றோரை இழந்த குழந்தை தாய்மாமன் ஆதரவில் துருமளன் என்னும் பெயரைப் பெற்று வளர்ந்தது. குழந்தை பெரியவனாக வளரும் போதே எல்லாக் கலைகளையும் நன்கு கற்றுணர்ந்து கலை வல்லோனாய் விளங்கியது. துருமளன் நாள்தோறும் காட்டுக்குப் போய் மாமன் செய்யும் வேள்விக்குச் சமயத்துக் குச்சிகளை பொருக்கிக் கொண்டு வந்து கொடுப்பான். இவ்வாறு நடந்துவரும்போது ஒரு நாள் காட்டில், பெண் நாய் ஒன்றை ஆண்சிங்கம் புணரக் கண்டான். அதிசயித்து நின்றான். பின் பெண் நாய் அங்கிருந்து ஊருக்குள் போகவும், அதை அவன் பின் தொடர்ந்து போனான். நாய் சக்திராஜன் அரண்மனைக்குள் புகக்கண்டு அகன்றான். அந்த நாய் கருமுதிர்ந்து சிங்கத்தின் சாயலோடு கூடிய இரண்டு நாயக் குட்டிகளை ஈன்றது. ஒருநாள் சக்திராஜன் தனது தோட்டத்திலிருந்த பனைமரங்கள் ஏழின் முடிகளை ஒரே அம்பால் இறுத்து வீழ்த்தினான். அப்போது அங்கிருந்த மக்கள் அதைக்கண்டு மன்னனின் வீரத்தைப் பலவாறு பாராட்டி ஆரவாரம் செய்தனர். அந்நேரத்தில் அங்கு கூட்டத்தில் ஒருவனாய் இருந்த துருமளன், முன்வந்து, ' பனைகளின் முடிகளை விட மரங்களையே வேரோடு சாய்ப்பது புகழுக்குரியதாகும்' என்றான். இதைக்கேட்ட சக்திராஜன் ' நீ கூறும் வீரச்செயலை நீ செய்து காட்டவல்லையா? என்று கேட்டான். துருமளன் அவ்வாறே செய்வதாகக் கூறி, வில்லைவாங்கி அம்பு தொடுத்து ஏழு பனைமரங்களையும் வேரோடு வீழ்த்தினான். இதைக்கண்ட மன்னன் துருமளனைப் பாராட்டி, ' நீ விரும்பும் பொருளைக் கேள் தருகிறேன்' என்றான். உடனே துருமளன் அரண்மனையில் வளரும் அதிசய நாய்க்குட்டிகளைத் தருமாறு கேட்டான். மன்னனும் மகிழ்ச்சியோடு அந்த நாய்க்குட்டிகளை அவனுக்கு அளித்தான். துருமளன், பெற்ற நாய்க்குட்டிகளை வீட்டுக்கு எடுத்துச் சென்று பிரியமாய் வளர்த்தான். நாய்களை வளர்ப்பது சூத்திர ஆசாரம் என்று கருதிய பிராமணன் துருமளனை வீட்டை விட்டே துரத்திவிட்டான். இதிலிருந்து துருமளன் சூத்திரன் என்றே அழைக்கப்பட்டான். மாமன் வீட்டைத் துறந்த துருமளன் நாய்களுடன் சக்திராஜன் அரண்மனையை அடைந்து மன்னனின் அன்பைப் பெற்று அங்கேயே வாழ்ந்து வந்தான். ஒருநாள் பௌத்த மதத்தைச் சார்ந்த நேபாள நாட்டு மன்னன் சுதாகரன், சக்திராஜனைக் காண பரிட்டாண நகரம் வந்தான். மன்னனைக் கண்டான். பின் அவன் துருமளனிடம் வந்து, ' உனக்கும் சக்திராஜனுக்கும் இடையே உள்ள நட்பு ஆறு திங்களில் பகையாக மாறும். நான் நிமித்த நூல் வல்லவன். ஆகையால் இது பொய்க்காது. பகை வந்துற்ற போது என்னை நீ வந்து அடைவாயக' என்று கூறிச் சென்றான். இது நடந்து சிலதிங்களுக்குப் பின் துருமளனும் சக்திராஜனும் காட்டுக்கு வேட்டையாடப் போயினர். வேட்டையினிடையே இவர்கள் இருவரும் தனித்து விடப்பட்டனர். அப்போது சிங்கம் ஒன்று இவர்களை எதிர்த்தது. அதைச் சூத்திரன் அச்சமின்றி எதிர்த்து நின்று பாணம் ஒன்றால் கொன்றான். மன்னனைப் பெருமைப்படுத்த எண்ணிச் சூத்திரன், சிங்கத்தை மன்னன் கொன்றதாக வேட்டைக்காரரிடம் சொன்னான். அவர்கள் பெருமகிழ்ச்சியோடு ஊரில் மக்களிடையே அறிவித்தனர். மக்களும் மன்னனின் வீரத்தைப் பாராட்டி அவரைக் கோலாகலமாக வரவேற்க ஆயுத்தம் செய்தனர். அரசியும் மாவீரனாக வரும் தன் கணவனை வரவேற்கத் தன்னை அலங்கரித்துக்கொண்டு, தலையில் சூடிக்கொள்ள பூவை எதிர்பார்த்து நின்றாள். பூக்காரி காலந்தாழ்ந்து வந்தாள். வந்தவளை அரசி மிகவும் கடிந்து கொண்டாள். " ஊரார் ஒன்றுதிரண்டு வரவேற்கும் போது நான் அரண்மனை வாயிலில் சரியான நேரத்தில் மன்னனை வரவேற்க வேண்டாமா? நல்ல சமயத்தில் இவ்வாறு தாமதம் செய்கின்றாயே? இது உனக்குச் சரியா? " என்று கோபித்துக் கொண்டாள். இதைக் கேட்ட பூக்காரி ஏளனமாகச் சிரித்த வண்ணம் ' அரசியே! உண்மையில் சிங்கத்தைக் கொன்றது உன்கணவன் அல்ல. கொன்றவன் சூத்திரன் என்னும் துருமளன் ஆகும். மன்னன் மீதுள்ள மதிப்பின் காரணமாகத் துருமளன், வேட்டைக்காரரிடம் மன்னன் சிங்கத்தை கொன்றான் என்று உபசாரமாகச் சொன்னான். அதை நம்பி வேட்டைக்காரர் ஊராரிடம் சொல்ல, ஊர் மக்கள் வரவேற்பில் ஈடுபட்டுள்ளனர். அதைப் பார்த்துத் தாங்களும் உபசரிக்கப் பரபரக்கின்றீர்கள். இச்செய்தி உனக்கெப்படித் தெரியும் என்று கேட்கின்றீர்களா? சொல்கிறேன் கேளுங்கள். என் கணவன் பூக்கொய்யக் கானகம் சென்றிருந்தார். அப்போது கானகத்தில் சூத்திரன் சிங்கத்தை எதிர்த்து அம்பு தொடுத்து சிங்கத்தைக் கொன்றதைப் பார்த்தார். அதை அவர் எனக்குச் சொல்லக் கேட்டறிந்தேன். அதன் பிறகு அவர் கொணர்ந்த பூவை எடுத்துக்கொண்டு இங்கு வருகிறேன். இதனால் தான் நான் தங்களுக்கு பூக்கொண்டு வருவதற்குத் தாமதம் ஆயிற்று என்றாள். சிங்கத்தைக் கொன்றது மன்னன் அல்ல என்பதை அறிந்த அரசி வரவேற்கும் எண்ணத்தைக் கைவிட்டு அந்தப்புரத்திலேயே இருந்து விட்டாள். மன்னனை ஊர்மக்கள் கோலாகலமாக வரவேற்றனர். மகிழ்ச்சியோடு வரவேற்பை ஏற்றுக்கொண்ட மன்னன் அரண்மனையை அடைந்தான். அரண்மனை வாயிலில் தாதிகள் ஆரத்தி எடுக்க மந்திரி பிரதானிகள் முதலியோர் வரவேற்றனர். வரவேற்புக் கூட்டத்தில் அரசியைக் காணாது மன்னன் விரைந்து அரண்மனைக்குள் போனான். அரசியைக் கண்டான். வரவேற்பில் நீ ஏன் கலந்து கொள்ளவில்லை' என்று அரசியைக் கேட்டான். அதற்கு அரசி ' சிங்கத்தைக் கொன்ற சூத்திரன் அன்றோ பாராட்டுக்குரியவன்! தாங்கள் அல்லவே? போலி ஆரவாரம் எதற்கு? ' என்றாள். இதைக்கேட்ட மன்னன் துணுக்குற்று உள்ளத்துள்ளே சினம் பொங்க அவ்விடத்தை விட்டு அகன்றான். சூத்திரன் சிங்கத்தைக் கொன்ற செய்தி சூத்திரனும் மன்னனும் மட்டும் அறிந்த செய்தியாகும். இதை வேறெவரும் அறியார். அப்படியிருக்க, அந்தப்புரத்திலிருந்த அரசி இச்செய்தியை எப்படி அறிந்தாள்? என்று மன்னன் சிந்தித்தான். சூத்திரனுக்கும் அரசிக்கும் இரகசியத் தொடர்பு ஏதேனும் இருக்குமோ? என்று ஐயுற்றான். உள்ளக் கொதிப்போடு இரவைக் கழித்தான். விடிந்ததும் மன்னன் சூத்திரனை வரவழைத்து ' நீ என் நண்பனல்ல, ஊரைவிட்டப் போய்விடு' என்று உத்திரவு இட்டான். மன்னன் சினத்துக்குக் காரணமறியாமல் சூத்திரன் திகைத்தான். என்றாலும் மன்னன் உத்தரவு ஆதலால் மாறுபேசாமல் உடனே அவ்விடத்தை விட்டு அகன்றான். இப்போது, நேபாள மன்னன், முன்னாள் சொன்ன வார்த்தைகள் அவன் நினைவுக்கு வந்தன. நேராக நேபாள நாட்டின் தலைநகரான ஜெயந்தி நகருக்குப் போனான். மன்னன் சுதாகரன் முன் போய் நின்றான். சுதாகரமன்னனும் மகிழ்ச்சியோடு சூத்திரனை வரவேற்று தன்னுடன் வைத்துக் கொண்டான். குற்றமற்ற தன்னைக் காரணமின்றி நாடு கடத்திய சக்திராஜனைப் பழிவாங்கச் சூத்திரன் எண்ணினான். சுதாகரமன்னனைச் சக்திராஜன் மீது படையெடுக்கும்படி செய்தான். பெரும்படைகளோடு சுதாகரன் துருமளனுடன் சக்திராஜனின் நாட்டை அடைந்து தலை நகரை முற்றுகையிட்டான். இதை அறிந்த சக்திராஜன் சூத்திரனது வீரத்தை எண்ணி தேவாங்க மரபில் வந்த ஆமோத நகர மன்னன் காலசேன மன்னனைத் தனக்கு உதவியாகக் கொள்ள அவனுக்கு அழைப்பை விடுத்தான். காலசேன மன்னனும் அழைப்பை ஏற்றுத் தன் மக்களுடன் நால்வகைப் படைகளோடு பரிட்டாண நகருக்கு வந்தான். இதை அறிந்த சுதாகரன் சூத்திரனுடன் ஆலோசித்து, மேலும் தன் படைபலத்தைப் பெருக்கிக் கொள்வான் வேண்டி சாஹ்யபர்வதத்திலுள்ள மகா மாயாவியும் பலசாலியுமான பஞ்சபுடன் என்னும் பௌத்தனைத் துணை சேர்த்துக் கொண்டான். போர் துவங்கியது. போர் கடுமையாக இருந்தது. போரில் சூத்திரனால் சக்திராஜனும் பஞ்சபுடனால் காலசேனனும் மாண்டனர். காலசேனன் மடியக் கண்ட அவன் மகன் ரூபசேனன் தன்தந்தையைக் கொன்ற பஞ்சபுடனை எதிர்த்துப் போரிட்டுப் போரில் அவனைக் கொன்று வஞ்சம் தீர்த்துக் கொண்டான். சூத்திரன், தன் பகைவனான சக்திராஜனைக் கொன்றதோடு திருப்தியுற்று நேபாள மன்னனை அழைத்துக்கொண்டு நேபாள நாட்டை அடைந்தான். போரில் வெற்றி கண்ட ரூபசேனன் சக்திராஜன் மகனை பரிட்டாண பட்டணத்துக்குத் தலைவனாக நியமித்து விட்டு நேபாள நாட்டின் மீது போருக்குப் போனான். அப்போது நேபாள மன்னன் போருக்கு வராததால் ரூபசேனன், நேபாள நாட்டைத் தனதாக்கிக் கொண்டு ஆட்சிபீடத்தில் தன் சகோதரன் ஒருவனை வைத்து விட்டு ஆமோத நகரம் திரும்பினான். ரூபசேனன் ஆட்சியில் சகரநாடு செழித்தது. அறம் வளர்ந்தது. மக்கள் குறைவின்றி வாழ்ந்தனர். நலம்.

தேவாங்கர் குலம் :

ரூபசேனனுக்குப் பின் தேவாங்க குலம் பெருகி நாடெங்கும் பரவி மக்களுக்கு ஆடைகளை நெய்து அளித்துச் செழித்து ஓங்கியது. தேவாங்க மக்கள் யாவரும் தங்கள் ஆசாரத்தை இழக்காமல் சீருடன் வாழவேண்டும் என்னும் கருத்தால் ஏகோராமன் என்னும் விருபாட்சன் சமூகக்கட்டுப்பாடுகளையும் ஒழுக்கநியதிகளையும் வகுத்தான். சமூகக்கட்டுப்பாட்டுக்காக சிம்மாசனபதிகளையும், ஆசார சீலம், தெய்வவழிபாடு முதலியன ஒழுங்காக நடைப்பெறப் பீடாதிபதிகளையும் நியமித்தான். இவ்வாறு அமைத்த அமைப்புக்களில் இப்போது இருப்பவை சிம்மாசனங்கள் 4 பீடங்கள் 5 ஆம். இந்த அமைப்புகளின் வழி, விருபாட்சன் வகுத்த நெறிமுறைகளைத் தேவாங்கக்குலமக்கள் இன்றும் பின்பற்றி நடந்துவருகின்றனர். இனி, தேவாங்கக் குலமக்கள் இன்று தெலுங்கு கன்னடம் மராட்டி முதலிய பழமொழிகள் பேசுகின்றவர்களாய் நாடு முழுவதும் பரவி உள்ளனர். நாட்டின் சார்பால் வேறு வேறு மொழி பேசினாலும் இவர்களுக்குள் தொழில், குலஆசாரம், சமயஆசாரம் ஒன்றாகவே உள்ளன. இந்த ஒருமைப்பாட்டுக்கு காரணமாயிருப்பது இவர்கள் வழிபடும் குலதெய்வம் சவுடாம்பிகையாகவே இருப்பதாலாகும். தேவல முனிவர் சிவபெருமானின் இதயத்திலிருந்து தோன்றியதால், தேவ+அங்கம் தேவாங்கம் என்று பெயர். அவர்வழி வந்த குலமக்களுக்கு ஏற்பட்டது. தேவர்களுக்கு ஆடைகளை அளித்து அங்கங்களை அழகு படுத்தியதாலும் இப்பெயர் வந்தது என்றும் கொள்வர். இவர்கள் யாவரும் பூணூல் அணியும் வழக்கம் உடையவர்கள். சில சிவாச்சாரிய குடும்பங்களில் மட்டும் ஆண்கள் சிவலிங்கம் கட்டிக்கொள்கின்றனர். தேவாங்கர்கள் பெரும்பாலும் சைவர்களே.

குல தேவதை :

ஸ்ரீ சவுடாம்பிகை அம்மன் தேவாங்கர்களின் குல தெய்வம் ஆகும். தேவாங்க மக்கள் உள்ள எல்லா இடங்களிலும் அம்மனுக்குக்கோயில் இருக்கும். ஆந்திரம் கர்நாடகம், மகாராஷ்டிரம், கேரளம், கலிங்கம், வங்கம் முதலான நாடுகளில் கோயில்கள் உள்ளன. இங்கெல்லாம் அம்மன் சௌடாம்பகை என்றே அழைக்கப்படுகின்றார். ஆனால் மகாராஷ்டிரத்தில் மட்டும் 'வனசங்கரி' என்ற பெயரில் அம்மை கோயில் கொண்டுள்ளார். அங்கு அம்மனுக்கு ' சாகம்பரி ' என்ற மற்றொரு பெயரும் உண்டு. இகோயில் பாதாமிக்கு அருகில் இருக்கின்றது. இதைச்சுற்றி தேவாங்கர்கள் வசிக்கின்றார்கள். இனிக் கல்வெட்டுச் சாசனங்களோடு கூடிய பழங்கோயில்களும் பல ஊர்களில் உள்ளன. இராயலசீமை கதிரி தாலூக்காவில் லேபாட்சி போகும் வழியில் சோளசமுத்திரம் என்னும் ஊரில் சௌடேஸ்வரியம்மன், வீற்றிருக்கும் கோலத்தில் பெரிய வடிவில் உள்ளார். அனந்தப்பூர் ஜில்லா குத்தி தாலூக்கா உபர்சலா கிராமத்தில் ஓர் கோயில் உள்ளது. கர்னூல் நந்தியால் தாலூக்கா ஆத்மகூரில் ஒரு கோயிலும் நந்தவரத்தில் ஒரு கோயிலும், மதனபள்ளி சனபாளையத்தில் ஒரு கோயிலும் உள்ளது. நந்தவரம் கோயிலில் உள்ள அம்மனின் திருவுருவம் காசியிலிருந்து கொண்டுவரப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டதாகும். இந்த தேவியின் பெயரால்தான் தண்டகங்கள் கூறப்படுகின்றன. ' நந்த வரமந்து நிலகொன்ன நைகதாம்பா ' என்ற தண்டகம் அம்மையைப் புகழ்கின்றது. தஞ்சையில் பாபநாசம் தாலூக்கா கபிஸ்தலத்தில் தேவாங்கர் மடம் ஒன்று இருக்கின்றது. இதில் உள்ள கல்வெட்டின்படி 400 ஆண்டுகளுக்கு முன்னமேயே தேவாங்கர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து குடியேறினர் என்பதாக அறிகிறோம்.

குலம் :

தேவாங்கர்களுக்குள் குல விஷயங்கள் நடத்துவதற்காகப் பரம்பரையாகச் சிலருக்குச் சில உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இவை 1. பட்டக்காரன் 2. நாட்டுஎஜமானன் 3. செட்டிமைக்காரன் 4. எஜமானன் 5. குடிகள் என்பனவாகும். இம்முறைப்படியே தாம்பூலம் மரியாதைகள் நடைபெறுகின்றன. திருமணம் ஈமச்சடங்குகள் மற்றுமுள்ள நலம் பொலம்காரியங்களை நடத்தச் சமூகத்திலேயே புரோகிதர்களும் கூட்டங்களில் தாம்பூலம் முதலியன வழங்கச் சேசராஜூ என்பவர்களும் உள்ளனர். முன்னைய நாட்களில் கோயிற் பணிகள் செய்யச் சில பெண்களும் கோயிலுக்கு விடப்பட்டனர். அவர்கள் மாணிக்கம் பங்காரு என்று அழைக்கப்பட்டனர். அப்பழக்கம் இப்போது இல்லை. இனிக் குலமக்கள் கோத்திரங்களாகப் பிரிந்துள்ளனர். ஒத்த கோத்திரங்களில் திருமண சம்பந்தம் செய்வதில்லை. வீட்டுப் பெயர்களும் தனித்தனியாக உள்ளன. கோத்திரங்களுக்கு மூலபுருடன் ஒரு ரிஷியாக இருப்பார்.

சிம்மாசனங்கள் குருபீடங்கள் :தேவாங்கக்குலத்தில் சமயத்துறைக்கும் சில அமைப்புக்கள் உள்ளன. அவை சிம்மாசனங்கள் குருபீடங்கள் மடங்கள் முதலியனவாகும்.

சிம்மாசனாபதிகள் பட்டங்கள் செட்டிமைகள் வழங்குவார்கள்.

குருபீடங்கள் புரோகிதர்களை நியமிப்பார்கள். மடத்து குருக்கள் இளைஞர்களுக்குத் தீட்சை செய்து பூணூல் அணிவித்து உபதேசம் செய்வார்கள். இவ்வாறுள்ள அமைப்புக்களில் சிம்மாசனங்கள் நான்காகும்.

இவை

1. சகரை

2. முதுநூரு

3. பெனுகொண்டா

4. படவேடு

என்னும் ஊர்களில் உள்ளன.

சகரை காசிக்கு அருகிலும் முதுநூரு கோதாவரிக்கு அருகிலும், பெனுகொண்டா அனந்தப்பூர் வட்டத்திலும், படவேடு வடாற்காடு வட்டத்திலும் இருக்கின்றன. இப்போது இச்சிம்மாசனபீடங்கள் அழிந்து போயின.

குருபீடங்கள்

1. காசி

2. ஸ்ரீ சைலம்

3. ஹேமகூடம்

4. சோணசலம்

5. சம்புசைலம்

என்னும் ஐந்து இடங்களில் இருந்தன. இவையும் சிதைந்து போயின. இதன் உரிமையாளர்கள் பல ஊர்களுக்குப் போய்விட்டனர்.

காசிமடம் : உத்திரப்பிரதேசத்தில் இருந்தது. இதை நிறுவியவர் கௌசிக கோத்திரத்தைச் சேர்ந்த ரேவணாராத்யர் ஆவார். இம்மடம் இப்போது இல்லை.

ஸ்ரீசைலம்: ஸ்ரீசைலமடம் மல்லிகார்ச்சுன சுவாமி தேவஸ்தானத்துக்கு வடபால் உள்ளது. இம்மடத்தின் குருமார் மேற்கு கோதாவரி மேரி தாலூக்காவில் ஜக்கன்னா பேட்டையில் உள்ளனர். தேவாங்க மக்கள் சிவராத்திரியின் போது மல்லிகார்ச்சுன சுவாமி கோயிலில் கோபுரங்களுக்கு ஆடையை இணைத்துக் கொடி கட்டுகின்றனர்.

ஹேமகூடம்: இது பல்லாரி ஹொசப்பேட்டைக்கு 7 கல் தொலைவிலுள்ள பம்பா நதிக்கரையில் விருபாட்சசுவாமி கோயிலுக்குத் தெற்கே இருக்கின்றது. இம்மடத்தின் ருகுசந்ததியார் ஹொசப்பேட்டையில் உள்ளனர்.

சோணாசலமடம்: இது முன் திருவண்ணாமலையில் இருந்தது. இப்போது படவேட்டில் இருக்கின்றது. இம்மடத்தைச் சார்ந்த குருவம்சத்தார் ஒண்ணுபுரத்தில் இருக்கின்றார்கள்.

சம்புசைலமடம்: இது கொள்ளேகாலத்துக்கு அருகில் உள்ள சம்புலிங்கன் பேட்டாவில் இருக்கின்றது. இதை நிறுவியவர் கஹனாராத்யர்.

படவேடு சிம்மாசனம் :

சோணாசலமடம் முன்னர் திருவண்ணாமலையில் இருந்தது. இப்போது இது படவேடு என்னும் ஊரில் இருக்கின்றது. இது கலியுகாதி 4609 பிரபவ ஆண்டில் பண்டிதாராத்ய சுவாமிகள் வழி வந்த ருத்ரமூர்த்தி சுவாமிகளால் நிறுவப்பட்டது. இப்பரம்பரையினர் இப்போது படவேட்டுக்குப் பக்கத்திலிருக்கும் ஒண்ணுபுரத்தில் வசிக்கின்றனர். இவர்கள் வரதந்து மகரிஷி கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்.பண்டிதாராத்யரின் தாயார் பொப்பாதேவி பெனுகொண்டா என்னும் நகரைச் சேர்ந்தவர். அங்கு நிகழ்ந்த போரின் காரணமாய் கருவுற்றிருந்த அந்த அம்மையார் அந்நகரை விடுப் படவேடு வந்தடைந்தார். உரியகாலத்தில் மகவை ஈன்றார். இக்குழந்தையே பண்டிதாராத்ய சுவாமிகள் ஆவார். இவர் வேதாகம சாத்திரங்களைக்கற்று குருநாதராய்த் திகழ்ந்தார். பலர்க்கும் பஞ்சாட்சர உபதேசமும் சிவதீட்சையும் அளித்து பெரும்புகழோடு இருந்தார். இவருடைய பெருமையை அறிந்த அந்நாட்டு மன்னர் வள்ளாள மகாராஜன் இவரை அடைந்து இவரிடம் லிங்கபூஜை செய்யும் விசேஷ தீட்சையும் உபதேசமும் பெற்றுக்கொண்டார் என்றால் இவர் பெருமையை நாம் சொல்லவும் வேண்டுமா?

இவரிடம் வாதுக்குவந்த சமயவாதிகள் பலர் வாதத்தில் தோற்றுச் சிவதீட்சை பெற்றுச் சைவராயினர்.

ஒருசமயம் சில மறையவர்கள் இவரிடம் வந்து ' தீட்சை அளிக்கும் பேறு உமக்கேது? ' என்று வாது செய்தனர். அப்போது சுவாமிகள், தேவலரின் மரபில் வந்த எமக்கன்றி மற்றையோர்க்கு இயல்பன்று என்றார். அதற்கு அம்மறையவர்கள் ' நாங்கள் பிரம்மாவின் முகத்திலிருந்து தோன்றியவர்கள். அதனால் நாங்கள் மற்ற வருணத்தாரினும் மேலானவர்கள். நாங்களே தீட்சையளிப்பதற்கும் உபதேசம் செய்வதற்கும் உரியவர்கள். மற்றவர்களுக்கு அத்தகுதி இல்லை; என்றனர். அதற்குச் சுவாமிகள் ' பிராம்மணவம்ச முனிவர்கள்' தவளை வயிற்றில், நரிவயிற்றில், வண்ணாத்தி செம்படவச்சி முதலியவர்களின் வயிற்றில் தோன்றியதாக வரலாறு இருக்கிறதே ஒழிய இவர்கள் எவரும் பிரம்மாவின் முகத்திலிருந்து தோன்றியதாக வரலாறு இருக்கவில்லையே! நாங்களோ, சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய தேவல முனிவரின் நேர்வழி வந்தவர்களாயுள்ளோம். அதனால் நாங்களே இயல்பான பிராம்மணர்களாவோம். எங்கள் மூதாதை தேவலமுனிவர்தான் முதல் முதல் பிராம்மணர்களுக்கும் மற்றவர்களுக்கும் மந்திரோபதேசத்தோடு பூணூலை அணிவித்தார். அவர் தமது 6 வது அவதாரத்திலும் எல்லாருக்கும் மந்திரோபதேசமும் சிவதீட்சையும் அளித்துள்ளார். இம்மேலான செயல் இப்பரம்பரையில் தொடர்ந்து வந்திருக்கிறது. இவர்கள் வழி வந்த நானும் செய்கிறேன். ஆகையால் உபதேசம் செய்வதற்கும் தீட்சையளிப்பதற்கும் தேவாங்கப் பிராம்மணர்களாகிய எங்களுக்கே இயல்பான உரிமை உண்டு. என்று கூறி அவர்களைத் தெருட்டினார். அவர்களும் தெளிவு பெற்று அவரை வணங்கி அவரிடம் பஞ்சாட்சர உபதேசமும் சிவ தீட்சையும் பெற்றுக் கொண்டனர்.

சுவாமிகளுக்குப் பின் அவருடைய பரம்பரையினர் குருபீடம் வகித்துச் சைவநெறியைப் போற்றி வந்தனர்.

அந்நாட்களில் செஞ்சி மன்னன் ஜெயசிங்கனுக்கும் ஆற்காடு நவாபிற்கும் போர் நடந்தது. அப்போர் திருவண்ணாமலையிலும் நிகழ்ந்தது. போர் வீரர்களின் அட்டூழியங்களுக்கு அஞ்சிப் பல்லாயிரம் தேவாங்க மக்கள் திருவண்ணாமலையை விட்டுப் படவேடுக்குக் குடிபெயர்ந்தனர். இங்கு குடியேறிய பண்டிதாராத்ய பரம்பரையினரில் ஒருவராகிய குரு ருத்ரமூர்த்தி சோணாசலமடத்தை நிறுவினார். இந்த பரம்பரை 3966 முதல் 5049 வரை 32 குருமார்களைக்கொண்டு தொடர்ந்து வருகின்றது. 32 வது பீடாதிபதி குரு சாம்பலிங்கமூர்த்தி சுவாமிகள் ஆவார்.

தேவாங்க புராணம் முற்றிற்று.

தேவாங்க குல தவகல்கள் © வெளியீடு மற்றும் உரிமை : சௌடேஸ்வரி தேவாங்க இளைஞர் நற்பணி மன்றம், புஞ்சை புளியம்பட்டி - 638459.