வரலாற்றுச் செப்பேடுகளும் கல்வெட்டுகளும்
இந்திய நாட்டில் தேவாங்கர்கள் நேபாளம் முதல் கன்னியாகுமரி வரை பரவியிருக்கிறார்கள். கடல் கடந்த நாடுகளிலும் வாழ்கிறார்கள். தமிழ்நாட்டில் தேவாங்கர்கள் எப்பொழுது குடியேறினார்கள் என்று சில கல்வெட்டுகள் நமக்கு தெறிவிக்கின்றன. மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் கீழ்க் கோபுரச் சுவரில் கி.பி.1579 - ம் ஆண்டுக் கல்வெட்டில், இராமநாதபுர மாவட்டத்தைச் சேர்ந்த தேவாங்கர்கள் மீது விதிக்கப் பட்டிருந்த வரி தள்ளுபடி செய்யப்பட்ட செய்தி காணப்படுகிறது.
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் என்னும் ஊரில் தேவாங்கர்கள் மடம் ஒன்று இருக்கிறது. அதில் விஜய நகர அரசன் அச்சுத தேவராயன் ஆட்சியில் கி.பி.1542 - ம் ஆண்டு சாரங்கதேவன் என்னும் பக்தன் தேவாங்கர்களுக்குச் சன்மானம் வழங்கிய செய்தி உள்ளது.
வல்லாள மன்னன் தேவாங்க குருவிற்குக் கொடுத்த செம்புப் பட்டயம்
நடுநாடு எனப்படும் திருவண்ணாமலைப் பகுதியை அரசாண்ட வல்லாள மன்னன் நம் தேவாங்க குருவிற்குத் தன் ஆட்சிக் காலத்தில் கொடுத்த செம்புப் பட்டயம்.
இப்பட்டயம் தெலுங்கு மொழியில் உள்ளது. மன்னனும் அவன் குடிமக்களும் நம் குருவிற்கு பாதகாணிக்கை முதலிய சகல மரியாதைகளையும் வழங்கிப் போற்றி வந்துள்ளனர் எனத் தெறிகின்றது. படவேடு ராய சிம்மாசனம் பண்டிதாராத்ய ஸ்வாமிகள் பாதார விந்தங்களுக்கு வழங்கிய பட்டயத்தின் கருத்து;
ஓம் ஸ்ரீ சாவித்ரியை நமஹ;
ஓம் ஸ்ரீ சரஸ்வதியை நமஹ;
ஓம் ஸ்ரீ சூடாம்பிகாயை நமஹ;
ஸ்ரீமத் ஸ்வஸ்தி சமஸ்த லோக விஸ்தார த்ரிபுவன வனுத விக்யாத த்ராய சத்கோடி தேவதா சுவர்க்க மத்ய பாதாள லோக காயத்ரி மந்த்ர உபதேச பஞ்சவர்ண வஸ்த்ர பஞ்ச சூஸ்த்ர, நிர்மாண கர்த்த சதுஸ் சஷ்டி கலா விலாச, சன்மத ஸ்தாபனாசாரிய, நந்தித் துவஜ, சிம்ஹத் துவஜ, குசுமா கோதண்ட பஞ்சவேத பாராயண.
ஓம்ஸ்ரீ மத் அகிலாண்டகோடி ப்ரம்மாண்ட நாயக ஸ்ரீ ராமலிங்க சூடேஸ்வரி வரப்பிரசாதக, பரசிவ பால சக்ஷ் க்ஷோத் பவ, ஆதிமத்யாந்த ரகித, சுயம்பு மனுர் தேவாங்க தேவப்ராம்மண ஸப்தாவதார படிவேடு ராய சிம்மாசன சோணாசல காயத்ரீ பீடாத்யக்ஷ்ய ஸ்ரீ மத் பரமஹம்ச பரிவ்ராஜ காட்சாரிய ஜகத்குரு பண்டிதாராத்ய சுவாமி சரணார விந்தங்களுக்கு வல்லாள பூபதி சோடச உபசார சாஷ்டாங்க தண்டங்கள் சமர்ப்பித்து தெரிவித்துக் கொள்வது.
இப்பிரபஞ்சத்தில் இருக்கும் சகலரும், பிரம்மச்சாரிகளாயின் மொகரி 1 1/4 லும், இல்லறத்தாராயின் மொகரி 2 1/2 வீதம் உங்களுக்குப் பாதகாணிக்கை சமர்ப்பித்து வருகின்றோம். இதுவே என்னுடைய கோரிக்கையாகும்.
வல்லாள பூபதி
வர்த்தமான க்ருத யுகாதி வருஷங்கள் 10,694 கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷம் 15- ம் திதி.
(மாமன்னர்களும் பதினாறுவகை உபசாரங்களுடன் நம் தேவாங்க குருவைப் போற்றி வணங்கி வந்தனர். அவர் திருவடிகளுக்குப் பாதகாணிக்கை செலுத்தினர். குடிமக்கள் அனைவரும் முறை வைத்து பாதகாணிக்கை செலுத்தி வந்துள்ளனர். அக்காலத்தில் நமது குருவும் நம் குலமும் வேதபாராயணம் செய்து வந்தனர். நந்திக் கொடியும், சிங்கக் கொடியும் நம் கொடிகளாகும். நம் குரு காயத்ரி மந்ரோபதேசம் செய்து வந்து இருக்கின்றார் என்பன போன்ற பல உயர்ந்த செய்திகள் இப்பட்டயத்தின் மூலம் வெளிப்படுகின்றது.)
ஒ. கோயில்பட்டிச் செப்பேடு
(தேவாங்கச் செட்டியார்கள் சமூகப் பட்டயம்)இடம்:
காமராசர் மாவட்டம் சாத்தூர் வட்டம் சங்கரலிங்கம் அருகில் உள்ள ஒ. கோயில்பட்டி பச்சிப்பிலி பட்டத்து பட்டக்காரர் திரு பெ. ரா. ம. நடராசன் செட்டியார் என்பவரிடம் இச்செப்பேடு உள்ளது. தொல்பொருள் அலுவலர் திரு சொ. சாந்தலிங்கம் இதனை அறிந்து படித்துக் 'கல்வெட்டு' காலாண்டிதழ் எண். 32 - இல் கட்டுரையாக வெளியிட்டுள்ளார். அவரிடமிருந்து செப்பேட்டின் படி பெறப்பட்டு இங்கு பதிக்கப்படுகிறது.
அமைப்பு:
26 செ.மீ. நீளமும் 22 செ.மீ. அகலமும் உள்ள இச்செப்பேட்டின் தலைப்பகுதி ஐந்து இதழ் வடிவ வளைவுகளைக் கொண்டுள்ளது. முன்பக்கம் 46 வரிகளும் பின்பக்கம் எட்டு வரிகளும் உள்ளன. எழுத்துக்கள் சீரற்றும் பிழைகளுடனும் உள்ளன. முன் பக்கம் சூரியன் சந்திரன் உருவங்கள் பொறிக்கப்பட்டுக் காணப்படுகின்றன.
காலம்:
சகாப்தம் 1513-க்கு நேர் கர ஆண்டு ஆடி மாதம் 10-ம் தேதி குறிக்கப்பட்டுள்ளது சக ஆண்டும் தமிழாண்டும் பொருந்தி வருகின்றன ஆனால் திருமலை நாயக்கர் ஆட்சிக் காலம் இவ்வாண்டில் வரவில்லை. சகம் 1573 என்றிருந்தால் பொருந்தி வருகின்றது. இப்படி எடுத்துக் கொண்டால் கி.பி. 1651 ஜூலை மாதமாக இதன் காலத்தைக் குறிக்கலாம்.
செய்தி:
முதனூறு, பெனுகொண்டா, படைவீடு, தாராபுரம் முதலிய இடங்களைத் தலைமையிடமாகக் கொண்ட செட்டி குலத்தினைச்சேர்ந்த மதுரை, திருமங்கலம் மற்றும் இன்றைய காமாராசர் மாவட்டத்தில் வெம்பக்கோட்டை, தாயநேரி உள்ளிட்ட 14 ஊர்களில் உள்ள இச்சாதியர்கள் கூடி, திம்மி செட்டி, காரமல்லி செட்டி ஆகிய இருவருக்கும் அளித்த சிறப்பினைக் குறிக்கிறது செப்பேடு.
திம்மிசெட்டியும் காரமல்லி செட்டியும் சேர்ந்து, சாதி வாரியாக வசூலித்தபொன் 7000, திருமணவரி மற்றும் பிற இனங்களில் வசூலித்த பொன் 5400. இவையனைத்தையும் கொண்டு மதுரைச் சொக்கநாதருக்குக் கட்டளை ஏற்படுத்தி அக்கோயிலில் கல்வெட்டு அளித்து நற்பணி புரிந்தமைக்காக, அவ்விருவர்க்கும் குற்ற சட்டம் நிர்வகிக்கும் உரிமையையும், கோயிலில் பஞ்சாட்சரம், பாக்கு, வெற்றிலை, சந்தானம் ஆகியவைமுதலில் பெரும் மரியாதையினையும் வழங்கியதை இச்செப்பேடு தெரிவிக்கறது. மேலும் இருபிரிவுகளாக இருந்த இச்செட்டியார்கள் இனி ஒரே குழுவாக இருக்க முடிவு செய்த செய்தியினையும் இச்செப்பேடு தெரிவிக்கறது.
பழனி தேவாங்கர் மடங்கள்
பழனியில் இரண்டு தேவாங்கர் மடங்கள் உள்ளன. ஒன்று ஊர்க்கோயில் என்னும் பெரியநாயகியம்மன் கோயிலை ஒட்டியுள்ள பழனியம்பதி, பழனாபுரிப்பட்டணம் என வழங்கிய பழைய பழனியிலும், மற்றொன்று அடிவாரப் பகுதியில் மேற்கு வீதியிலும் உள்ளது. பழைய பழனியில் உள்ள தேவாங்கர் மடம் உள்ளூர்க்காரர்கட்கும், மேலவீதி மடம் வெளியூர்க் கிராமத்தார்க்கும் உரியது. இச்செப்பேடு வெளியூர்க் கிராமத்தின் மடத்திற்கு உரியது.
அமேதுபட்டணம், சக்கரமுத்தூர், பெனுகொண்டா, படைவீடு, தாராபுரம், தர்மஸ்தலம் உள்ளிட்ட 24 தலங்களிலும், கொங்கு 24 மாநாட்டிலும், 56 தேசத்திலும் தலம், புறத்தலம், கட்டெமனை, கிராமம், பெரிய ஊர் ஆகியவற்றில் உள்ள பட்டக்காரர், பட்டாமணியம், செட்டிமார், குலஸ்தார், செட்டிமைக்காரர், பெரியதனக்காரர் கூடி எழுதிய செப்பேடு.
தேவாங்கச் செட்டியார்களின் வனிகத் தலங்கள் வீதி, திருவீதி, பெரியவீதி, செட்டிவீதி, நடுவீதி, மேட்டாங்காட்டு வீதி, புதுவீதி எனக் குறிக்கப்பட்டுள்ளன.
பழனியில் மடம் அமைக்க ஏற்பாடு செய்தவர் நல்லூருக்காநாடு உடமலைப்பேட்டை பெருமாள் செட்டியார் மகன் பூமாலை செட்டியார். 1000 குலம் 700 கோத்திரம் பொதுவாக மடம் அமைக்கப்பட்டது. அறையும், மடமும் கட்டப்பணம் உதவிய தேவாங்கச் செட்டியார்களின் ஊர்கள் மிகவும் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அவை திண்டிவனம், புவனகிரிப்பட்டணம், கடல், வில்வனூர், செஞ்சி, அனந்தபுரம், குன்னத்தூர், அனகாபுத்தூர், சென்னப்பட்டணம், நெல்லூர், கும்மிடிப்பூண்டி, சத்திவேடு, கடளி, சித்தம்பேட்டை, தாராபுரம், அமரகுந்தி, புதுக்கோட்டை, கரிமங்கலம், சேலம், கொழும்குண்டம், கழிமுகம், வாகறை, குறளுக்குண்டு, சமத்தூர், நெகமம், ஆச்சிப்பட்டி, தளி, ஓடமலைப்பேட்டை, மலையாண்டிப்பட்டணம், குள்ளக்காபாளையம், நல்லயப்பள்ளி, சித்தூர், கல்லச்சேரி, வலவாங்கி, கோயம்புத்தூர், துருகம், சுக்கரவாரப்பேட்டை, கணக்கம்பாளையம், சாவக்காட்டுப்பாளையம், தளவாய்பாளையம், சீனாபுரம், திருப்பூர், சேலம் செவ்வாய்ப்பேட்டை, கும்பகோணம், குகை, கடகம், இராசிபுரம், பவானி, குமாரபாளையம், காரிமங்கலம், தருமபுரி, பென்னாகரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, அண்டாளம், மேல்கோட்டை, மதுரை, முப்பதூர், ஐம்பதூர், தேவாரம், போடிநாயக்கனூர், கோம்பை, சிறுமலை, மேட்டுப்பட்டி, வாழவாடி ஆகிய பல ஊர்கள் குறிக்கப்பட்டுள்ளன.
கலியுகம் 4915 சுபகிருது ஆண்டு வைகாசி 5ஆம் நாள் திங்கட்கிழமை மடம் கட்டிய செய்தி ஓலையில் எழுதப்பட்டுள்ளது. நாளடைவில் ஓலை அழியும் நிலையில் இருந்ததால் அச்செய்தியை எல்லோரும் கூடிச் செப்பேட்டில் எழுதினர். பட்டயம் எழுதும்போது பழனியைச் சேர்ந்த பாளையக்காரர் கின்னோப நாயக்கர், சரவணக் குருக்கள், பழனியப்பநம்பியார், கண்டிப்பட்டர், தவராச பண்டிதர், பாணிபத்திர உடையார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செப்பேடு கலியுகம் 4986 தாரண ஆண்டு பங்குனி 18 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை எழுதப்பட்டது.
தேவாங்கர்கள் எல்லோரும் மக்கத்திற்கு ஒரு பணமும், திருமண வரியாக 5 பணமும் மடத்திற்குக் கொடுக்க ஒப்புக்கொண்டனர். குழந்தைப்பண்டாரம் மடத்துத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
பழனிமலை வேலாயுத சுவாமியார் திருவுலாவரும்போது தேவாங்கர் குலவிருத்திக்காகத் திருமஞ்சனக்குடம் நீர் ஆட்டப்பெற்றது. மலையடிவாரம் மேற்கு வீதியில் மயில்வாகனக் குறடும், தென்புறம் தண்ணீர்ப்பந்தலும் தருமமடமும் ஏற்படுத்தப்பட்டது. மேல்வீதி கீழ்க்சிறகு லட்சுமிநாராயணப்பெருமாள் சன்னதிமுன் மடம் அமைக்கப்பட்டது.
இச்செப்பேடு 11 ஏடுகளில் 22 பக்கம் எழுதப்பட்டுள்ளது. முதல் பக்கம் கைலாசநாதர், பெரியநாயகி, முருகர், வேல், மயில், விநாயகர் ஆகியோர் வரைகோட்டு ஓவியத்தில் வரையப்பட்டுள்ளனர்.
வரலாற்றுச் செப்பேடுகள் |
|
தேவாங்க குல தவகல்கள் |