Sowdambiga

துகிலி ஶ்ரீ இராமலிங்க சாமுண்டீஸ்வரி அம்மன்


அமைவிடம்:

கடல் கடந்து ஆளுமையை செலுத்தி,. பார்போற்றும் தன் சாம்ராஜ்யத்தை பிரம்மாண்டமாக நிறுவி,. வீரத்தமிழரின் முத்திரையை உலகவரலாற்றில் பதித்து,. அழியாத புகழ்கொண்ட மாட்சிமை தாங்கியமன்னன் இராஜராஜசோழனின் தலைநகரமாம் தஞ்சாவூர் மாவட்டதில், சோழமண்டலத்தின் கோயில்நகரம் எனப்புகழ்பெற்ற கும்பகோணம்(திருக்குடந்தை) வட்டாரத்தில், வந்தவர் மனதை குளிரவைக்கும் அழகிய இயற்கை எழில் கொஞ்சும் கிராமம்தான் "துகிலி". நவக்கிரகத்தலங்கலான சூரியனார் கோயிலில் இருந்து நான்கு கி.மீகள் தொலைவிலும், கஞ்சனூரிலிருந்து(சுக்கிரன் தலம்) ஒரு கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

துகிலியும் தேவாங்கர்களும்: துகில் என்ற சொல்லுக்கு ஆடை என்று பொருள். ஆடை நெய்யும் தொழிலை பிரதானமாக கொண்டு விளங்கும் ஊராதலால் இவ்வூர் துகிலி என்று வழங்கப்படுகின்றது. பலதரப்பினர் ஆடை நெய்யும் தொழிலில் ஈடுபட்ட போதிலும் நமது குலத்தைச்சேர்ந்தவர்களே பெரும்பாலாக உள்ளனர். தேவர்களுக்கே ஆடை நெய்து கொடுத்தவர்கள் அல்லவோ! நாம். 100ம் எண் புடவைகள், புட்டா புடவைகள், பட்டுப் புடவைகள் என இங்கு உற்பத்தியாகின்ற ரகங்கள் இவ்வூரின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. நவீன மயமாதல், வருமானம் குறைவு போன்ற காரணங்களால் வெவ்வேறு தொழிலுக்கு பலர் சென்றுவிட்டாலும்., உயர்ந்த ரக பட்டுபுடவைகள் உற்பத்தி நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளது.

நமது அன்னையின் வரலாறு:

அறுபதினாயிரம் தீர்த்தங்களை தன்னகத்தே கொண்ட 'தக்ஷிணகங்கை'யாம் காவிரியின் வடகரையில், துகிலியின் பிரதான மூர்த்தியான வேதபுரீஸ்வர் ஆலயத்தின் மேற்கு பகுதியிலும், கஞ்சனூர் அக்னீஸ்வரர் ஆலயத்தின் கிழக்கு திக்கிலும், திருலோக்கி சுந்தரேஸ்வரர் தலம் தெற்கிலும், துகிலியின் காவல் தெய்வமாம் அய்யனார் கோயில் வடக்கிலும் அமைய நடுநாயகியாக அன்னை சௌடேஸ்வரியானவள் ஶ்ரீ இராமலிங்க சாமுண்டீஸ்வரி என்ற திருநாமம் கொண்டு கொளுவீற்றிருக்கிறாள். ஆதியில் சிறிய விக்கிரகம் அமைத்து வழிபாடுகள் நடைபெற்று வந்துள்ளது. 150 ஆண்டுகள் முன் கருவறை மற்றும் கூரை கொட்டகை மட்டுமே இருந்த ஆலயத்தை 70களில் மண்டபம் அமைத்து குடமுழுக்கு நடத்தியுள்ளனர். மூலவர், உற்சவர் இருவரும் ஒரே அமைப்பைக் கொண்டுள்ளனர். வேதங்களால் வழிபடப்பட்ட வேதபுரீஸ்வரர் அருளாட்சி நடத்தும் எல்லையில் நம் அன்னை மூன்றடி உயரத்தில் கம்பீரமாக நின்று நம் குலத்தவரை காத்தருள்கிறாள். மேலிரு கரங்களில் சூலம் மற்றும் பாசம் ஏந்தியும், கீழிரு கரங்களில் கத்தி மற்றும் கபாலம்(கிண்ணம்) ஏந்தியும் நிற்கின்றாள் நம் தாய். மூலவர் அக்னி கேசம் பூண்டு்(தலையின் பின்புறம் தீ ஜுவாலை திகழ்வது) திகழ்கிறாள். உற்சவர் அவ்வாறன்றி பத்ம பீடத்தின் மீது நின்று அருள்கின்றாள். அரத்தமண்டபத்துள் ஶ்ரீ கணபதி மற்றும் ஶ்ரீசுப்ரமண்யர் அமர்ந்திருக்கின்றனர். மகா மண்டபத்தில் இராமலிங்கேஸ்வரரும், ஆதி சாமுண்டீஸ்வரியும் அருள்பாலிக்கின்றனர். இத்தனை அற்புதங்கள் கொண்ட துகிலி ஶ்ரீ இராமலிங்க சாமுண்டீஸ்வரி அன்னை பல ஆண்டுகளுக்குப்பினர் வருகின்ற 31/08/2018 அன்று குடமுழுக்கு காண இருக்கிறாள். கஞ்சனூர் பெரியகோயில் தலைமை குருக்கள் சிவஶ்ரீ சுப்ரமணிய சிவாச்சாரியர் அவர்கள் குடமுழுக்கை நடத்தித்தருகிறார் என்பது மேலும் சிறப்பு சேர்க்கின்றது.

குடமுழுக்கு அழைப்பிதழ்நன்றி:
திரு. சந்தோஷ் ஸ்ரீனிவாசன் அவர்கள்.
தொலைபேசி எண் :97892 75851

தேவாங்க குல தவகல்கள் © வெளியீடு மற்றும் உரிமை : சௌடேஸ்வரி தேவாங்க இளைஞர் நற்பணி மன்றம், புன்செய்ப் புளியம்பட்டி - 638459.