Sowdambigaஆந்திரப் பிரதேச சௌடேஸ்வரி ஆலய வரலாறு

சாந்திப்பிரியா

Sowdambiga

' நந்த வரமந்து நிலகொன்ன நைகதாம்பா ' என்ற எண்ணற்ற தண்டகங்களில் நாம் கூறக் கேட்டிருப்போம். இத்தண்டக வரிகளானது கீழ்க்காணும் புராணத்திலிருந்து அமையப்பட்டுள்ளது.

நந்தாவரம் என்பது ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கர்னூல் மானிலத்தில் உள்ள ஒரு சிறிய தாலுக்கா. அங்குள்ள சௌடேஸ்வரி ஆலயத்து தேவி அந்த இடத்துக்கு வாரணாசியில் இருந்து ஒரே இரவில் வந்ததாக புராணக் கதை உள்ளது. அது என்ன?

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நந்தாவனத்தை தலைநகராகக் கொண்டு நந்தராஜு என்பவர் ஆண்டு வந்தார். அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் முன் அவருடைய தந்தை வுட்டுங்க பூஜுடு என்பவற்றின் கனவில் தேவி தோன்றி வர உள்ள காலத்தில் அவர் மகன் தத்தாத்ரேயருடைய அருளைப் பெற்று ஆட்சி அமைப்பார் எனக் கூறி இருந்தாராம். அது போலவே நடந்தது. மன்னனுக்கு வயதாகியதும் அவர் தன மகன் நந்தராஜுவிடம் அட்சிப் பொறுப்பை தந்தார். நந்தராஜுவும் ஆட்சியில் வந்ததும் அவர் பல ஆலயங்களுக்கும் சென்றவண்ணம் இருந்தார் . எப்போதும் தத்தாத்ரேயருடைய மந்திரத்தை முணுமுணுத்தபடியே இருப்பாராம். தன் நாட்டிலேயே தத்தாத்ரேயருடைய ஆலயம் எழுப்பி அவரை அங்கு வழிபாட்டு வந்தார். நந்தராஜுவுடைய பெற்றோர் அவர் ஆட்சியில் ஏறியதும் அவருக்கு திருமணம் செய்துவிட்டு வனவாசம் செய்ய கிளம்பி சென்று விட்டார்கள்.

நந்தராஜு தன்னுடைய மனைவியான சசிரேகா என்பவருடன் நந்தாவரத்தின் அருகில் ஆட்சி செய்தார். ஆட்சிக்கு வந்து ஆறு மாதம் ஆயிட்று. நந்தராஜு தினமும் காலை எழுந்து தத்தருக்கு பூஜை செய்வார். அவருக்கு மனதில் நெடு நாட்களாக ஒரு ஆசை இருந்தது. தினமும் நந்தாவரத்தில் இருந்து காலையில் எழுந்து காசிக்குச் சென்று அங்கு ஆண்டவரை வணங்கிவிட்டு மீண்டும் திரும்ப வண்டும். விமான வசதிகள் இல்லாத காலம் அது. ஆனாலும் அவர் தான் வாரனாசிக்குச் தினமும் சென்று காசி விஸ்வநாதரையும், அன்னபூர்நியையும் வணங்கிவிட்டு மாலையில் மீண்டும் தமது இருப்பிடத்துக்கு திரும்ப வேண்டும் என தத்தரை வேண்டியவண்ணமே இருந்தார். வந்தார். அது எப்படி சாத்தியம் ஆகும் எனத் தெரியவில்லை. ஆனால் கடவுளின் சித்தம் வேறு அல்லவா? தத்தர் அவருக்கு ஒரு நாள் கனவில் தோன்றி அவருக்கு மறுநாள் காலை பூஜை அறையில் ஒரு பாதுகை கிடைக்கும் எனவும் அதைப் போட்டுக் கொண்டால் நொடிப் பொழுதில் எந்த இடத்துக்கும் சென்று விட்டு மீண்டும் நொடிப் பொழுதில் திரும்பிவிட முடியும் என்றும் ஆனால் அதை ரகசியமாகவே வைத்துக் கொள்ள வேண்டும் என்றார். மறுநாள் முதல் நந்தராஜு விடியற்காலம் எழுந்து குளித்தப் பின் பூஜை செய்து முடிந்ததும் பாதுகையை மாடிக்கு எடுத்துச் சென்று அதை அணிந்து கொண்டு காசிக்கு வினாடிப் பொழுதில் செல்வார். ஆலய தரிசனம், தீர்த்தங்களில் குளியல் என அனைத்தையும் செய்தப் பின் மாலையில் வீடு திரும்புவார். ஒரு நாள் அவருடைய மனைவி அதைக் கண்டு பிடித்து விட அவர் வேறு வழி என்றி அவளுக்கும் அந்த ரகசியத்தைக் கூறி அவளையும் காசிக்கு அழைத்துப் போக வேண்டி இருந்தது. ஆனால் அங்குதான் வம்பு வந்தது. அவள் வீட்டு விலக்காகி இருந்ததினால் அங்கு சென்றவள் கங்கையில் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டது . மேலும் அவருடன் வீடு திரும்பினால் மீண்டும் இருவரும் குளிக்க வேண்டும். ஆலயம் சென்றுவிட்டு புனித நதியில் குளித்தபின் வீடு வந்து எப்படி மீண்டும் குளிப்பது? அது தெய்வ குற்றமாகி விடுமே என பயந்து அழுதாள். ஆகவே அவர் அங்கிருந்த பண்டிதர்களை என்ன செய்யலாம் என அது குறித்து ஆலோசனை கேட்க அவர்களும் தாங்கள் அந்த தீட்டிற்கு மாற்று பரிகாரம் செய்து தீட்டை விலக்குவதாகவும் அதற்கு மாறாக அவர் நாட்டுக்கு அவர்கள் எப்போது சென்றாலும் அவர்களை பாதுகாக்க வேண்டும் என சத்தியம் பெற்றுக் கொண்டு ஐநூறு பண்டிதர்கள் ஒன்று சேர்ந்து தோஷ நிவாரணப் பரிகாரம் செய்தபின் சசிரேகாவின் தீட்டு விலகியது. மன்னனும் அவர் மனைவியும் கங்கையில் குளித்துவிட்டு ஆலய தரிசனம் செய்தப் பின் வீடு திரும்பினார்கள்.

Sowdambiga


காலம் ஓடியது. மன்னன் பண்டிதர்களை மறந்து விட்டான். நாட்டில் அனைத்தும் நல்ல விதமாக நடந்து கொண்டு இருந்தன. அப்போது ஒரு காலகட்டத்தில் வாரணாசியில் பஞ்சம் வந்திட அந்த நாட்டு பண்டிதர்கள் மன்னன் நந்தராஜுவை தேடி நந்தாவனத்துக்கு வந்து அவரிடம் உதவி கேட்டனர். மன்னன் நடந்ததை மற்றவர்களுக்கு கூற முடியவில்லை. காரணம் ஆண்டவனுக்கு ரகசியம் காப்பதாக தந்திருந்த சத்தியம் அல்லவா. ஆகவே மன்னன் தனக்கு அப்படி எந்த வாக்குறுதியும் தான் கொடுத்ததாக நினைவு இல்லை என்றும் அப்படி கொடுத்ததற்கு யாராவது சாட்சி இருந்தால் அவர்களை அழைத்து வருமாறுக் கூறி அவர்களை திருப்பி அனுப்பினார். அவர்களோ அதற்கு சாட்சி சௌடேஸ்வரி தேவியே எனவும் அவளை அழைத்து வருவதாகவும் கூறிச் சென்றனர். அதே நேரத்தில் மன்னன் தனது மனதில் சௌடேஸ்வரி தேவியை தன்னை காத்தருளுமாறு வேண்டினான். அவள் வந்தால் அவளுக்கு நந்தாவனத்தில் ஆலயம் அமைப்பதாக மனதிலேயே சத்தியம் செய்தான்.

பண்டிதர்கள் காசிக்கு சென்று கடுமையான விரதம் இருந்து , சௌடேஸ்வரி தேவிக்கு யாகம் செய்து, பூஜைகள் செய்ய அவள் அவர்கள் முன்னால் தோன்றினாள். அவர்கள் நடந்ததை சௌடேஸ்வரி தேவியிடம் கூற அவளும் அவர்களை திரும்ப மன்னன் நந்தராஜுவிடம் செல்லுமாறும் தான் அவர்களை பின் தொடர்ந்து வருவதாகவும் கூறினாள். ஆனால் அவர்கள் திரும்பிப் பார்க்கக் கூடாது என்பது நிபந்தனை. அதைக் கேட்ட பண்டிதர்கள் நந்தாவனத்துக்கு விரைவாகச் சென்று மன்னனை சந்தித்தனர். மன்னனின் அரண்மனையில் நுழையும் முன் தேவி வந்து விட்டாளா என்பதைப் பார்க்க திரும்பினார்கள். ஆகவே அவர்களுடன் வந்து கொண்டு இருந்த சௌடேஸ்வரி தேவி அங்கேயே சிலையாகி நின்று விட்டாள். அந்த காட்சியை கண்ட அனைவரும் மெய் சிலிர்த்துப் போயினர். தான் சத்தியம் செய்தபடி நந்தராஜு அந்த சௌடேஸ்வரி தேவிக்கு நந்தாவனத்திலேயே ஆலயம் அமைக்க அதுவே இன்று நந்தாவன சௌடேஸ்வரி தேவி என்ற புகழ் பெற்ற ஆலயமாக உள்ளது.

Sowdambiga


முதலில் அந்த ஆலயத்து தேவியைப் பார்கவே முடியாத அளவு உக்கிரகமாக இருந்ததாம். ஆகவே அதைப் போலவே இன்னொரு சிலையை அப்படியே செய்து , முதலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கர்பக்கிரகத்தின் மீதே இன்னொரு கற்பகிரகம் கட்டி ஆலயத்தை மேலே எழுப்பினார்கள் என்பதாக கூறுகிறார்கள். அது மட்டும் அல்ல ஆலயம் நாலாயிரத்து நூறு (4100) ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கிறார்கள்.

( கட்டுரைக்கு மூல ஆதாரம் :- http://www.thogata.com என்ற இணையதளம். அதில் உள்ள செய்திகளை பயன்படுத்தி கட்டுரை எழுதிக் கொள்ள அனுமதி தந்திருக்கும் அவர்களுக்கு எமது நன்றி. )

தேவாங்க குல தவகல்கள் © வெளியீடு மற்றும் உரிமை : சௌடேஸ்வரி தேவாங்க இளைஞர் நற்பணி மன்றம், புன்செய்ப் புளியம்பட்டி - 638459.