Sowdambiga

தேவாங்கர்கள் கொண்டாட வேண்டிய முக்கிய பண்டிகைகள்ஆடி அமாவாசை (அ) ஸ்ரீ சௌடேஸ்வரி ஜெயந்தி :-

அமாவாசை என்பது ஹிந்து மக்கள் அனைவருக்கும் புனிதமானது. தேவாங்கர்க்கு, நமது குலதெய்வ, நமது குலமகள் மாயா ஆசிரமத்து அவதரித்த தினம். இரவைப் பகல் ஆக்கிய தினம். தேவலருக்கு இத்தினம் மறுபிறப்பெடுத்த தினம். இத்தினத்து ஸ்ரீ சௌடேஸ்வரி ஜெயந்தி கொண்டாடப் பெரும். மேலும் இது பிதுரர்கள் தினம்.

தேவல ஜெயந்தி (அ) சைத்ர சுத்த பஞ்சமி :-

திருக்கயிலை மலையில் சிவபிரானின் சத்யோஜாதம் என்ற திருமுகத்தின் நெற்றிக் கண்ணில் இருந்து தேவலர் அவதாரம் செய்த திருநாள் இது.

தெலுங்கு வருடப்பிறப்பான உகாதிப் பண்டிகையில் இருந்து ஐந்தாவது திதியில் கொண்டாடப் பெற வேண்டும். முதல் தேவாங்கர் தோன்றிய திருநாள் இது.

ருக் உபாகர்மா (அ) பூணூல் பண்டிகை (அ) ஜனிவார அப்ப :-

சிராவண மாதம் (சாந்திரமான மாதம்) பௌர்ணமி திதியில் திருவோண நட்சத்திரம் கூடிய திருநாள் அன்று காலை நல்ல நேரம் பார்த்துப் பூணூல் அணியும் திருநாள். சில நேரங்களில் மாதம் திதி நட்சத்திரம் மூன்றும் கூடிவரும். சில காலத்து பௌர்ணமி சற்று தள்ளி வரும். நமக்கு நட்சத்திரம் பிரதானம்.

பிதுர்த்தர்ப்பணம் :-

முன்னோர்க்குச் செய்யும் வழிபாடுகள். பிதுர் தேவதைகளைத் திருப்தி செய்தல், அமாவாசை தோறும் செய்தல் வேண்டும். அமாவாசைத் தர்ப்பணம்.

இதை ஆண்டுதோறும் திதியை நினைவிற்கொண்டு அத்திதியில் சேலை வேட்டி வைத்து படையல் இட்டுப் பிண்ட தர்ப்பணம் செய்து முன்னோர்களை வணங்குதல்.

நவராத்ரி விழா ;-

ஸ்ரீ சௌடேஸ்வரியை கொலு வைத்துக் கொண்டாடுதல். பத்தாம் நாள் தேவியின் வெற்றியை விஜயதசமியாகக் கொண்டாடுதல்.

மஹா சிவராத்திரி :-

நமக்குச் சிவராத்ரி விழா இன்றியமையாதது. அவதார மூர்த்தியுடன் சிவராத்ரி சம்பந்தப்பட்டது. தேவதாசமைய்யன் ஸ்ரீ சைலத்தில் சிவராத்ரி அன்று கொடி ஏற்றினார். கொடித்துணியின் அழகு வேலைப்பாட்டில் ஈடுபட்ட அவருக்கு சிவபிரான் காட்சி தந்தார் என்று வரலாறுகளை காணலாம். இரவு முழுக்க நான்கு ஜாமமும் நால்வேத மந்திரங்களினால் சிவபிரானை வழிபடல் வேண்டும்.

ரத சப்தமி :-

சூரிய தேவன் தேவாங்க குலத்தின் முதல் சம்பந்தி. இத்தேவனின் தங்கை தேவதத்தைதான் தேவாங்க குலத்தின் ஆதி தாய். தேவலர் எடுக்கும் அவதாரங்கள் தோறும் அவருக்குப் பத்னியாய் அவதரித்த மாதா, தேவதத்தை, இப்பெருமாட்டியைத் தேவலருக்கு மணமுடித்துத் தந்தவன் சூரியதேவன். சூரியன் அவதரித்த நாள் ரதசப்தமி.

நாக பஞ்சமி ;-

ஆதிசேஷனின் மகள் தேவலருக்கு இரண்டாம் மனைவி. நாகவழிபாடு நம்மிடையே தொன்று தொட்டு வருவது ஒன்று. நம்மவர்கள் இன்றும் நாகராஜன், நாகதேவி என்று பெயர் வைத்துக் கொள்கின்றனர். மநு மகரிஷி கோத்ரத்தில் இப்பழக்கம் அதிகம்.

வைகுண்ட ஏகாதஸி :-

தேவாங்கரில் வைணவ சமய நெறி தேவலர் கால முதற்கொண்டே வருகின்றது. தேவலர் சிவனிடம் இருந்து தோன்றியவர். தேவலர் புகழ் பெற்றது ஆடையும் பூணூலும் தந்ததால். அதற்கு தாமரைத் தண்டின் நூல் தந்தவர் ஸ்ரீமகாவிஷ்ணு.

நம்மவர்கள் இந்த புனித விரதத்தை அதிகமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இன்னும் கிருஷ்ணஜெயந்தி, ஸ்ரீ ராமநவமி போன்றவைகளையும் வாழும் இடங்களுக்கு ஏற்ப கொண்டாடி வருகின்றனர்.

60 கூடி வணங்கல் ;-

தாயாதிகளுடன் ஒன்று கூடி தங்கள் குலதெய்வம் வீட்டு தெய்வம், இஷ்ட தெய்வம் இவற்றை வணங்கல். சிவ சம்பந்தமான தெய்வங்கள், அம்பாள் தொடர்பான தெய்வங்களுள் ஒன்றை தங்கள் மரபிற்கேற்ப வணங்கி வருகின்றனர்.

வேண்டுகோள் :

நம் குல தெய்வத்தை நம் குலமகள் ஆன ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரியை மனதுள் இருத்துவோம்.

அமாவாசை அன்று ஸ்ரீ சௌடேஸ்வரி௪, ஸ்ரீ காயத்ரி தியானத்தில் இருப்போம். அப்படி இருப்பின் அஷ்ட ஐஸ்வர்யமும் பெருகும் என்பது அன்னையின் திருவாக்கு.

தம்மை ஈன்று எடுத்த தாய் தந்தையரைப் பேணுவோம். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதை மறவாது இருப்போம்.

இப்பெருவிழாக்களை நமது ஆலயங்களில் சிறப்பாகக் கொண்டாடுவோம்.

தேவாங்க குல தவகல்கள் © வெளியீடு மற்றும் உரிமை : சௌடேஸ்வரி தேவாங்க இளைஞர் நற்பணி மன்றம், புன்செய்ப் புளியம்பட்டி - 638459.