Sowdambiga

அலகு சேவை - ஓர் பார்வை



அலகு சேவை


தாமரை நூல்களை அசுரர்களிடமிருந்து மீட்டு தந்த சவுடேஸ்வரி அம்மனுக்கு ஆலயம் அமைக்க தேவல முனிவர் என்னினார். தேவலமுனிவர் சவுடேஸ்வரி அம்மனிடம் வேண்டி ஆலயம் ஒன்று அமைக்கப் போவதாகவும் அந்த ஆலயத்தில் குடிகொண்டு தேவாங்க குல மக்களுக்கு அருள் புரிய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். சவுடேஸ்வரி அம்மனும் அதற்கு சம்மதித்துச் சென்றார்.



தேவமுனியும் அந்த ஊரில் இருக்கும் அம்மனுடைய பக்தர்கள் உதவியுடன் அழகான கோவில் ஒன்றைக் கட்டினார். அந்தக் கோவிலில் வந்து தங்கி அந்த ஊர் மக்களுக்கு அருள் புரிய வேண்டி சில பக்தர்களுடன் அந்த அம்மனை அழைக்கச் சென்றனர். அப்போது அந்த சவுடேஸ்வரி அம்மன் அவர்களிடம் அந்தக் கோவிலில் தான் வந்து குடியமர்ந்து கொள்ள ஒரு நிபந்தனையை விதித்தார்.



பக்தர்கள் அனைவரும் முன்னால் நடந்து செல்ல வேண்டும். அம்மன் அவர்களுக்குப் பின்னால் நடந்து வருவார். ஆனால் முன்னால் நடந்து செல்பவர்கள் பின்னால் திரும்பிப் பார்க்கக் கூடாது. அப்படி பின்னால் திரும்பிப் பார்த்தால் அம்மன் அந்த இடத்திலேயே தங்கி விடப் போவதாகவும் தெரிவித்தார். இந்த நிபந்தனைக்கு தேவமுனியும் மற்றவர்களும் சம்மதித்தனர். அவர்கள் முன்னால் நடக்கத் துவங்கினர். அம்மனும் அவர்களைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்.



அலகு சேவை


அம்மனின் காலில் கட்டியிருந்த கால் சலங்கையின் ஒலியைக் கேட்டபடி அவர்கள் முன்னால் நடந்து சென்று கொண்டிருந்தனர். வழியில் நீரோடை ஒன்று குறுக்கிட்டது. அனைவரும் முன்னால் சென்றனர். ஆனால் சலங்கை ஒலி நின்று போனது. தங்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த அம்மன் வரவில்லையே என்று அவர்கள் திரும்பிப் பார்த்தனர். இதையடுத்து அம்மன் அந்த இடத்திலேயே தங்கி விட்டார்.



இதனால் வருத்தமடைந்த பக்தர்கள் தங்கள் தவறுக்காக வருந்தி தங்கள் உடலைக் கத்தியால் ( அலகால் ) கீறிக் கொண்டனர். அவர்கள் உடலில் இரத்தம் சொட்டச் சொட்டத் தங்களை மன்னித்து தங்களது கோவிலுக்கு வந்து அமர்ந்து அருள் வழங்கவும் வேண்டிக் கொண்டனர். அவர்களது தீவிர வேண்டுதலில் மனமிரங்கிய அம்மன் அவர்கள் வேண்டுகோளை ஏற்று அவர்கள் கோவிலுக்கு வந்து குடியமர்ந்தார் என்று தேவாங்கர் குலத்தைச் சேர்ந்த பெரியவர்கள் கூறுகின்றனர்.



இவ்வாறு அலகு சேவையானது சௌடேஸ்வரி அம்மன் திருவிழாவில் ஓர் முக்கிய இடம் வகிக்கிறது. இப்படி அலகினால் உடலைக் கீறிக் கொள்ளும் பக்தர்கள் "சவுடம்மா வேசுக்கோ... தீசுக்கோ..." (சவுடம்மா வாங்கிக்கொள்... ஏற்றுக்கொள்...) என்று கன்னட மொழியில் பக்தியுடன் ரத்தம் வழிவதையும் பொருட்படுத்தாமல் முன்னே செல்கின்றனர். இதற்கு கத்தி போடுதல் என்று சொல்கிறார்கள். கத்தியால் கீறப்பட்ட காயங்களை குணப்படுத்த 11 வகை மூலிகைகளினால் ஆன திருமஞ்சனப்பொடி பயன்படுத்தப்படுகிறது. இந்தப்பொடி எப்படிப்பட்ட காயத்தையும் இரண்டு நாட்களில் சரியாக்கி விடும் என்கின்றனர்.



அலகு சேவை செய்யும் போது தண்டகம் என்னும் பாடல்களும் பாடப்படுகின்றன. இத்தண்டகம் ஆனது சௌடேஸ்வரி அன்னையின் புகழையும் தேவாங்க குலத்தின் மாண்புகளையும் கொண்டிருக்கும்.



தேவாங்க குல தவகல்கள்



 © வெளியீடு மற்றும் உரிமை : சௌடேஸ்வரி தேவாங்க இளைஞர் நற்பணி மன்றம், புன்செய்ப் புளியம்பட்டி - 638459.